இதயத்திற்கு இதமான எருமை பால்

இதயத்திற்கு இதமான எருமை பால் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

நாம் எல்லோரும் பொதுவாக பசுவின் பாலையே அருந்துகிறோம். ஆனால் எனது சிறுவயதில் எங்கள் ஊர் டீ கடையில் எருமையின் பாலினைக் கொண்டே டீ தயார் செய்வர். டீ-யானது அடர்த்தியாகவும் சுவையாகவும் இருக்கும்.

கடைக்காரரிடம் டீ-யின் ரகசியம் பற்றி கேட்டால் எருமையின் பால் அடர்த்தியாக இருப்பதால் பாலில் தண்ணீர் சேர்த்தாலும் டீ-யின் அடர்த்தியோ, சுவையோ குறையாது என்பார்.  மேலும் எருமையின் பாலானது விரைவில் கெட்டுப் போகாது என்ற விவரமும் அவர் சொல்லியே நான் அறிந்திருக்கிறேன்.

எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா பிரசித்தம். பால்கோவா தயார் செய்ய எருமை பாலே சிறந்தது என நண்பர் ஒருவர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் காலத்திலேயே எருமைகள் அதிகம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் திருப்பாவையிலும் ஆண்டாள் எருமைக் கூட்டங்களின் பாலானது வெள்ளமாகிப் பெருகிய வீட்டினை உடையவனின் தங்கையே என தனது தோழியை நீராட அழைக்கிறாள்.

உலகில் எருமை பாலினை அதிகம் பயன்படுத்துபவர்கள் தெற்காசியா மற்றும் இத்தாலியைச் சார்ந்தவர்கள். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எருமை பாலினை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

 

எருமையிலிருந்து பால் கறக்கும் போது
எருமையிலிருந்து பால் கறக்கும் போது

 

எருமை பாலானது வெள்ளை நிறத்தில் இனிப்பு சுவையுடன் இருக்கும்.

எருமை பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

எருமை பாலானது அதிகளவு கொழுப்புச் சத்தினையும், அதிக ஆற்றலையும் வழங்கக் கூடியது. இப்பாலில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைவாகவும் இருக்கிறது.

இப்பாலில் விட்டமின் ஏ(18%), பி1(தயாமின்)10%, பி2(ரிபோஃப்ளோவின்)25%, பி3(நியாசின்)1%, பி5(பான்டாதெனிக் அமிலம்)9%, பி6(பைரிடாக்ஸின்)4%, பி9(ஃபோலேட்டுகள்)3%, பி12(கோபாலமைன்)37%, சி6% உள்ளன.

இதில் கால்சியம் 41%, இரும்புச்சத்து 4%, மெக்னீசியம் 18%, பாஸ்பரஸ் 40%, பொட்டாசியம் 10%, துத்தநாகம் 5%, செம்புச்சத்து 12%, மாங்கனீசு 1%, சோடியம் 8% உள்ளன.

மேலும் இதில் 84% நீர்ச்சத்து, 18% புரதச்சத்து, 10% கார்போஹைட்ரேட், 48% கொழுப்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றன.

இப்பாலில் 18 விதமான அமினோ அமிலங்கள், பலவகையான லிப்பிடுகள் உள்ளன.

 

எருமை பாலின் மருத்துவப் பண்புகள்

இதய நலத்திற்கு

எருமை பாலில் கொலஸ்ட்ராலின் அளவானது பசும்பாலின் அளவினை விட குறைவாக உள்ளது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் பி12 (கோபாலமைன்) இதய நோய்கள் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது.

அதே நேரத்தில் இதில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால் இதனை அளவோடு தினமும் அருந்துவது இதய நலத்திற்கு உகந்தது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

பொதுவாக பாலானது எலும்புகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் இயல்பு உடையது. எருமை பாலில் கால்சியம் தாதுஉப்பு பசும் பாலினைவிட அதிகம்.

எனவே இதனை உண்ணும் போது இது எலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கிறது.

மேலும் இப்பாலில் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புகளும் குறிப்பிட அளவில் காணப்படுகின்றன.

எனவே எருமை பாலினை அடிக்கடி அளவோடு உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

எருமை பாலானது பசும் பாலினைவிட 10 சதவீதம் புரதச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. சிறியவர்கள், இளம்வயதினர், முதியவர்கள் என எல்லோருக்கும் இப்பாலில் உள்ள புரதச்சத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் இப்பாலானது நமது உடலுக்கு தேவையான முழுபுரதச்சத்தைத் தருவதால் இது மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.

மேலும் இப்புரதம் உடலின் வளர்ச்சிக்கும், செல்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தலுக்கும் உதவுகிறது. எனவே எருமை பாலினை உண்டு ஆரோக்கியாமான வளர்ச்சியைப் பெறலாம்.

நோய் எதிர்ப்பு ஆற்றலினைப் பெற

எருமை பாலில் விட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை காணப்படுகின்றன. இவை ஆன்டிஆக்ஸிஜென்டுகளாக செயல்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கின்றன.

இந்த விட்டமின்கள் உடலின் நச்சுக்கள் மற்றும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கின்றன.

விட்டமின் -சி-யானது வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலுக்குத் தேவையான முதன்மையான நோய் எதிர்ப்பு ஆற்றலினை வழங்குகின்றன.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

எருமை பாலில் உள்ள இரும்புச் சத்தானது சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்கிறது. இரும்புச்சத்து குறைவால் அனீமியா எனப்படும் இரத்த சோகை உருவாகும்.

எருமை பாலினை தினசரி உணவில் உட்கொள்ளும்போது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

எருமை பாலினைப் பற்றிய எச்சரிக்கை

எருமை பாலில் கொழுப்பு சத்தானது பசும்பாலை விட அதிகமாக உள்ளது. எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எருமை பாலினை அளவோடு அருந்த வேண்டும்.

எருமை பால் பற்றிய தவல்கள்

தினமும் இரவு உணவிற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக எருமை பாலை குடித்து வர நல்ல ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை இப்பால் வழங்குகிறது.
சரும எரிச்சலை இப்பால் போக்குகிறது.

இப்பால் உடலுக்கு வலுவையும் ஆற்றலையும் வழங்குகிறது.
இந்தியாவில் கெட்டியான தயிர், பன்னீர், கீர், பாயசம், குஃல்பி மற்றும் நெய் ஆகியவை தயார் செய்ய பெரும்பாலும் எருமை பால் பயன்படுத்தப்படுகிறது.

இத்தாலியன் மொஸ்ஸரல்லா மற்றும் போரேலி பாலாடை ஆகியவை தயார் செய்ய இப்பால் பயன்படுத்தப்படுகிறது.

 

இத்தாலியன் மொஸ்ஸரல்லா
இத்தாலியன் மொஸ்ஸரல்லா

 

எருமை பாலானது உலக மொத்த பால் உற்பத்தியில் 12 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

இந்தியா எருமை பால் உற்பத்தியில் பாகிஸ்தானை அடுத்த உலகில் இரண்டாவது பெரிய உற்பத்தி நாடாகும்.

ஒரு லிட்டர் எருமை பாலில் தயார் செய்யப்படும் பாலாடைக்கட்டியின் அளவானது ஒரு லிட்டர் பசும்பாலில் தயார் செய்யப்படும் பாலாடைக்கட்டியின் அளவினைப் போல் இரு மடங்காக உள்ளது.

இதயத்திற்கு இதயமான எருமை பாலை அளவோடு அருந்தி ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

வ.முனீஸ்வரன்

 

2 Replies to “இதயத்திற்கு இதமான எருமை பால்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: