ராமு நடையை எட்டிப் போட்டான்.
ஐப்பசி மாதத்து மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. குடையும் கையிலில்லை. சினிமாவுக்குச் செல்லும் அவசரம்.
அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நண்பர்களுடன் செல்வதாகப் பர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது அவனுக்கு.
ரோடெல்லாம் சேறும், சகதியுமாக இருந்தது. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டான். அவனுடைய அபிமான நடிகரின் படமாயிற்றே!
தியேட்டரை நெருங்கும்போது முற்பகல் பதினோரு மணி. படம் ஆரம்பமாக இன்னும் கால் மணி நேரமே இருந்தது.
கும்பலோடு கும்பலாய் கலந்து முட்டி மோதி டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரை அணுக முயற்சித்தபோது ‘எப்போது எப்போது’ எனக் காத்திருந்த இடது கால் செருப்பின் வார் அறுந்து போனது.
இவன் கவுண்டர் அருகே நெருங்குவதற்குள் டிக்கெட் எல்லாம் விற்று விட்டது.
அறுந்த செருப்பு காலை உறுத்த, பெருத்த ஏமாற்றத்துடன் நொண்டியவாறே தியேட்டரை விட்டு வெளியே வந்தான்.
தியேட்டர் வாசல் முன்பு செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
செருப்பைக் கழற்றி அவரிடம் தைக்கக் கொடுத்துவிட்டு அபிமான நடிகரின் ‘கட் அவுட்’டை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு நின்றான் ராமு.
“தம்பி! இந்தா”
குரல் ராமுவின் சிந்தனையைக் கலைக்க, அவன் திரும்பி,
“எவ்வளவு?”
“இருபது ரூபா குடு தம்பி!”
“இருபது ரூபாயா? என்ன இது அநியாயம்? அறுந்த வாரைத் தைக்கவா இவ்வளவு? சரியான கொள்ளை. பத்து ரூபாய்தான் இந்தாங்க!”
இருவருக்கும் ஐந்து நிமிடங்களாய் பேரம் நடந்தது. வேண்டா வெறுப்போடு சலித்தவாறே பதினைந்து ரூபாயை செங்கோடனின் எதிர்ப்பிற்கிடையே வீசி எறிந்து விட்டுத் திரும்பிய ராமுவிடம் இருபது வயது மதிக்கத் தக்க ஒருவன் வந்தான்.
“தம்பி! நூறு ரூபா டிக்கெட், ஒண்ணுதான் கையில் இருக்கு. இருநூறு ரூபாய்…” பிளாக்கில் டிக்கெட் விற்பவன் ராமுவிடம் கேட்க, இப்போது ராமு பேரம் பேசவில்லை!
பணமும் டிக்கெட்டும் இடம் மாறின!
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998