இணையம் அறிவோமா?

ஆதிமனிதன் ஒருசெய்தியை அருகில் இல்லாத இன்னொருவனுக்குக்  கூற நினைத்தால், பல்வேறு உடன்பாட்டு முயற்சிகளினால் குறிப்பிட்ட கால இடைவெளியினால் மட்டுமே கூற முடிந்தது. அதற்காக அவன் ஒளி, ஒலிகளை மற்றும் சமிக்கைகளைப் பயன்படுத்தினான்.

செய்தியைக்கூறப் பயன்படு பொருள்கள் பல இருந்தன. உதாரணமாக, “சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளேன். காப்பாற்றுங்கள்” என்பதைப் பிறருக்குத் தெரிவிக்கப் புகையை ஏற்படுத்தித் தெரிவிப்பது ஆதிகால முறையாக இருந்தது.

இது போல் எண்ணற்றச் செய்திப் பரிமாற்றச் செயல்கள் இருந்தன.

மொகலாய மன்னன் ஔரங்கசீப் தான் முதன்முதலில் அரசின் திட்டங்களை நடவடிக்கைகளை மக்கள் அதிகமாக நடமாடும் தெருக்களில் எழுதி போடுவதற்கு ஆவன செய்தான் என்பதையும் எண்ணிப் பார்க்கின்றோம்.

இப்படியாக, வரலாறு, கதைகள், சிந்தனைகள், நிகழ்வுகள் போன்றவை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டன.

 

இப்படி இருந்த நிலை மாறி, நொடிக்கு நொடி உலகின் எந்த மூலையிலும் நடந்த ஒரு செயல், அடுத்த நொடி உலகின் வேறு மூலைக்குச் செய்தியாக, செயலாக, சிந்தனையாகக் கூறப்படுகிறது என்றால், அறிவியலின் அதிசயத்தை என்ன சொல்வது?

எண்ணிப் பார்க்க முடியாத அசுர வளர்ச்சி செய்திப் பரிமாற்றத்தில்.

அந்த வகையில் காற்றின் ஊடாக நாம் நடத்துகின்ற மாயாஜால வித்தைகள்.

யாரும் எதிர்பார்க்காத மின்மாற்ற அலைகளின் வெளிப்பாடுகள்.

சொல்லவோ, எண்ணவோ, சிந்திக்கவோ முடியாத, விரிந்து பட்ட முயற்சி.

கண்ணுக்குத் தெரியாமல் காற்றலைகள் மூலம் கோடிக்கோடித் தகவல்களை, நிகழ்வுகளை, ஒலி, ஒளிகள் மூலம் நிகழ்படங்கள், நிகழ்வுக் காணொளிகள் என காணக் கிடைக்காதவை எவையும் இல்லை எனும் அளவிற்குக் கொண்டு வந்து கொட்டும் சுனையாக (நீரூற்று) இணையம் உள்ளது.

அவ்விதமான இணையங்கள் உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் சரித்திரத்தின் பக்கங்களாக மாற்றுகின்றன. உலகம் சுருங்கிப் போகுமளவு எங்கும் ஒளிவு மறைவு எதுவும் இல்லை என்பதாக உருமாறிப் போயிருக்கிறது.

அதைப்போல், காரியங்கள் துரிதகதியில் இயங்குகின்றன. கண்மூடித் கண் திறக்கும் காலத்திற்குள் தேடியவை உள்ளீடு செய்யப்பட்டு, உங்கள் கைகளில் தரப்படுகின்றன.

பல நூறு ஆசிரியர்கள் நம் தகப்பனார்களுக்கு அறிவை தந்தார்கள் என்றால், பல கோடி ஆசிரியர்கள் நமக்கு அறிவையும் ஆற்றலையும் சிந்தனை விரிவாக்கத்தையும் இணையமான ஆசிரியர்கள் தருவதாக இருக்கிறார்கள்.

மனிதன் தன் கட்டுக்கடங்காத மூளைச் செயல்பாட்டிற்குத் தீனிபோடும் உணவு ஆலையாக இணையம் வலம் வருவதை இன்று காண்கின்றோம்.

 

எவையும் எங்கிருந்தோ, எப்படியோ, எதனாலோ வரிசை வரிசையாய் வந்து அறிமுகம் சொல்லுகின்றன. தேவையானதை மட்டும் மனிதன் அறிகின்றான்; பிறவற்றை மறுக்கின்றான்.

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இணையம் காணக் கிடைப்பதால், இதில் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை வாழ்வில் காணாமலும் அறியாமலும் போய்விடலாம்.

எனவே, சிறந்த இணையப் பக்கங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இத்தொடர். இணையத்தின் தன்மையை வரிசைப் படுத்தியோ, முன்னிலைப் படுத்தியோ பட்டியலானது என்ற அறிவிப்பு அல்ல இத்தொடர்.

பார்த்தவற்றில், அறிந்தவற்றில் பயனடைந்தவற்றில் சிலதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதுவே இணையம் அறிவோமா தொடர்.

 

முதலில், நாம் காணயிருக்கும் தளம், நூலகங்களுக்கெல்லாம் பெரிய நூலகமாக விளங்கும் தளம்.

எங்கும் பயன்பாட்டில் இல்லாத உலக மொழிகளில் உள்ள அரிய நூல்கள், அறிவுச் சுரங்கமாக விளங்கும் உரைகள், காணொலிகள், இசைப்பதிவுகள், உலகத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர் பதிவுகள், சமயச் சொற்பொழிவுகள், ஆன்மீகத் தளங்கள், உலக மேதைகளின் படைப்புகள் என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

உலகப் பொக்கிஷமாக விளங்கும் அரிய மின்நூலகத் தளமிது.

www.archive.org

என்ற இத்தளத்தில் பல மொழி சார்ந்த இலக்கிய நூல்கள், ஆளுமைகள் குறித்தவைகள், இசை, மதம் சார்ந்தவை என பல்லாயிரம் பக்கங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நூல்கள் பெறுவதற்கு, https://archive.org/details/openreadingroom- என்ற பக்கத்தைச் சொடுக்குங்கள். பல ஆயிரம் சிறந்த தமிழ் இலக்கிய நூல்கள் உள்ளன.

தமிழ் சார்ந்த இசையும் நிறைந்து பாதுகாக்கப் பெறுகின்றன. இத்தளத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து, தங்களுக்குத் தேவையானதை பதிவிறக்கம் செய்தும், பதிவேற்றம் செய்தும் பயன்பெறலாம்.

 

இணையம் அறிவோமா?
இணையம் அறிவோமா?

 

இத்தளம் எத்தகையது என்பதை, இத்தள நிர்வாகிகள் விரிவாகக் கூறியிருக்கிறார்கள். அது என்னவென்றால்,

“ www.archive.org இணையக் காப்பகம் இலாப நோக்கற்றது. இது இணைய தளங்கள் மற்றும் பிற கலாச்சார கலைப் பொருட்களின் டிஜிட்டல் நூலகத்தை டிஜிட்டல் வடிவத்தில் உருவாக்கி வருகிறது.

ஒரு காகித நூலகத்தைப் போலவே, ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், அறிஞர்கள், அச்சு முடக்கப்பட்டவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச அணுகலை நாங்கள் வழங்குகிறோம்.

அனைத்து அறிவுக்கும் உலகளாவிய‌ அணுகலை வழங்குவதே எங்கள் நோக்கம்.

முக்கியமான வலைப்பக்கங்களை அடையாளம் காண எங்கள் காப்பகம் இத்திட்டத்தின் மூலம் 600க்கும் மேற்பட்ட‌ நூலகம் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.” என்பதாகும்.

பல்வேறு அறக்கட்டளைகளின் நிதி மூலமாக இத்தளம் சிறப்புடன் இயங்குகிறது.

 

www.archive.org தளத்தில் காணப்படுபவைகள்:

• 33,000 கோடி வலைப் பக்கங்கள்

• 2 கோடி புத்தகங்கள் மற்றும் நூல்கள்

• 45 லட்சம் ஒலிப் பதிவுகள் (1,80,000 நேரடி இசை நிகழ்ச்சிகள் உட்பட)

• 40 லட்சம் வீடியோக்கள் (16  லட்சம் தொலைக்காட்சி செய்தி திட்டங்கள் உட்பட)

• 30 லட்சம் படங்கள்

• 2,00,000 மென்பொருள் நிரல்கள்

இந்த தளம் 1996-ல் தொடங்கப்பட்டது. தொடங்கிய அந்த மாதத்தில் பார்வையாளர்கள் வெறும் 16 பேர்கள் தான். ஆனால் இன்று தினமும் 1,91,904 பேர் இத்தளத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த தளத்தைப் பார்வையிட www.archive.org ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

 

 

3 Replies to “இணையம் அறிவோமா?”

  1. ஒரு கோப்பையில் நிறைந்து வழியும் தேனீரை போல, நிரம்பி வழிகிறது இணையதள, வலைதள வழிகாட்டிகள்.

    உங்களின் முயற்சி காலத்தின் கட்டாயம்.

    தொடர் தொடர்ந்து வெற்றி பெற என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.