இந்தியா

இந்தியா அன்றும் இன்றும்

இந்தியா நமது தாய்நாடு.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே!

நாடு ஒன்று தான்! ஆனால் நம் வாழ்க்கைதான் பல மாறுதலுக்கு உட்பட்டு விட்டது. முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார் பாரதி அன்று. ஆனால் இன்று நூற்று பத்து கோடியாகிவிட்டது. மக்கள் தொகையில் மட்டுமா இந்த மாற்றம்? அடிப்படைகள் அனைத்திலும் பல மாற்றங்களை நம் பாரத தாய் சந்தித்து வருகின்றாள்.

 

நெஞ்சு பொறுக்கதில்லையே – இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைக்கையிலே!
அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை இந்த அவனியிலே!
என்று விடுதலை வேண்டி நின்றோம் அந்நியரிடம்.

பரங்கியரை விரட்ட வேற்றுமை விடுத்து ஒன்று பட்டோம்! நம் இயற்கை வளங்களைச் சுரண்டிய அயல் நாட்டவரை பல அறப் போராட்டங்கள் மூலம் அகற்றினோம். பெற்றோம் சுதந்திரம்.

சுதந்திரம் பெற்ற சுதந்திர இந்தியாவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களை மக்களே ஆளும் குடியாட்சியை நிறுவினோம்.தேசத்திற்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் வாயிலாக ஆட்சி அமைத்து சுதந்திர நாட்டைச் சீராக்கி நல்வழிப்படுத்தினோம் அன்று.

இந்தியா பல்வேறு தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டபோதும் அடிப்படையில் வளங்களை உற்பத்தி செய்து தன்னிறைவு கொண்டோம். அன்றைய இந்தியாவை நல்லதொரு முன்னேற்றத்தின் அடிப்படையில் கொண்டு செல்ல பல நல்ல திட்டங்களை தீட்டி நேர்மையான வழியில் மிகச் சிறந்த முன் உதாரணமாக வழி நடத்திச் சென்றனர் நம் முந்தைய தலைவர்கள்.

 

நாடென்ன செய்தது நமக்கு
என்ற கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு? – என்ற
அர்ப்பணிப்பு தொண்டு உணர்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டனர் அன்றைய இந்திய தலைவர்கள்.

ஆனால் இன்றைய நம் நாட்டின் நிலையை எண்ணிப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகின்றது. ஜனநாயக நாட்டிலா நாம் வாழ்கின்றோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கிலாந்து அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் நம் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அறிவியல், விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல நல்ல முன்னேற்றம் பெற்று வந்த போதிலும் இன்று அதனை நல்ல வழியில் மேம்படுத்துவது என்பது தேக்க நிலையிலேயே தொடர்கின்றது. இதற்கு என்ன காரணம்?

அன்றைய இந்தியாவில் வேற்றுமையிலும் ஒன்று பட்டு “இந்தியர்” என்ற உணர்வு மட்டுமே நிறைந்திருந்தது.

 

ஒன்றுபட்டோம்! உலகளவில் உயர்ந்து
நின்றோம்! “இந்தியர்” என்று பெருமிதம்
கொண்டோம்! சகோதரத்துவம், சமத்துவம்
கொண்டோம்! வருவதை பகிர்ந்து உண்போம்!
வந்தே மாதரம் என்போம்!
– என்ற உணர்விலேயே வாழ்ந்து வளர்ந்து வந்தது நம் அன்றைய இந்தியா.

ஆனால் இன்றைய “இந்தியத் தாயின்” நிலையைப் பாருங்கள்! ஒரு தாய் மடியில் பூத்த மலர்கள் முள்ளாய் மாறி வருகின்றனர். சாதி, மத, மொழி அடிப்படையில் சில புற்றீசல்கள் தோன்றி நம் ஒன்று பட்ட சிந்தனையை அழிக்க முற்படுகின்றன.

வாழ்ந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! என்ற நிலை மாறி பணம், புகழுக்கு, பதவிக்கு ஆசைப்பட்டு எதையும் செய்யத் துணிகின்ற நிலைக்கு வந்து விட்டனரே நம் பிள்ளைகள் என்று பாரதத் தாய் கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாள் இன்று.

பிறர் நலம் கருதாது “சுயநலம்” மட்டுமே கொண்ட தலைவர்களாலும், மக்களாலுமே நாம் பல துறைகளில் முன்னேற்றம் கொண்ட போதிலும் சீரிய தன்நிறைவு பெறுவது என்பதற்கு போராட வேண்டியுள்ளது.

அன்று அந்நியரை எதிர்த்துப் போராட்டம். இயற்கை வளங்கள் அனைவருக்கும் சமம் என்பதை உணராமல் குடிக்கும் நீருக்கு கூட போராட்டம் இன்று. ஒவ்வோரு போராட்டமும் ஒவ்வொரு விதத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது சோதனையும் வேதனையும் கூட.

விட்டுக் கொடுத்தல், அனைவரும் இந்தியர் என்ற மனப்பான்மை இன்றி இந்நிலை தொடர்ந்தால் நாம் அனைத்து துறைகளிலும் முன்னேறினாலும் அந்நியரின் வலையில் சிக்குண்டு தவிக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட நேரிடும்.

இதனை இன்று நாம் உணர்ந்தால் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பதனை நிரூபிக்கலாம். நம் இந்தியா இன்று உலக அளவில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகின்றது. விரைவில் வல்லரசாக மாறும் என்ற வகையில் பல்வேறு துறைகளிலும் தன்னை முன்னிறுத்தி நிரூபித்து வருகின்றது என்பதே இன்றைய இந்தியாவின் மறுக்க இயலாத நிலை. இதனைத் தக்க வைப்பது என்பது நம் ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

நம்மால் முடியும் என பல்வேறு துறைகளில் சாதிக்கும் நம்மால் ஒன்றுபட்ட தேசத்திற்கு துணை நிற்கவும் முடியும் என்பதனை மனதில் நிறுத்தி செயல்பட்டு வெற்றி காண்பது அவசியம்.