இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். இந்தியாவில்தான் உலகில் அதிக மழையைப் பெறும் பகுதி அமைந்துள்ளது.

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பல்வேறான காலநிலையும், வானிலையும் நிலவுகின்றன. மழைப்பொழிவும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

இந்தியாவில் அருணாசலபிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்ரகண்ட், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் அதிக மழையைப் பெறுகின்றன.

1.மௌசின்ரம், மேகலாயா

மௌசின்ரம்
மௌசின்ரம்

 

மௌசின்ரம் இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெறுகிறது. இதுவே உலகின் அதிக மழைப்பெறும் பகுதியும் ஆகும்.

இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 11,872 மிமீ ஆகும். மௌசின்ரம் மேகாலயாவில் கிழக்கு காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.

இங்கு மவ்ஸ்மிபின் குகையில் மழைப்பொழிவினால் சுண்ணாம்பு பாறையினுள் ஏற்பட்டுள்ள சிவலிங்க வடித்தின் தோற்றம் பிரமிக்கத்தக்கது.

 

சிவலிங்க வடித்தின் தோற்றம்
சிவலிங்க வடித்தின் தோற்றம்

 

கடுமையான மழைப்பொழிவினால் இங்கு நிலச்சரிவு அதிகமாக நடைபெறுகிறது. இங்குள்ள மக்கள் இங்கு நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களின் வாழிடத்தை அமைத்துக் கொள்கின்றனர். இவ்விடத்தை பார்வையிட செப்டம்பர் முதல் நவம்பர் வரை உள்ள காலம் சிறந்தது.

2. சிரபுஞ்சி, மேகலாயா

சிரபுஞ்சி
சிரபுஞ்சி

 

சிரபுஞ்சி இந்தியாவில் இரண்டாவது அதிக மழையைப் பெறும் பகுதியாகும். இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 11,430 மிமீ ஆகும்.

இவ்விடம் மேகாலயாவில் கிழக்கு காசி மாவட்டத்திலுள்ள காசி மலை உச்சியின் தென்பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. சிரபுஞ்சி மலைகளின் இரண்டு பள்ளத்தாக்குகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.

 

சிரபுஞ்சி

 

இங்கு இரவு நேரங்களில் மட்டுமே மழைப்பொழிவு நிகழ்கிறது. இதனால் பகல் நேரத்தில் வேலைகள் பாதிப்படைவதில்லை.

சிரபுஞ்சி என்பதற்கு ஆரஞ்சுகளின் நிலம் என்பது பொருளாகும். இவ்விடம் தற்போது சோரா என்றழைக்கப்படுகிறது. இவ்விடத்தைப் பார்வையிட அக்டோபர் முதல் மே வரை உள்ள காலம் சிறந்தது.

3. ஆகும்பே, கர்நாடகா

ஆகும்பே
ஆகும்பே

 

ஆகும்பே இந்தியாவில் மூன்றாவது அதிக மழையைப் பெறும் பகுதியாகும். இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 7620 மிமீ ஆகும்.

ஆகும்பே கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுநகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகான இடங்களில் இதுவும் ஒன்று.

 

ஆகும்பே

 

பசுமையாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் மழைக்காட்டு ஆராய்ச்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதிக மழை மற்றும் அடர்ந்த மழைக்காட்டினைக் கொண்டுள்ள இவ்விடமானது தெற்கு சிரபுஞ்சி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இவ்விடத்தில் சூரிய அஸ்தமனம் புகழ்பெற்றது. இவ்விடத்தை பார்வையிட நவம்பர் முதல் ஜனவரி வரை உள்ள காலம் சிறந்தது.

4. அம்போலி, மகாராஷ்டிரா

அம்போலி
அம்போலி

 

அம்போலி இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 7500 மிமீ ஆகும்.

இவ்விடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை வாழிடமாகும். இவ்விடம் மழைகாலத்து சுற்றுலாவிற்கு புகழ்பெற்றது.

 

அம்போலி

 

மிஸ்டர் பாரடைஸ் என்றழைக்கப்படும் இவ்விடமானது அழகான காடுகள், செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் ஏரளானமான நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.

 

அம்போலி நீர்வீழ்ச்சி
அம்போலி நீர்வீழ்ச்சி

 

இவ்விடத்தில் தனித்துவமான விலங்குகள் மற்றும் தாவரங்கள் காணப்படுகின்றன. சுமார் மேற்குதொடர்ச்சி மலையில் 690மீ உயரத்தில் அமைந்துள்ள இவ்விடம் மகாராஷ்டிராவின் ராணி என்றழைக்கப்படுகிறது. இவ்விடத்தை பார்வையிட ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உள்ள காலம் சிறந்தது.

5. மகாபலேஸ்வரர், மகாராஷ்டிரா

மகாபலேஸ்வரர்
மகாபலேஸ்வரர்

 

மகாபலேஸ்வரர் இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 5681 மிமீ ஆகும்.

இது மகாராஷ்டிரா மாநிலத்தில் சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இவ்விடமானது மழைகாலத்தில் அதிக மழைப்பொழிவினையும், ஏனைய காலங்களில் மிதமான மழைப்பொழிவினையும் பெறுகிறது.

 

மகாபலேஸ்வரர்

 

கோடைகாலத்தில் இவ்விடம் சுற்றுலா செல்ல ஏற்றது. இவ்விடத்தினைச் சுற்றிலும் புராணகாலக் கோவில்கள் காணப்படுகின்றன.

6.பாசிகாட், அருணாசலபிரதேசம்

பாசிகாட்
பாசிகாட்

 

பாசிகாட் இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 4388 மிமீ ஆகும்.

இது அருசாணசல பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அருணாசல பிரதேசத்தின் பழமையான நகரங்களில் ஒன்று.

இங்கு அழகிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இது சியாங் ஆற்றின் அருகே அமைந்துள்ளது. சியாங் ஆற்றில் சூரிய உதயம் மிகவும் ரம்மியமானது.

7. நேரியாமன்கலம், கேரளா

 நேரியாமன்கலம்
நேரியாமன்கலம்

 

நேரியாமன்கலம் இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 3849 மிமீ ஆகும்.

இது கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெரியாரின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இவ்விடம் எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு எல்லையாக உள்ளது.

அழகிய இயற்கை காட்சி, அற்புதமான சேயப்பரா நீர்வீழ்ச்சி, அரியவகை பறவைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இவ்விடம் சிறந்த சுற்றுலாத் தலமாகும்.

 

நேரியாமன்கலம்

 

அதிக மழைப்பொழிவிவைப் பெறும் இவ்விடம் கேரளாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. இவ்விடத்தை பார்வையிட நவம்பர் முதல் ஜூன் வரை உள்ள காலம் சிறந்தது.

8.கேங்டாங், சிக்கிம்

கேங்டாங்
கேங்டாங்

 

கேங்டாங் இந்தியாவில் எட்டாவது அதிக மழைபெறும் இடம் ஆகும். இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 3737 மிமீ ஆகும்.

 

கேங்டாங்
கேங்டாங்

 

இது சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ரும்தேக் மற்றும் சாம்கோ ஏரி, காங்ஷெங்சோங்கா தேசிய பூங்கா போன்ற இடங்கள் சுற்றுலா செல்ல ஏற்றவை. மழைகாலம் இவ்விடத்தை பார்வையிட சிறந்த காலம் ஆகும்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.