இதயக்கமலம்

இடது கையில் காபியுடன், வலது கையால் அன்றைய ஆங்கில தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார் பாலு.

நெய்வேலி நிறுவனத்தில் இஞ்சீனியராக பல ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்டு தற்போது சென்னை வாழ்க்கை.

செய்தித்தாளின் ஒரு பத்தி அவரை திடுக்கிடச் செய்தது.

சென்னையின் ஒரு பிரபல மருத்துவமனையான ‘ரவிச்சந்திரா’ ஆஸ்பத்திரியின் நோயாளித் தரவுகள் அனைத்தும் ‘ஹாக்’ செய்யப்பட்டு இணையத் திருட்டு மூலம் பொதுவெளியில் உலாவி வருவதான செய்தி.

முக்கியமாக உடல் உறுப்பு தானம் அளித்தவர், பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் வெளியானது, அவரை சற்றுக் கவலை கொள்ள வைத்தது.

ஐம்பத்து ஐந்து வயதான பாலுவின் மனைவி ருக்மணி ஒருநாள் சமையல் அறையில் முக்காலியின் மீது ஏறி நின்று மேலேயிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்று, எடுக்க முடியாமல் மயங்கி விழ, கோமா எனப்படும் நெடுந்துயிலில் ஆழ்ந்து ஒரு கட்டத்தில் முழு குடும்பத்தையும் மீளாத்துயரில் மூழ்கடித்து விட்டாள்.

அந்த பிரபல மருத்துவமனையில் இருந்த பெரும் டாக்டர்கள் பிரம்மப் பிரயத்தனம் பண்ணியும் பிரம்மா படைத்த உயிரை உளநிலை அதல பாதாளத்தில் இருந்து மீட்க முடியவில்லை.

“மிஸ்டர் பாலு! உங்கள் வொய்ஃப் அன்ஃபார்ச்சுனேட்லி இஸ் ப்ரெய்ன் டெட்” என்று தோல்வியை வருத்தத்துடன் ஒப்புக்கொண்டனர்.

“நீங்கள் உறுப்பு தானம் செய்ய விழைந்தால் உங்கள் மனைவியின் ஒருசில உறுப்புக்களை எடுத்து தேவைப்பட்டவர்க்கு அளிக்கலாம்! அதனால் உங்கள் மனைவி மற்றவர் உடலில் இன்னும் பல வருஷங்கள் வாழலாம்! யோசித்து சொல்லுங்கள், “டேக் யுவர் டைம்” என்று தலைமை டாக்டர் விடை பெற்றுக் கொண்டார்.

பாலு தீவிர சிந்தனையில் ஆழந்தார்.

முப்பது வருடங்கட்கு மேலாக வாழ்ந்த “நீ பாதி – நான் பாதி” மனைவியின் நினைவுகள் அவரை பின்னோக்கி இழுத்து சென்றன.

கல்யாணமான புதிதில் ருக்மணியை “உருக்குமணி” என்று கேலி செய்தது;

விசாலமான ரோடுகள் மற்றும் வீடுகளை சுற்றிலும் தோட்டங்கள் இருந்தாலும், கான்கிரீட் மைசூர் பாக்காக நிர்மாணிக்கப்பட்ட நெய்வேலி டௌன்ஷிப்பில் சைக்கிள் ஓட்டப் பழகும்போது, அப்போது பிரபல பாடலாக இருந்த “ஓரம்போ! ஓரம்போ! ருக்குமணி வண்டி வருது!” என்று அவளை கேலி செய்தது என்று பல நினைவுகள் வந்து சென்றன.

வானொலி மட்டுமே இருந்த அந்தக் காலங்களில் எப்படியோ அவள் ஏராளமான தமிழ் திரைப்பட பாடல்களை மனனம் செய்து கொண்டு அவைகளை மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டே வருவது ருக்மணியின் வழக்கம்.

பாடல் வரிகள் ஒன்று இரண்டில் சந்தேகம் இருந்தால், அந்தப் பாடல் எங்கு ஒலிபரப்பபட்டாலும் அங்கேயே ஸ்தம்பித்து நின்று, சந்தேகப்பாடல் வரிகள் பாடப்படும்போது அதை தீவிரமாக பற்றிக் கொண்டு மனப்பாடம் செய்து கொள்வது அவள் தனித்துவம்.

தான் படித்த ‘பி.ஏ.’ தமிழ் பட்டப்படிப்பு அவளுக்கு உறுதுணையாக இருந்தது இது போன்ற தமிழ்த் தருணங்களில்.

நூற்றுக்கணக்கான பாடல்கள் பிடித்திருந்தாலும் அவள் மனதை கொள்ளை கொண்ட பாடல் ‘இதயக்கமலம்’ திரைப்படத்தில் வரும் சுசீலாவின் ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல‘ பாடல்தான்.

பாலு பெண் பார்க்க சென்ற போது அவர் சம்பிரதாயமாகக் கேட்டுக் கொள்ள அப்போதைய ‘வரன்’ ருக்மணி அந்த பாடலை பாடியது அவர் காதில் விழுந்த ரவாகேசரி.

மகனையும் மகளையும் நன்கு வளர்த்து படிக்க வைத்து, மகனை இஞ்சீனியராக அமெரிக்காவுக்கு அனுப்பி, மகளை ஒரு அமெரிக்க இந்திய ஐ.டி. மனிதருக்கு திருமணம் செய்து கொடுத்து, ஒரு மத்திய தர வர்க்கத்தை சார்ந்த பெண்ணின் சராசரி வாழ்க்கையை வெற்றியுடன் முடித்து விட்டு, இப்போது மருத்துவமனை உள்நோயாளி உடையில், இனிமேல் கண் திறக்காத் துயிலில் ஆழ்ந்த வெண்ணிற ஆடை தேவதை.

பாலு ஒரு கட்டத்தில் டாக்டர்களிடம் கெஞ்சும் குரலில் மன்றாடினார்.

“எப்படியாவது அவள் கண் விழித்தால் போதும்; ஒரு ‘வீல் சேர்’ரிலாவது அவளை நான் வாழ்நாள் முழுக்க வைத்து அரவணைத்துக் கொள்வேன்”

ஆனால் அங்கு நிலவிய டாக்டர்களின் நெடிய கனத்த மவுனத்தில் அவர் தன் கையறு நிலைமையை புரிந்துகொண்டார்.

பாலு ஒரு முற்போக்குவாதி. இடதுசாரி. ஆசாரங்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர்.

இஞ்சீனியராக இருந்து கொண்டே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு, எழுபதுகளில் (அப்போதெல்லாம் ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் வாங்க “புக்கிங்” செய்துவிட்டு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்) நெய்வேலியில் சைக்கிளில் அங்குமிங்கும் அலைந்து கொண்டு, “தெர்மல் ஸ்டேஷன்” வாசலில் கேட் மீட்டிங், புதுக்குப்பம் ‘ரவுண்ட்டானா’வில் தொழிற்சங்க உரை, இரவு சென்ட்ரல் பஸ் ஸ்டண்ட் அருகே யூனியன் ஆபீஸில் மாலை ஏழு முதல் இரவு பத்து வரை சங்க நடவடிக்கைகள் என்று அசாதாரண வாழ்க்கை.

எதிரில் உள்ள அமராவதி டாக்கீஸில் அவர்தம் குடும்பம் உள்ளே அமர்ந்து ‘வினாயகனே, வினைதீர்ப்பவனே’ பாடலை கேட்க ஆரம்பித்து, ஸ்லீவ்லெஸ் ரவிக்கையில் மிக நீண்ட அழகிய கரங்கள் கொண்ட ‘விக்கோ வஜ்ரதந்தி’யின் வடக்கத்தி பெண் விளம்பரம்,

பீதியை கிளப்பும் ‘பேக் கிரவுண்ட்’ குரலில் ‘பீகாரில் வெள்ளம்’ என்ற மழைக்கோடுகள் ஒழுகும் ‘இந்தியன் நியூஸ் ரிவ்யு’வை கருப்பு வெள்ளையில் திரையில் பார்த்து கொண்டிருக்கும் போது, எதிரே யூனியன் ஆபீஸில் அதுவரை இருந்த பாலு சரியாக திரைப்படம் ஆரம்பிக்கும் போது,

பட தயாரிப்பாளர் அலங்கரிக்கப்பட்ட ஆண்டவர் படங்கட்கு பூக்களைத் தூவி வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் போது, கரெக்ட் ஆக தியேட்டர் உள்ளே நுழைந்து குடும்பத்தோடு சேர்ந்து கொள்வார்.

மனைவி ருக்மணியும் ஒரு பள்ளியில் தமிழ் டீச்சர்; அற்புதமான ஹவுஸ் வொய்ஃப்.

சமூக நீதி மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் கணவன் மனைவி இருவருமே பணி புரிந்தால்தான் வாழ்க்கையின் சராசரி கனவுகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்ற யதார்த்தத்தால் குடும்பத்தலைவி, டீச்சர், குழந்தைகள் பராமரிப்பு என்று எப்போதும் அரக்க பரக்க வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது “மைக்ரைன்” எனப்படும் ஒற்றை தலைவலியால் அவதிப்படுவாள்.

அதன் விஷ விஸ்வரூபத்தை அப்போது அவள் அறியாமல் பெண்களுக்கே உரித்தான ஒற்றைத் தலைவலி என்று ‘அமிர்தாஞ்சன்’ லேகியத்தில் அடைக்கலம் தேடிக்கொண்டு வந்தாள்.

நினைவலைகளிலிருந்து மீண்ட பாலு, அமெரிக்காவில் இருந்து ஆறாத் துயருடன் வந்திறங்கிய குழந்தைகளுடன் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

ஆயிரமாயிரம் உற்றார் உறவினர் தங்கள் ஆருயிர் உறவுகளுக்காக உடல் உறுப்புகள் வேண்டி நிற்கும் நிலை அறிந்த அவர், தன் குழந்தைகள் சம்மதத்துடன் அருமை மனைவியின் ஆருயிர் உறுப்புகளை தானம் அளிக்கும் தன் முடிவை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்தார்.

காலம் கடந்தது.

தமிழ்த்திரைப்பட பாடல் வரிகள்மீது காதல் கொண்ட மனைவியின் தாக்கத்தால் பாலுவிற்கும் ஒரு சில பாடல்கள் மீது காதல்.

குறிப்பாக அந்தக்கால ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் வாலி எழுதி சிவாஜி நடித்த

“நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து;
அடைபட்ட கடன் எதுவும் இல்லை ஆயிரம் இருந்து” என்ற டி.எம்.எஸ் பாடல்.

மனைவியின் புகழ் பாடும் கடைசி வரியான

எந்த கடனிலும் பெரிது நல்ல மனைவியின் சேவை!

அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை!

என்ற வரிகள் அவ்வப்போது தனிமை சோகத்தில் அவரை உலுக்கும்.

சம்சார வாழ்க்கையில் சண்டை சச்சரவு இல்லாத தாம்பத்தியம் ஏது?

ஒற்றைத் தலைவலியில் ருக்மணி தவித்துக் கொண்டிருக்கும் போது பாலுவிடம், “என்னை கல்யாணம் பண்ணி கொண்டதற்குப் பதிலாக பேசாமல் ரூர்க்கியில் இருக்கும் உங்க மாமா பெண் ராதாவுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாம்” என்பாள்.

மிலிட்டரியில் இருந்து ரூர்க்கியிலலேயே “ரிடையர்ட்” ஆன பாலுவின் தாய் மாமனின் ஒரே மகள் ராதா. காஷ்மீர் ஆப்பிள். நல்ல அழகி.கல்லூரியில் புரொஃபசர்.

ஒருமுறை மாமா குடும்பம் நெய்வேலியில் சில நாட்கள் தங்கியிருந்தபோது ராதாவின் அழகையும் அறிவையும் பார்த்து வியந்த ருக்மணி, அவர்கள் சென்ற பிறகு, ஒருநாள் யதேச்சையாக “ஏன் நீங்க மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலை?” என்று கேட்டாள்.

பாலு “நெருங்கிய சொந்தத்தில் கல்யாணம் பண்ணினால் அது பிற்காலத்தில் குழந்தைகளை பாதிக்கும்” என்று சொல்லி, ஒருசில உறவினர்களின் குழந்தைகளின் உடல் குறைபாடு உதாரணங்களையும் கூறி போதாக்குறைக்கு “consanguineous marriage” என்ற புது வார்த்தையையும் ருக்குவின் அறிவு அகராதியில் சேர்த்தார்.

வெளியே ஏதோ சப்தம் கேட்ட பாலு இன்றைய வாழ்க்கைக்கு திரும்பினார்.

பாலு நேற்றிரவுதான், ‘சீரிய தலைமுறை’ தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு கொண்டு உடல் உறுப்பு தானம் செய்த குடும்பங்களுக்கு அரசு உரிய அங்கீகாரம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சுதந்திர தின விழா அணிவகுப்பு போன்ற வைபவங்களில் அவர்கட்கு உரிய இட மரியாதை தரவேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டு,, தன் மனைவியின் தானத்தை பற்றி பேசாது தவிர்த்துவிட்டு வீடு திரும்பினால் இன்று காலை செய்தியில் ஆஸ்பத்திரி தரவுகள் வெட்ட வெளிச்சத்தில் இணையத்தில்.!

மனவலியுடன் வெளியே சென்று பால் வாங்கி கொண்டு வீடு திரும்பியபோது, அவர் வீட்டு போஸ்ட் பாக்ஸ்ஸில் ஒரு கல்யாண பத்திரிக்கை.

பத்திரிக்கையின் பின் பக்கத்தில் பி.பி.ராதாகிருஷ்ணன், 44, சிவில் லைன்ஸ், ரூர்க்கி என்று அட்ரஸ் இருந்தது.

மாமா பெண் ராதாவின் மகளுக்கு கல்யாணம்! இன்ப அதிர்ச்சி. எப்போதோ உறைந்துபோன உறவை மீட்டெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு என்றெண்ணி, அந்த திருமணத்திற்காக தனி ஒருவனாக ஒருநாள் ரூர்க்கி பயணப்பட்டார்.

ரூர்க்கியில் காலடி வைத்ததுமே ஏதோ ஒரு இனம் புரியா பரவசம் அவர் மனதில். ரொம்ப நாளைக்கு பிறகு.
அவரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு ராதாவே வந்திருந்தாள்.

முப்பது வருடங்கள் கழித்து ஒருவரை ஒருவர் பார்க்கும் போது, இருவருக்குமே ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பது சற்று சிரமமாக இருந்தது.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், ஏமாற்றங்கள் அவர்கள் உடலில் பல மாற்றங்களை வரைந்திருந்தன.

அகம் மகிழ்ந்து அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவரவர் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

ராதாவின் ஒரே பெண், கமலா அற்புதமான பாடகியாம்.

ஒருகச்சேரியில் உச்ச ஸ்தாயில் பாடும்போது மயங்கி விழுந்து, பல பரிசோதனைக்குப்பின் ஆஸ்பத்திரியில் பல நாள் கழித்து ஒருநாள் கண் விழித்தபோது அவள் இதயத்தில் மிகப்பெரிய கோளாறு என்பது தெரிந்து

முதலில் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து, பின்னாளில் ராதா கணவனின் அகால மரணத்தால் அவள் குடும்பம் மேலும் நிலைகுலைந்தது.

கரகரத்த குரலை சரி செய்து கொண்டு ராதா தொடர்ந்தாள்.

“ஹார்ட் எயில்மெண்ட்டை சரி செய்ய போகாத ஆஸ்பத்திரி இல்லை; பார்க்காத வைத்தியம் இல்லை; கடைசியில ‘ஹார்ட் டிரான்ஸ்பிளாண்ட்’ தான் ஒரே வழின்னு டாக்டர் சொல்லியாச்சு!

ஹார்ட்டுக்கு எங்கே போறது? பகவான் விட்ட வழின்னு குலதெய்வம் மாந்துரையான் மேலே பாரத்தை போட்டுட்டோம்.

நல்லவேளையா பகவான் கைவிடவில்லை. ஒருநாள் யாரோ ஒரு புண்ணியவானோட ‘ஹார்ட்’ மெட்ராஸ்ல இருந்து ‘ஏர் லிப்ட்’ ஆகி இங்க ரூர்க்கி ஆஸ்பத்திரிக்கு வந்து, சீனியாரிட்டி பேசிஸ்ல சாகக் கிடந்த கமலாவுக்கு டிரான்ஸ்பிளாண்ட் பண்ணினா.

அவ ஒடம்பு அந்த ஹார்ட்டை ஒத்தக்கணுமென்னு எங்களுக்கெல்லாம் ஒரே டென்ஷன்; டாக்டர்சும் ‘நாங்க சக்சஸ்ஃபுல்லா டிரான்ஸ்பிளாண்ட் ண்ணி விட்டோம் ; ரெஸ்ட் இஸ் இன் காட்’ஸ் ஹாண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு போய்ட்டா”

உணர்ச்சி வெள்ளம் வடிந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு ராதா தொடர்ந்தாள்.

“நல்லவேளையா இப்ப ஒரு வருஷமா எந்த பிரச்சனையும் இல்ல; கமலா மறுபடியும் கச்சேரி பாட ஆரம்பிச்சுட்டா.

என்ன ஆனாலும் சரின்னு, அவளுக்கு ஒரு வரன் பார்த்தேன்; மாப்பிள்ளை நம்ம திருவனந்தபுரம் ராஜாமணி ஐயர் பையன்தான்!

தூரத்து சொந்தம்னாலும் மாப்பிள்ளை ஆத்தில் எல்லாத்தையும் மறைக்காம சொல்லிட்டேன்; மாப்பிள்ளை ‘டி.எம் ஸி.’யில் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்!

அவரும் பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்லி, கமலா கேஸ் ஹிஸ்டரி எல்லாம் பாத்துட்டு ‘பயப்படறத்துக்கு ஒன்னுமில்லே. மோர் ஓவர், நான் டாக்டர் ஆகரத்துக்கு, கமலாவோட தாத்தா ஏகப்பட்ட உதவி பண்ணியிருக்கார்! எங்கப்பா வேற உங்களுக்கு வாக்கு கொடுத்திட்டா; ஸோ, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டார்;” என்று ராதா மூச்சு வாங்கினாள்.

மனித நேயம் எங்குமே இன்னும் மரிக்கவில்லை என்று பாலு நினைத்துக் கொண்டார்.

அன்யோன்யமான தோரணையுடன் ராதா மேலும் பேச ஆரம்பித்தாள்.

“மாப்பிள்ளை ‘ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்’ங்கிறதுனால ஒரு கியுரியாசிட்டில, மெட்ராஸ் ‘ரவிச்சந்திரா ஆஸ்பத்திரி’யை காண்டாக்ட் பண்ணி ஹார்ட் தானம் கொடுத்தவா பேரை கேட்டிருக்கிறா;

அவா அதெல்லாம் கொடுக்க முடியாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா. மாப்பிள்ளை, ‘எங்களுக்கு அட்ரஸ் எல்லாம் வேண்டாம், பேஷண்ட் பேரை மாத்திரமாவது சொல்லுங்கோ மாசாமாசம் அவா பெயரில் கோவில்ல அரச்சனை பண்ணி நாங்க தாங்க்ஸ் தெரிவிச்சுக்கணும்’ன்னு கெஞ்சிக் கேட்டிருக்கார்.

பல தடவை ‘நோ’ ‘நாட் அட் ஆல் பாசிபிள்’ன்னு எல்லாம் சொல்லி, கடைசியா, ஒருவழியா பேர் மாத்திரம் சொன்னா;

அது உண்மையான பெயரான்னு தெரியல; நாங்களும் ஒரு நம்பிக்கையில மாசாமாசம் அவா பெயருக்கு அர்ச்சனை பண்ணிண்டு வர்றோம். யாரோ ருக்மணியாம்” என்று முடித்தாள்

பாலு சுனாமி உணர்ச்சிப் பிரவாகத்தில் சிலையானார்.

பக்கத்து அறையில் கல்யாணப் பெண் கமலா பாடிக் கொண்டிருந்த,

“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல!”

பாடல் ஆனந்த அதிர்வலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது ருக்மணி புதிதாக குடி புகுந்த அந்த வீட்டில்.

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 98842 51887

Comments

“இதயக்கமலம்” மீது ஒரு மறுமொழி

  1. […] இதயக்கமலம் போனால் போகட்டும் போடா […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.