நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி
நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல
வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
சுடுமண் சுதையாய் வடுவாய் மனதில்
வடிவம் கொள்ளும் அழியா துன்பம்
நிலையாய் நிற்பதைக் களையாய் எடுக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
வடியில் சிக்கிய துகளாய்த் துன்பம்
நொடியில் பிடிபடும் வழியொன் றுரைக்க
கடுந்தவ முனியாய் காத்துக் கிடக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
கார்முகில் போலே சூழ்ந்திடும் கவலை
கரைந்து ஒழுகிடும் கனமழை நீராய்
தடுப்பணை தாண்டித் தடையின்றி கடக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
நெடுவாசற் கதவும் தாழ்நீங்கியே கிடக்கு
உத்தர வின்றி உள்ளே வாராய்
உறங்கிக் கிடக்கும் உறுபிணி போக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
துடுப்பு மில்லாப் படகினைப் போலே
நடுக்கம் கொண்டே நடுகடலில் நானும்
கொடுக்கும் கரத்தினை எதிர்பார்த்து இருக்க
இடுக்கண் களைந்திட தமிழே வராய்!..
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353