இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இந்தியாவில் ஏழு பெரிய மலைத்தொடர்கள் உள்ளன.
இந்தியாவில் உள்ள மலைகள் பல முக்கிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ளன. மேலும் இவை அழகாகவும், பலநீர்வீழ்ச்சிகளைக் கொண்டும், பல்வேறு வகையான உயிர்களுக்கு வாழிடமாகவும் இருக்கின்றன.
இந்திய தீபகற்பத்தில் உள்ள உயர்ந்த நிலங்களான பீடபூமிகள் இந்திய மலைத்தொடர்களாலும், பள்ளத்தாக்குப் பகுதிகளாலும் பிரித்தறியப்படுகின்றன.
இந்தியாவின் ஏழு பெரிய மலைத்தொடர்கள் பற்றிப் பார்ப்போம்.
1. இமய மலைத்தொடர்
இமய மலைத்தொடர்
இமயமலை உலகின் மிக அதிக உயரமான சிகரத்தினைக் கொண்டுள்ள உயரமான மலையாகும். இது இந்தியாவின் நீளமான மலையாகவும் உள்ளது. இமயமலை என்பதற்கு பனியின் உறைவிடம் என்பது பொருளாகும்.
இரண்டு டெக்டோனிக் தகடுகளின் மோதலால் உருவான இம்மலையானது இளமையான மடிப்பு மலையாகக் கருதப்படுகிறது. சுமார் 7200மீ உயரமுடைய 100 சிகரங்கள் இம்மலையில் காணப்படுகின்றன.
நங்கபர்வதம் மற்றும் நம்சாபர்வா ஆகியவை இமயமலையின் மேற்கு மற்றும் கிழக்குப் புள்ளிகளாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவின் வடஎல்லையாக அமைந்து மத்திய ஆசியாவில் இருந்து வீசும் குளிர்காற்றிலிருந்து இந்தியாவை பாதுகாக்கிறது.
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வற்றாத நதிகள் இம்மலையில்தான் உற்பத்தியாகின்றன.
2. காரகோரம் மற்றும் பிர்பாஞ்சல் மலைத்தொடர்
காரகோரம்
காரகோரம் மற்றும் பிர்பாஞ்சல் மலைத்தொடர் இமயமலைக்கு வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ளது. காரகோரம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளது.
காரகோரம் மலைத்தொடரானது 500 கிமீ நீளத்தில் உலகின் இரண்டாவது பெரிய சிகரமான கே2 உட்பட பல சிகரங்களைக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடர் காரகோரம் மலைத்தொடரின் தொடர்சியாகக் கருதப்படுகிறது. புவியின் துருவப்பகுதிகள் தவிர இம்மலையே அதிகளவு பனிமூடிக் காணப்படுகிறது. சியாச்சென் பனியாறும், ஃபியாஃபோ பனியாறும் இம்மலைத்தொடரில்தான் அமைந்துள்ளன.

பிர்பாஞ்சல் இமயமலைக்கு தெற்கே ஹிமாசலப்பிரதேசத்தில் தொடங்கி வடமேற்காக ஜம்மு-காஷ்மீர் வரை பரவியுள்ளது. ஜீலம், ஜீனாப், ராவி போன்ற சிந்துவின் கிளைநதிகள் இம்மலை வழியே செல்கின்றன. குல்மார்க் என்னும் நகரம் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளது.
3. கிழக்கு மலைத்தொடர் அல்லது பர்வன்சால் மலைத்தொடர்
பர்வன்சால்
இம்மலைத் தொடர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மற்றும் மிசோரம் ஆகியவற்றில் காணப்படுகிறது. இது இமயமலையின் நீட்சியாகக் கருதப்படுகிறது.
இது இமயமலையைப் போன்று இருந்தாலும் இமயமலையைப் போல் உயரமாகக் காணப்படுவதில்லை. இம்மலையானது அடர்ந்த காடுகளையும் பலவிதமான உயிரினங்களையும் கொண்டுள்ளது. இம்மலைத்தொடரின் மிகஉயரமான சிகரம் பவாங்பூய் ஆகும். இதனுடைய உயரம் 2157மீ ஆகும்.
4. விந்திய சாத்பூரா மலைத்தொடர்
விந்தியமலை
இந்தியாவின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள விந்திய சாத்பூரா மலைத்தொடர் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ளன.
விந்திய மலையானது இந்தியாவை வடஇந்தியா, தென்இந்தியா என இருபிரிவுகளாகப் பிரிக்கிறது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பழமையான மலை விந்தியமலையாகும். விந்தியமலையானது வாரணாசியிலிருந்து மத்தியபிரதேசம் வழியாக குஜராத் வரை கிழக்கு மேற்காக பரவியுள்ளது.
விந்தியமலையின் தெற்குச்சரிவில் நர்மதா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. விந்தியமலையின் உயரமான சிகரமாக கலுமார் பீக் 752மீ உயரத்தில் அமைந்துள்ளது.

சாத்பூரா மலைத்தொடரானது குஜராத்தின் அரபிக்கடலில் ஆரம்பித்து மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் வரை பரவியுள்ளது. நர்மதை மற்றும் தபதி நதிகள் இங்கு உண்டாகி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன.
அடர்ந்த காடுகளைக் கொண்ட சாத்பூரா மலையானது புலிகள், காட்டெருதுகள், திருகுமான், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடாக உள்ளன. சாத்பூராமலையின் உயரமான சிகரமாக துப்கர் பீக் 1350மீ உயரத்தில் அமைந்துள்ளது.
விந்திய சாத்பூரா மலைகளில் பாஞ்மார்ஹி மலைவாழிடம், கன்ஹா தேசியப்பூங்கா, அமர்கந்தாக் மற்றும் ஓம்காரேஸ்வரர் கோவில் போன்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
5. ஆரவல்லி மலைத்தொடர்
ஆரவல்லி மலை
இது இந்திய மற்றும் உலக மலைகளில் மிகவும் பழமையானது ஆகும். இது 10மீ முதல் 100மீ வரையிலான அகலத்தினைக் கொண்டுள்ளது.
ஆரவல்லி என்பதற்கு சிகரங்களின் கோடு என்பது பொருளாகும். சுமார் 800 கிமீ நீளமுள்ள இம்மலையானது டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பரவியுள்ளது.
இம்மலையே பருவக்காற்றினைத் தடுத்து தார் நிலத்தை பாலைவனமாக்கி உள்ளது. 1722மீ உயரத்தில் உள்ள குரு ஷிகார் பகுதியே இம்மலையின் உயர்ந்த சிகரமாகும்.
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மவுண்ட் அபு இராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. கிழக்கு வென்னிஸ் என்றழைக்கப்படும் உதயப்பூர் நகரம் இம்மலையின் தெற்குசரிவில் அமைந்துள்ளது.
பனாஸ், லூனி, சபர்மதி ஆகிய ஆறுகள் இம்மலையின் வழியே ஓடுகின்றன. கனிம வளங்களுக்கு புகழ்பெற்ற இம்மலைத்தொடரானது ஏராளமான உயிரினங்களுக்கு வாழிடமாக உள்ளது.
6. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

சுமார் 1600மீ நீளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் குஜராதிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. இவை சயாத்திரி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தில் தபதி நதியிலிருந்து தொடங்கும் இம்மலைத்தொடர் அரபிக்கடலுக்கு இணையாக மகாராஷ்டிரா, கோவா,கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
இம்மலைத்தொடரின் 60 சதவீதம் கர்நாடக மாநிலத்தில் அமைந்தள்ளது. கேரளாவில் 2695மீ உயரத்தில் உள்ள ஆனைமலை இம்மலையின் உயர்ந்த சிகரமாகும்.
யுனெஸ்கோவின் உலக பராம்பரிய இடங்களில் ஒன்றான இம்மலைத்தொடர் உயிர்பன்முகத்தன்மை கொண்டது. இது 139 வகையான பாலூட்டிகள், 508 வகையான பறவையினங்கள், 179 வகையான இருவாழ்விகள், 250 வகையான ஊர்வனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது உலகில் உள்ள பத்து வெப்பமான பல்லுயிர் வனப்பகுதியில் ஒன்றாகும். இம்மலையில் ஜோக் நீர்வீழ்ச்சி, ஊட்டி, பந்திப்பூர் சரணாலயம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்றவை இம்மலையில் காணப்படும் முக்கிய ஆறுகளாகும்.
7. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்
கிழக்கு தொடர்ச்சி மலை
இம்மலைத்தொடர் இந்தியாவின் கிழக்கு எல்லையான வங்காளவிரிகுடாவிற்கு இணையாக கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.
தொடர்ச்சியற்ற உயரம்குறைவான இம்மலைத்தொடர் மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 1690மீ உயரம் கொண்ட ஜிந்தகடா இம்மலையின் உயர்ந்த சிகரமாகும். தென்னிந்திய நதிகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி போன்றவை இம்மலையின் வழியே பாய்ந்து அருகே உள்ள நிலங்களை வளப்படுத்தி இந்திய வேளாண்மையைச் செழிக்கச் செய்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைகளைவிட பழமையான இம்மலைத்தொடர் திருமலை திருப்பதி, சென்னிமலை உள்ளிட்ட ஆன்மீகத்தலங்களைக் கொண்டுள்ளது. விசாகப்பட்டினம், புவனேஸ்வர் ஆகிய நகரங்கள் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன.
Comments
“இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்” மீது ஒரு மறுமொழி
மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும்
மலைகள் கொண்ட மாநிலம் எது?