சுத்தியல் ஒன்று தான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது.
ஒரு நாள் சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை.
அவன் மீண்டும் அடித்தான்; ஆனாலும் பூட்டு திறக்கவில்லை.
அப்போது அவன் மனைவி “பூட்டை உடைக்காதீர்கள்; சாவி கிடைத்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.
அவன் சாவியை வாங்கிப் பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான்.
சாவியையும் சுத்தியலையும் அருகிலேயே வைத்து விட்டுப் போய்விட்டான்.
சுத்தியலுக்கோ மிக அவமானமாக இருந்தது. “மிக வலிமையான நம்மால் திறக்க முடியாத பூட்டை, இந்தச் சிறிய சாவி திறந்து விட்டதே” என்று வருந்தியது.
சுத்தியல் சாவியிடம் பேச்சுக் கொடுத்தது.
“நான் உன்னைவிட மிகவும் வலிமையானவன்; ஆனால் நான் பூட்டைத் திறக்க மிகவும் கஷ்டப்படுகிறேன். நீ என்னைவிட மிகவும் எளிமையானவன்; ஆனால் எளிதில் பூட்டைத் திறந்து விட்டாயே; என்ன காரணம்?” என்று சுத்தியல் சாவியிடம் கேட்டது.
அதற்கு சாவி சொன்னது “நீ என்னைவிட பலசாலிதான். ஆனால் நீ பூட்டை உடைக்க அதன் தலையில் தட்டுகிறாய். அதனால் அதுவும் தன் பலத்தைக் காட்டி உன்னை எதிர்க்கிறது.எனவே உனக்கு பூட்டைத் திறப்பது கடினமான வேலையாகிறது.”
“நான் பூட்டைத் திறக்க அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு திறந்து கொடுக்கின்றது; எனவே என் வேலை எளிதாகின்றது.” என்று சாவி சொன்னது.
நாமும் மற்றவர் மனம் என்னும் பூட்டைத் திறக்க அதிகாரம் என்னும் சுத்தியல் கொண்டு அடிக்காமல் அன்பு என்னும் சாவியைப் பயன்படுத்தலாமே!