ஷெட்டிலிருந்து காரை ரிவர்ஸில் எடுத்துக் கொண்டிருக்கும் போது தலையைச் சொறிந்த வண்ணம் பல்லிளித்தவாறு கூடவே வந்த தணிகாசலம், “ஐயாவை எப்ப வந்து பார்க்கட்டும்!” என்றதும், எனக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது.
“இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணாதே!” என பலமுறைகள் சொல்லியும் அவன் விட்டபாடிலில்லை.
தணிகாசலம் பக்கத்து வீட்டின் அவுட் ஹவுசில் ரிடையர்டு தாலுகா ஆபீஸ் பியூன். அவ்வப்போது என் சொற்படி கேட்டு நடக்கும் ஓர் நல்ல, நேர்மையான, விசுவாசமுள்ள ஜீவன்.
“இன்னும் ரெண்டு நாளைக்கு ரொம்ப பிசி. அப்புறமா வா” என்றவாறே ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினேன்.
‘ராஜ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்’ காம்பவுண்டுக்குள் கார் நுழையும்போதே வாட்ச்மேன் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரும் முதலாளிக்குரிய மரியாதையை பவ்யமாகத் தெரிவிக்க, புன்முறுவல் பெருமையுடன் அதைப் பெற்றுக் கொண்டு என் அறைக்குள் நுழைந்து ஏ.சியைப் போட்டு அமர்ந்தேன்.
தள்ளவும் இழுக்கவும் கூடிய ரோலிங் ஷட்டர், கிரில் ஷட்டர், கியர் டைப் ரோலிங் ஷட்டர் ஆகியவைகளை உற்பத்தி செய்து லாபகரமான முறையி;ல் ஓடிக் கொண்டிருக்கும் கம்பெனிதான் ‘ராஜ் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ்’
பஸ்ஸரை தூதனுப்பி ஸ்டெனோவை வரவழைத்தேன். “எனிதிங் ஸ்பெஷல் டுடெ?” என்ற என் கேள்விக்கு, “காலையில் தணிகாசம்னு உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்தாரு. உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்காராம். நீங்க மதியம்தான் வருவீங்கனதும் போயிட்டாரு” எனப் பதிலளித்தாள்.
“ஆல் ரைட் டேக் டௌன்” என கடிதங்களை டிக்டேட் செய்துவிட்டு ஒர்க்ஷாப் விசிட்டிற்குச் சென்றேன்.
மாலை வீடு திரும்புகிறபோது கம்பெனி வாசலில் தணிகாசலத்தின் இருபது வயது மகன் வாட்ச்மேனிடம் உள்ளே வர பர்மிஷன் கேட்டுக் கொண்டிருக்க, காரை நிறுத்தி, “என்னப்பா, என்ன விஷயம்?” என்றேன்.
“நேரம் கிடைக்கிறப்போ கம்பெனிக்கு வந்து உங்களைப் பார்க்கச் சொல்லிருந்தாரு அப்பா. ரேஷன் கடைக்குப் போயிட்டு இப்பதான் வரேன் ஐயா”
“வந்து பார்க்க உங்கப்பாகிட்ட சொல்லிட்டேன். நீ போ” எனச் சொல்லியவாறே காரை எடுத்தேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒருமுக்கிய வேலையாக அவசர அவசரமாக சென்னை கிளம்பிக் கொண்டிருந்த சமயம் தணிகாசலம் வந்து மீண்டும் எரிச்சலூட்டினான்.
கம்பெனி ஸ்டெனோவை போனில் அழைத்து தணிகாசலம் விஷயத்தைக் கவனிக்கச் சொல்லிவிட்டு, “ஸ்டெனேவைப் போய் பாருப்பா. நான் அவசரமா மெட்ராஸ் போறேன் எல்லாம் சொல்லிருக்கேன்” என்றேன்.
சென்னை வேலை முடித்து திரும்பியதும், அன்று கம்பெனிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்போது தணிகாசலம் எதிர்ப்பட்டான்.
“ரொம்ப நன்றீங்க! நீங்க சொன்ன மாதிரியே கம்பெனிக்குப் போய் ஸ்டெனோ அம்மாவைப் பார்த்தேங்க. இந்த புதுவருஷத்து டயரியும், காலண்டரும் கொடுத்தாங்கய்யா!” என்றான் முகத்தில் மகிழ்ச்சி பொங்க.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998