இட்லி மாவு வடை செய்வது எப்படி?

இட்லி மாவு வடை உடனடியாக செய்யக் கூடிய இன்ஸ்டன்ட் வடை ஆகும்.

புளிக்காத இட்லி மாவு வடையின் சுவையை அதிகரிக்கச் செய்யும். புளிப்பு சுவையை விரும்புவர்கள் பழைய இட்லி மாவில்கூட இதனைச் செய்யலாம்.

இட்லி மாவு இல்லாதவர்கள் அரிசி மற்றும் பருப்பினை ஊற வைத்து மாவு தயார் செய்து இதனைச் செய்யலாம்.

இனி சுவையான இட்லி மாவு வடை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 1 கப் (300 மிலி அளவு)

அவல் – 1 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 15 எண்ணம்

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)

சீரகம் – 1 டீஸ்பூன்

மல்லி இலை – 1 கொத்து

கறிவேப்பிலை – 3 கீற்று

உப்பு – தேவையான அளவு

இட்லி மாவு வடை செய்முறை

அவலை மிக்ஸியில் சேர்த்து நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவினை எடுத்துக் கொண்டு, அதில் பொடித்த அவலைச் சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்.

பொடித்த அவலைச் சேர்த்ததும்
பொடித்த அவலைச் சேர்த்ததும்

அவல் நன்கு ஊறி இட்லி மாவினை வடை மாவு பதத்திற்கு கெட்டியாக்கி விடும்.

அம்மாவில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கொத்த மல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

சின்ன வெங்காயம் சேர்த்ததும்
சின்ன வெங்காயம் சேர்த்ததும்
பச்சை மிளகாய் சேர்த்ததும்
பச்சை மிளகாய் சேர்த்ததும்
சீரகம் சேர்த்ததும்
சீரகம் சேர்த்ததும்
கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்ததும்
கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்ததும்
சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

மாவினை வடை வடிவில் தட்டிப் பார்க்கவும்.

மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.

மாவு லூசாக இருந்தால் இன்னும் கொஞ்சம் அவலை பொடித்துச் சேர்த்து ஊற வைக்கவும்.

கையினை தண்ணீரில் நனைத்து விட்டு மாவினை எடுத்து வடையாகத் தட்டும் போது வடையின் வடிவம் சரியாக வர வேண்டும். அப்படி இருந்தால் சரியான பதத்தில் மாவு இருப்பதாக அர்த்தம்.

மாவு கெட்டியாக இருந்தால் வடை கடினமாக இருக்கும்.

மாவு லூசாக இருந்தால் அதிகளவு எண்ணெய் உறிஞ்சி விடும். ஆதலால் மாவினை சரியான பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.

எண்ணெய் சூடாகி அதன் மேற்பரப்பில் ஆவி வந்ததும் மாவின் சிறுபகுதியை எண்ணெயில் போடவும்.

மாவு உள்ளே மூழ்கி குமிழிகளுடன் உடனே மேலெழும்பி வரும். எண்ணெய் காய்ந்து வடைகளைப் போட இதுவே சரியான பதம்.

தற்போது கையினை தண்ணீர் நனைத்து விட்டு மாவினை வேண்டிய அளவு எடுத்து தட்டையாகவோ, உருண்டையாகவோ தட்டிப் போடவும்.

வடைகள் வேகும் போது
வடைகள் வேகும் போது

ஒவ்வொரு முறை மாவினை எடுக்கும் போதும் நன்கு காற்றுக் குமிழிகள் வரும்வரை மாவினை கையால் கலந்து எடுத்து வடை தட்டவும்.

இவ்வாறு செய்வதால் வடை நன்கு எழும்பி வருவதோடு மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

வடை ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு சிவக்கவும் எடுத்து எண்ணெயை நன்கு வடித்துக் கொள்ளவும். சுவையான இட்லி மாவு வடை தயார்.

இதனை தேங்காய் சட்னி, காரச்சட்னி, புதினா சட்னி ஆகியவை ஏதேனும் ஒன்றுடன் பரிமாறவும்.

பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் இதனைச் செய்து கொடுக்கலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் அவலுக்குப் பதிலாக அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்தும் வடை தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மிளகினைப் பொடித்து மாவில் கலந்து வடை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.