இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை

மாலை நேரத்தில் சுமார் நாலரை மணி அளவில், வேலை விசயமாக வெளியூருக்கு செல்ல இருந்த‌ என் நண்பன் அரவிந்தை வழியனுப்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் அவனுடன் நின்று கொண்டிருந்தேன்.

அரவிந்த் செல்ல வேண்டிய பேருந்துக்கு முன்னதாக நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 515F என்ற தடத்தில் ஓடும் பேருந்து, நாங்கள் நின்று கொண்டிருந்த அதே நிறுத்தத்தில் வந்து நின்றது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பேருந்தில்தான் நான் அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.

அவள் என்னைப் பார்த்ததும் ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்து, விழிகள் அகல, ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒரு சேர ஒருவித சந்தோசத்தை வெளிக்காட்டினாள்.

அப்படி ஒரு முக பாவனையை இதுவரையில், நான் யாரிடத்திலும் கண்டதில்லை.

அவளைப் பார்த்ததும் நானும் நீண்ட மூச்சை இழுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு கண்கள் அகல பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த நிமிடங்கள் எனக்குள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தின‌. திடீரென்று ரெக்கை முளைத்து விண்ணில் பறப்பதைப் போல இருந்தது.

எங்கள் இருவரின் விழிகளும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அந்த சில நிமிடங்களில் பத்து வருட‌ப் பிரிவையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டோம்.

எங்கள் விழிகளின் சந்திப்பை நிராகரித்து வெளிநடப்பு செய்தவர்களைப் போல, நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் நிமிடத்தில் இறங்கிக் கொள்ள, நடத்துனர் அவரது இருக்கையில் இருந்தவாறே தலையை ஜ‌ன்னல் வழியே நுழைத்து வெளியே எட்டிப் பார்த்து விட்டு விசிலடித்து ஓட்டுனருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

பேருந்து கிளம்பி சென்றது. அவள் இமைக்க மறந்து என்னையே பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

பேருந்து அதன் பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எனது இதயம் இலேசாக வலிப்பதைப் போல உணர்ந்தேன்.

அவளுக்கும் அப்படி இருந்திருக்குமோ என்னவோ தெரியாது. ஆனால் அவளின் கண்களில் அதை உணர முடிந்தது.

பேருந்து செல்ல செல்ல நான் எனது பார்வையாலே அவளை நெருங்கிக் கொண்டே இருந்தேன். அவள் என்னை விட்டு விலகிச் சென்று கொண்டே இருந்தாள்.

அவள் அருகில் அவளின் வயதையொத்த ஒருவன் இருந்து கொண்டு, பக்கத்து இருக்கையில் இருந்த யாரோ ஒருவரிடம் எதைப் பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.

நிச்சயம் அவன், அவளின் கணவனாகதான் இருக்க வேண்டும். இவ்வளவு உறுதியாக நான் சொல்வதற்குக் காரணம் எந்த விதத்திலும் அவனின் முக ஜாடை அவளோடு ஒத்து போகவில்லை.

அவள் அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன். அதுவுமில்லாமல் அவன், அவளுக்கு மிகப் பொருத்தமாகவும் அவளுக்கென்று பிறந்தவனைப் போலவும் இருந்தான்.

அவளுக்கு ஏழு அண்ணன்கள். கடைக்குட்டிதான் இவள். நான் படித்த பள்ளியில் நான் படித்த ஒன்பதாம் வகுப்பு “ஈ” பிரிவில் வந்து சேர்ந்தாள்.

நான் அந்த பள்ளியில் அந்த ஆண்டோடு, நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருந்தேன். இதற்கு முன் அவள் எங்கே படித்தாள்? எந்த ஊரில் இருந்தாள்? என்பதை பற்றியெல்லாம் எந்த விபரமும் எனக்கு தெரியாது.

அது பற்றி நான் யாரிடவும் விசாரிக்கவும் இல்லை. அபூர்வ மலரைப் போலிருந்தாள். அவளும் ஒரு அதிசயம் தான்.

எங்கள் பள்ளியில் மொத்தம் 750 மாணவ, மாணவியர்கள் பயின்று வந்தார்கள். அதில் நானூறு மாணவர்களும் முன்னூற்றி ஐம்பது மாணவிகளும் அடக்கம்.

நானூறு மாணவர்களையும் காதல் கொள்ளச் செய்தாள். முன்னூற்றி நாற்பத்தி ஒன்பது மாணவிகளையும் பொறாமை கொள்ளச் செய்தாள்.

தினமும் ஒரு முறையாவது அவளை அருகில் இருந்து தரிசித்து விட வேண்டும் என்பதற்காகவே, எல்லா மாணவர்களும் எனது வகுப்பு மாணவர்களுடன் நட்பு பாராட்டி, அவர்களோடு சேர்ந்து எங்கள் வகுப்பறைக்குள் வந்து அவளை தரிசித்து விட்டு செல்வார்கள்.

மதிய உணவு இடைவேளையின்போது காதல் பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பு “ஈ” பிரிவின் வகுப்பறையில் சங்கமித்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் அவள் மதிய உணவை கையில் எடுத்துக் கொண்டு வந்து வகுப்பறையில் சக மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

இந்த மாணவ வானரங்களின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகமாக, மதிய உணவையாவது நிம்மதியாக சாப்பிடுவோம் என்ற நினைப்பில், பள்ளி இருந்த அதே ஊரில் அவளது வீடும் இருந்ததால், மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்று வந்தாள்.

உணவு இடைவேளை நேரம் முடிவதற்கு ஒரு சில நிமிடத்திற்கு முன்பு வந்து வகுப்பறையில் ஆஜராகி விடுவாள்.

நான் எட்டாவது படிக்கும்போது எனது அண்ணன் வேலன் பத்தாவது படித்து வந்தான். அவனது வகுப்பு ஆசிரியர் வனிதா ஆசிரியை.

வனிதா ஆசிரியை ஒன்பது மற்றும் பத்து வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்தார்.

நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கும் போது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தேர்வு முடிவு வந்திருந்தது.

தேறிய மாணவர்களின் பட்டியலை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்தார்கள். எல்லா மாணவர்களும் சென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நானும் சென்று அறிவிப்பு பலகையை பார்த்தேன். பலகையில் என் அண்ணன் வேலனின் நம்பர் இடம் பெறவில்லை.

அப்போது பியூன் வந்து “அறிவிப்பு பலகையில் நம்பர் இல்லாத மாணவர்களின் விபரம் அந்தந்த வகுப்பாசிரியரிடம் இருக்கு. கேட்டு தெரிஞ்சிக்கங்க.” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அதனால் நான் சென்று வனிதா ஆசிரியையிடம் கேட்டேன். அவர் என் அண்ணன் ஆங்கிலம் மற்றும் கணக்கு என இரண்டு பாடங்களில் தோற்று விட்டதாகச் சொன்னார்.

ஒன்பதாம் வகுப்பு ஈ‍ பிரிவுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்த ‘ஹேமா’ என்ற ஆசிரியை திடீரென்று வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்றுவிட்டார். அதனால், அந்த பொறுப்பு வனிதா ஆசிரியையின் வசம் சென்றது.

வனிதா ஆசிரியை பாடம் நடத்தும்போது யாரும் புத்தகத்தை திறந்து வைத்திருக்க கூடாது. மூடி மேஜை மேல் வைத்துவிட்டு அவர் சொல்லுவதையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

பாடம் நடத்தி முடித்ததும், அதிலிருந்து கேள்விகள் கேட்பார். பதில் சொல்லவில்லை என்றால் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தும் சூட்சமத்தையும் தெரிந்து வைத்திருந்தார்.

நான், வேலனின் தம்பி என்று தெரிந்ததிலிருந்து, என்னையும் வேலனைப் போல ‘மக்கு பையன்’ என்று நினைத்து விட்டார் போலும்.

முதல் நாள் பாடம் நடத்தி முடித்ததும், முதல் ஆளாக என்னிடமே கேள்வியைக் கேட்டுவிட்டார்.

நான் ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவுக்கு வனிதா ஆசிரியை பாடம் நடத்துவது முதல் நாள் என்பதால் பாடத்தை கொஞ்சம் கவனமாகவே கவனித்திருந்தேன்.

அதனால் கேள்வியை சுலபமாக எதிர்க் கொண்டு விட்டேன். இரண்டாவது நாளும் என்னிடமே கேள்வியைக் கேட்டார். அன்றும் ஒருவாறாக ஏதோ சொல்லி தப்பித்துக் கொண்டேன்.

அவரின் கணிப்பு எனக்கே புரிந்து விட்டது என்றால் மற்ற மாணவர்களுக்கும் புரிந்திருக்கும் என்பதாகவே இருந்திருக்கிறது.

நான், வனிதா ஆசிரியையிடம் உஷாராக நடந்து கொள்ள வேண்டி, ‘முன் வாசிப்பு’ முறையை கையாண்டேன். அதாவது அவர் நடத்தப் போகும் பாடத்தை முன்னதாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன். அது எனக்குக் கை மேல் பலன் தந்தது. இவ்வாறு நாட்கள் நகர்ந்தன‌.

ஒருநாள் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பள்ளிக்கு வரவில்லை. அன்று பாடம் நடத்தி முடித்ததும் கேள்வி கேட்பதற்காக என்னை தேடி இருக்கிறார் வனிதா ஆசிரியை.

நான் இல்லை என்றதுமே, எனது பெஞ்சியில் இருந்த மற்றொரு மாணவனின் மீது அவரின் பார்வை திரும்பியது. அவனிடம் கேள்வியை கேட்டிருக்கிறார்.

அவனால் பதில் சொல்ல முடியாமல் போகவே, கேள்வி ஒவ்வொரு மாணவராக‌ மாறி மாறிச் சென்றது.

அன்று யாருமே பதில் சொல்லவில்லை. எல்லோருக்கும் அன்று நடத்திய பாடம் முழுவதையும் நூறு முறை எழுதிக் கொண்டு வரும்படி தண்டனை விதித்து விட்டார்.

மறுநாள் நான் வகுப்பறைக்கு சென்றதும் எல்லோரும் சந்தோசப்பட்டனர். காரணம் இதுவரை நான் எல்லோரையும் காப்பாற்றி வந்துள்ளேன் என்பதற்காக அல்ல. இன்று பதில் சொல்ல ஒரு ஆள் கிடைத்துவிட்டான் என்பதால்.

வனிதா ஆசிரியை அன்று வகுப்பறைக்கு வரும் வரை நான், எல்லோருக்கும் ஒரு கதாநாயகனாகவே தெரிந்தேன். ஆனால் அன்று வேறு விதமாக நடந்தது.

வகுப்பறைக்கு வந்த வனிதா ஆசிரியை எல்லோரிடம் “விதித்ததை நிறைவேற்றி விட்டீர்களா?” என கேட்டு விட்டு, அன்றைய பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

பாடம் நடத்தி முடித்ததும் கேள்வி என்னிடமே ஆரம்பிக்கும் நான் எப்படியாவது சொல்லிவிடுவேன்; அதோடு கேள்வி கேட்கும் படலம் முடிந்துவிடும் என்று எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அன்று அவ்வாறு நடக்கவில்லை. என்னை விட்டு விட்டு மற்றவர்களிடம் கேள்விகளை கேட்டார். அன்றும் யாரும் பதில் சொல்லவில்லை.

மாணவிகளில் ஒரு சிலர் மட்டும் ஓரளவு பதில் சொன்னார்கள். கடைசியாக கேள்வி என்னிடம் வந்தது. நான் அன்று ஒரு புது உற்சாகத்தோடு சொன்னேன். அவரே ஆச்சரியப்பட்டு போனார்.

அன்று நான் ‘மக்கு பையன்’ இல்லை என்பதை ஓரளவுக்கு புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். காலண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் வந்தது.

விடைத்தாளை திருத்தி கொண்டு வந்து கொடுத்தார். நான் தொண்ணுற்றி மூன்று மதிப்பெண் எடுத்திருந்தேன். அன்று முதல் என்னிடம் கேள்விகள் கேட்பதில்லை.

எங்கள் வகுப்பின் பேரழகி ஒரு நாள் என்னிடம் வந்து கேட்டாள், “நீ மட்டும் எப்படி பாடத்தை நடத்தி முடித்ததும், அப்படியே திருப்பி சொல்லிடுற?” என்று.

தாரக மந்திரத்தை கேட்பதைப் போலக் கேட்டாள் தமிழ்ச்செல்வி. தமிழ்ச்செல்வி; அதுதான் அந்த அழகியின் பெயர்.

நான் மகுடிக்கு ஆடிய பாம்பைப் போல, அவளிடம் எனது ‘முன் வாசிப்பு’ முறையை பற்றி சொன்னேன்.

அதிலிருந்து அவளும் அதைப் பின்பற்றி வந்ததால் வனிதா ஆசிரியையின் கேள்விக் கணைகளை சுலபமாக எதிர் கொண்டு வந்தாள்.

அதுவரை ஆண்களை ‘கொள்ளிக் கண்காரர்கள்‘ என்று நினைத்துக் கொண்டிருந்தவள், அன்றிலிருந்து என்னிடம் சகஜமாகப் பேசவும் பழகவும் ஆரம்பித்தாள்.

ஒருநாள் அவளுக்கு உடல்நிலை சரியில்லாததால், விளையாட்டு நேரத்தில் விளையாடுவதற்கு செல்லாமல், வகுப்பறையிலேயே தனிமையில் இருந்து கொண்டிருந்தாள்.

அவள் தனிமையில் இருப்பதை அறிந்த கொண்ட மாணவர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்து நூல் விட்டு கொண்டிருந்தார்கள்.

அப்போது எதேச்சையாக வகுப்பறைக்கு வந்த நான் அதை கவனித்து விட்டு ஜன்னல் கதவுகளை கொள்ளிக் கண்காரர்களின் பார்வையில் பட்டு விடாதவாறு மறைவாக நின்று மூடினேன்.

அதன்மூலம் நான் அவள் மனதில் சிறிய அளவில் குடியேறிவிட்டேன். அந்த ஆண்டு பறந்து சென்றது. எல்லோரும் பத்தாம் வகுப்புக்கு பறந்து சென்றார்கள்.

ஒருநாள் மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் முடிந்ததும் எல்லோரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நானும் எனது நண்பன் மாணிக்கமும் வகுப்பறையில் இருந்து வேகமாக வெளியேறினோம்.

தெற்கு பார்த்து அமைந்திருந்த அந்த பள்ளியின் அருகாமையில், தென்கிழக்கு திசையில் பள்ளிக்கூடத்தை போன்றே தெற்கு பார்த்தவாறு அமைந்திருந்த நூலகத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தோம்.

அப்போது, அன்று பள்ளிக்கு வராமல் மட்டம் போட்ட சுந்தரம், பள்ளிக்கும் நூலகத்திற்கும் இடையே வடக்கு தெற்காக செல்லும் தெருவில், தெற்கு திசையில் நூறு மீட்டர் தூரத்தில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது தமிழ்செல்வி பள்ளியின் கிழக்கு வாசல் வழியாக வெளியேறி நானும், மாணிக்கமும் நின்று கொண்டிருந்த அதே தெருவின் வழியாக எங்களை கடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.

அவளுக்குக் காவலாகப் பின்னாலே ஒருதலை காதலன் ஒருவனும் சென்று கொண்டிருந்தான்.

நானும் மாணிக்கமும் சுந்தரத்தை ‘ஏன் பள்ளிக்கு வரவில்லை?’ என்று கேட்பதற்காக அவனை விசில் அடித்து அழைத்தோம்.

சுந்தரம் எங்களை கவனிக்காமல் யாரிடமோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான்.

எங்கள் இருவரையும் கடந்து சென்ற தமிழ்ச்செல்விக்குத் தெரியும் ‘அழைப்பது அவளை அல்ல; சுந்தரத்தை என்று’.

ஆனால் அவளைப் பின்தொடர்ந்து வந்த ஒருதலைக் காதலனின் பார்வையில், நாங்கள் இருவரும் தமிழ்ச்செல்வியைக் கிண்டல் செய்வதாகத் தெரிந்திருக்கிறது.

அதற்கான பின் விளைவு என்ன என்று எங்களுக்கு மறுநாள் தான் தெரிந்தது.

நான் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தேன். அரசு விடுதி, பள்ளியின் வடமேற்கு திசையில் இருந்தது. பள்ளிக்கும் விடுதிக்கும் இடையில் மைதானம் இருந்தது.

விடுதி மாணவர்கள் அனைவரும் விடுதியில் இருந்து மைதானத்து வழியே நடந்து பள்ளிக்கு செல்வார்கள்.

அன்று நான் விடுயில் இருந்து பள்ளிக்கு மைதானத்து வழியே நடந்து வந்துகொண்டிருந்தேன்.

அப்போது சற்றுத் தொலைவில் ஆறுமுகம் என்ற மாணவன் தனது மேல் ஆடையில்லாமல் சென்று கொண்டிருந்தான்.

ஆறுமுகம் அவனை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவன் ஒரு பால்காரார் வீட்டுப்பிள்ளை.

பொதுவாக கறவைப் பசுக்கள் வைத்திருப்போர் பால் அளந்த பாத்திரத்தை கழுவிதான் காபி போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனா, ஆறுமுகத்தின் அம்மா அதற்கு விதி விலக்கு. நல்ல தாரளமாக கறந்த சூட்டோடயே பாலை குடிக்க கொடுப்பார். ஆறுமுகம் மாலை நேர கராத்தே வகுப்பிலும் சேர்ந்திருந்தான்.

காராத்தேயோடு நல்ல காராம் பசு பாலும் குடித்து வந்ததால் WWF-வில் வரும் ‘அண்டர் டேக்கரை’ப் போல இருப்பான்.

மைதானத்தில் எப்போதும் மாணவர்கள் கால்பந்து, கிரிக்கெட் என்று ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பர்.

காலை பள்ளிக்கு வந்ததும் ஆரம்பித்து விடுவார்கள். பள்ளி 9.45க்கு தான் ஆரம்பிக்கும், அதுவரை விளையாட்டுதான்.

நானும் காலையிலே விளையாடக்கூடியவன் தான். விடுதி சாப்பாட்டின் அதித சக்தியினால் கொஞ்சம் விளையாட்டைக் குறைத்திருந்தேன்.

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி வைத்து “சட்டையில்லாமல் போறது ஆறுமுகம் தானே” என்று கேட்டேன்.

“ஆமா” என்று பதில் சொன்னான்.

தொடர்ந்து “ஆறுமுகம் கராத்தே வகுப்பில சேர்ந்ததும்தான் சேர்ந்தான். இப்படி கண்ட இடத்துலயும் சட்டை இல்லாம அலையுறான்” என்று ஆறுமுகத்தை கேலி செய்யும் விதமாக நான் சொன்னதும்,

அவன் “தமிழ்ச்செல்வியோட அண்ணன்க‌ள், அடியாளுங்களோட வந்து ஆறுமுகத்த அடிச்சிட்டான்க‌ள்” என்று விசயத்ததை சொன்னான்.

“ஏன் அடிச்சாங்க?” பதட்டத்தோடு கேட்டேன்.

“நேத்து, சாயங்காலம், தமிழ்ச்செல்வி பள்ளிக்கூடம் விட்டு, வீட்டுக்கு போறப்ப ஆறுமுகமும் மாணிக்கமும் அவளை விசில் அடிச்சி கிண்டல் பண்ணிருக்கானுங்க. அவ போயி அவங்க அண்ணங்கிட்ட சொல்லிட்டாள். அவனுங்க காலையில வகுப்பறைக்கே தேடிட்டு வந்து, ஆறுமுகத்த பொறட்டி எடுத்துட்டானுங்க. நடந்த சண்டையில ஆறுமுகத்தோட சட்டை கிழிச்சிடுச்சி. அதுதான் துணிய மாத்துறதுக்காக, வீட்டுக்கு போயிட்டு இருக்கறான். அனேகமாக இன்னைக்கு பள்ளியில் பெரிய ரகளையே நடக்கும்ன்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடம் நடக்கிறது கஷ்டம்தான். அனேகமா ஆறுமுகம் ஆட்களை கூட்டிட்டு வருவான்னு நினைக்கிறேன்.” என்றவன்.

தொடர்ந்து “மாணிக்கம் இன்னும் பள்ளிக்கூடத்துக்கு வரல. அவன் மட்டும் மாட்டியிருந்தான், அவன கந்தல் கோலம் பண்ணியிருப்பானுங்க.” என்று சொல்லி விட்டு விளையாடச் சென்றுவிட்டான்.

எனக்கு, அவன் சொன்னதைக் கேட்டதிலிருந்து அடி வயிற்றை பிசைந்தது போல இருந்தது. சிறிதுநேரம் அதே இடத்தில் நின்று யோசித்துவிட்டு அப்படியே திரும்பி விடுதிக்கு சென்று விட்டேன்.

பள்ளிக்கு செல்லாமல் பாதியிலே திரும்பி வந்ததற்கான காரணத்தை கேட்டார் விடுதி காப்பாளர்.

நான் “வயிற்று போக்கு மாதிரி இருக்கு. காலையிலே ரெண்டு தடவ போயிட்டேன். மாத்திரை போட்டேன் குறைஞ்ச மாதிரி இருந்ததுன்னு நினைச்சி போனேன். மறுபடியும் வயிற்றை கலக்குது” என்று சொல்லி சமாளித்துவிட்டேன்.

“சரி, ஓய்வு எடு. நாளைக்கு போயிக்கலாம். நான் பள்ளிக்கு போன் செய்து தகவல் சொல்லிடுறேன்” என்று சொல்லி விட்டு சென்றார் விடுதி காப்பாளர்.

வீட்டிற்கு துணி மாற்ற சென்ற ஆறுமுகம், நடந்ததை அவனது தந்தையிடம் சொல்லி பள்ளிக்கு அழைத்து வந்து தலைமையாசிரியரை சந்தித்தார்கள்.

தலைமையாசிரியர், தமிழ்ச்செல்வியை அழைத்து விபரத்தை கேட்டார். அவள் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லவே. தமிழ்செல்வியின் அண்ணன்களில் ஒருவனை அழைத்து வர சொன்னார் தலைமையாசிரியர்.

அவன் வந்து விபரம் சொன்னான்.

“நேற்று மாலையில் என் தங்கை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது மாணிக்கமும் ஆறுமுகமும் விசில் அடித்து என் தங்கையை கிண்டல் செய்ததாக, +1 படிக்கற சுப்பிரமணி சொன்னான்” என்று சொன்னான்.

சுப்பிரமணியை கேட்க, சுப்பிரமணி பார்த்ததை சொன்னான். அதன் பிறகு தமிழ்ச்செல்வி நடந்த உண்மையை தலைமையாசிரியருக்கு விளக்கினாள்.

மாணிக்கத்தையும் அழைத்து விபரத்தை கேட்டார்கள். நான் பள்ளிக்கு செல்லாததனாலும் என்னை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாததாலும் என்னை விட்டு விட்டார்கள்.

தலைமையாசிரியர் ஆறுமுகத்தின் அப்பாவிடம் நடந்ததற்காக மன்னிப்பு கோரி விட்டு, சுப்பிரமணியையும் தமிழ்ச்செல்வியின் அண்ணனையும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

பொதுவாக தமிழ்ச்செல்வியை சுற்றி வரும் காளையர்களை எச்சரிப்பதற்காகவே இந்த சம்பவம் நடந்தது என்று கூட சொல்லலாம்.

நூலகத்தின் அருகில் நின்றது, நானும் மாணிக்கமும். தமிழ்ச்செல்வி எங்களைக் கடந்து செல்லும் போது சுந்தரத்தைப் பார்த்து விசில் அடித்தது, நானும் மாணிக்கமும்.

இடையில் ஆறுமுகம் எப்படி வந்தான்?

என் பேரு பள்ளியில் அவ்வளவு பிரபலம் கிடையாது. ஆனால் மாணிக்கத்தின் பேரு பிரபலம்தான்.

மாணிக்கமும் ஆறுமுகமும் தான் நெருங்கிய நண்பர்கள். எனது பெயர் தெரியாததால் சுப்பிரமணி, மாணிக்கமும் அவன் நண்பனும் என்று சொல்லிருக்கிறான்.

தமிழ்ச்செல்வியின் அண்ணன்கள் வந்து மாணிக்கத்தை விசாரிக்க, மாணிக்கம் வரவில்லை என்று தெரிந்ததும், மாணிக்கத்தின் நெருங்கிய நண்பன் யாரென்று விசாரித்தபோது, எல்லோரும் மாணிக்கத்தின் நெருங்கிய நண்பன் என்று சொன்னால் அது ஆறுமுகம் தான் என்று விசாரித்த வரையில் சொல்லிருக்கிறார்கள்.

தமிழ்ச்செல்வியின் அண்ணன்கள், எனது இடத்தில் ஆறுமுகத்தை வைத்து நையப்புடைத்து விட்டார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பின் நானும் தமிழ்ச்செல்வியைப் பார்த்ததும் ஒதுங்கிச் சென்றேன்.

அவள் இது பற்றி என்னிடம் ஒருமுறை அல்ல, பலமுறை கேட்டிருக்கிறாள். நான் “அப்படியெல்லாம் இல்லை” என்று சமாளித்து வந்தேன்.

அவளும் “நடந்த பிரச்சனையில, என் தப்பு என்ன இருக்கு?” என்று வருத்தப்பட்டாள்.

இருந்தாலும் அடுத்த ஆண்டு நான் பள்ளியையே மாற்றி இருந்தேன்.

ரக்சன் கிருத்திக்
கைபேசி: 8122404791

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.