இந்தியாவின் பருவக் காற்றுகள்

இந்தியாவின் பருவக் காற்றுகள் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வடகிழக்கு பருவக் காற்று ஆகியவை ஆகும். இந்தியா தென்மேற்கு பருவக்காற்றால் 80 சதவீத மழைப்பொழிவைப் பெறுகிறது.

தென்மேற்குப் பருவக்காற்றால் இந்தியாவின் பெரும்பாலான இடங்கள் மழையைப் பெறுகின்றன. தமிழ்நாடு, ஆந்திராவின் கிழக்கு கடற்கரைப்பகுதிகள் வடகிழக்கு பருவக்காற்றால் அதிக மழையைப் பெறுகின்றன.

 

பருவக் காற்றுகள்

சூரியனிடமிருந்து வரும் வெப்பமானது ஒரே அளவில் பூமியை வந்தடைந்தாலும் ஒரே சமயத்தில் பூமியின் சில பகுதிகள் வெப்பமாகவும், சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.

இதற்கு புவியின் கோள அமைப்பும், 23½ டிகிரி சாய்வு நிலையில் அதன் சுழற்சியும் காரணங்களாகின்றன. புவியின் நிலப்பரப்பு நீர்பரப்பினைவிட வேகமாக வெப்பமாகவும், குளிர்ச்சியடையவும் செய்கின்றது.

எனவே நில மற்றும் நீர் பரப்புகள் வேறுபட்ட வெப்பநிலையைக் கொண்டுள்ளன. அவற்றின் மேற்பரப்பிலுள்ள காற்றுக்களின் அழுத்தமும் வேறுபாடடைகின்றன.

இதனால் காற்றானது அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி வீசத் தொடங்குகின்றது. இந்நிகழ்வு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிகழ்கின்றது. எனவே இவை பருவக்காற்றுகள் என்றழைக்கப்படுகின்றன.

இவ்வாறு வீசும் பருவக்காற்றுகள் பல இடங்களில் மழைப் பொழிவினை ஏற்படுத்துகின்றன.

 

தென்மேற்கு பருவக் காற்று

இந்தியாவின் கோடைகாலமாகிய ஏப்ரல், மே மாதங்களில் நிலப்பகுதியில் உள்ள‌ காற்றானது படிப்படியாக ஈரப்பதம் குறைந்து அதிகமாக வெப்பமடைந்து சுமார் 5 கிலோமீட்டர் உயரம்வரை மேல் நோக்கிச் செல்லும்.

அந்த வெற்றிடத்தை நிரப்ப ஈரப்பதமான காற்று தென் அரைக் கோளப்பகுதியில் இருந்து தென் கிழக்காக வீசத் தொடங்கி, அவை நிலநடுக்கோட்டைக் கடக்கும்போது புவியின் சுழற்சியினால் திசை மாற்றப்பட்டு இந்தியாவின் தென் மேற்குத் திசையிலிருந்து இந்தியாவின் நிலப்பரப்பை நோக்கி வீசுகிறது.

ஈரப்பதமான இந்தக் காற்று மழைப் பொழிவை ஏற்படுத்துகிறது. இது ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது. இந்தியாவின் தென் முனையில் இப்பருவக்காற்று முதலில் மழையைத் தருகிறது.

இப்பருவக்காற்று தென் இந்தியாவின் உயர்ந்த மலைகளான மேற்குத் தொடர்ச்சி மலையில் மோதி மேற்கு கடலோரப் பகுதிகளான கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளுக்கு மழையைத் தருகிறது.

மேற்கு மலைத் தொடர்ச்சியின் கிழக்கே உள்ள தமிழ்நாட்டில் வறண்ட காற்றாக வீசுகிறது. எனவே தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசமாக உள்ளது.

தெற்கே வீசும் தென்மேற்கு பருவக்காற்று இலங்கையைச் சுற்றி வங்கக்கடலின் வழியே சென்று அந்தமான், நிகோபார் தீவுகளிலும், வட இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான அஸ்ஸாம், நாகாலாந்து ஆகியவற்றிற்கு இமயமலைத் தொடரில் மோதி மழையைத் தருகிறது.

மேலும் இடப்பக்கமாக வளைந்து அங்குள்ள உத்திரப்பிரதேசம், உத்ராஞ்சல், டில்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் வழியே சுற்றி வந்து இறுதியில் இராஜஸ்தான் மாநிலத்தில் நுழைந்து ஆரவல்லி, விந்திய மலைத் தொடர்களை வந்தடைகிறது.

இராஜஸ்தானில் நுழையும்போது இக்காற்று ஈரப்பதம் குறைந்து வறண்ட காற்றாக வீசி குறைவான மழைப் பொழிவைத் தருகிறது. எனவே அப்பகுதி தார் பாலைவனமாகி விட்டது.

கோடை கால முடிவில் தொடங்கும் இப்பருவக்காற்று இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி அன்றோ ஓரிரு நாட்கள் முன்னும் பின்னுமாகவோத் தொடங்குகிறது.

பின் இது வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 10ஆம் தேதிகளில் தென்னிந்தியா முழுவதும் பரவி மழைப் பொழிவைத் தருகிறது. ஜூலை மாத பாதியில் இந்தியா முழுவதும் பரவி இந்தியாவிற்கு நல்ல மழையைத் தருகிறது.

தென்மேற்கு பருவக்காற்றினால் ஏற்படும் மழைப்பொழிவு ஏறத்தாழ எல்லா இடங்களிலும் ஒரே அளவாக இருக்கும்.

 

வடகிழக்கு பருவக் காற்று

தமிழ்நாடு மற்றும் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு இப்பருவக்காற்றே அதிக மழையைத் தருகின்றன.

இது பின்னடையும் பருவக்காற்று, திரும்பி வரும் தென்மேற்கு பருவக்காற்று, குளிர்கால பருவக்காற்று, நிலக்காற்று எனவும் அழைக்கப்படுகிறது.

தென்மேற்குப் பருவக்காற்றால் இந்தியாவின் நிலப்பரப்பானது மழையைப் பெற்று குளிர்ந்து காணப்படுகிறது. செப்டம்பர் 22-ந்தேதி முதல் சூரியன் தனது பயணத்தை தெற்கு நோக்கி ஆரம்பிக்கிறது. இதனால் கடற்பரப்பு வெப்பம் மிகுந்து காணப்படுகிறது.

அதனால் இவ்விடத்தில் உள்ள காற்று வெப்பமடைந்து அழுத்தம் குறைந்து மேலெழும்புகிறது. இதனால் நிலப்பகுதியிலிருந்து காற்றானது கடற்பரப்பினை நோக்கி வீசுகிறது. இதனால் இக்காற்று வறண்டு காணப்படுகிறது. எனவே இவை இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் மழைப் பொழிவைத் தருவதில்லை.

வறண்ட நிலக்காற்று வங்கக்கடலில் பயணிக்கும்போது ஈரப்பதத்தை தாங்கி கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிஸா ஆகிய இடங்களில் மழையைத் தருகிறது.

இப்பருவக் காற்று அக்டோபர் முதல் டிசம்பர் முடிய வீசகிறது. இப்பருவக்காற்று மழைப் பொழிவில் பெரும்வேறுபாடுகளையும், காலம் தவறிய மழைப் பொழிவையும் தருகிறது.

வங்கக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாலே வடகிழக்கு பருவமழை வலுக்க சாதகமாகிறது. இத்தாழ்வு மண்டலம் வலுத்து புயல் சின்னமாக உருவெடுப்பின் கனமழையைத் தந்து வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி பெரும் சேதத்தை உண்டாக்குகிறது.

இப்பருவக்காற்று காலங்களில் தொடர்ந்து மழை பெய்யாது, சில நாட்களில் சில மணி நேரங்களிலே பெரிய கன மழையாகப் பெய்கிறது. அதன் பின் பல நாட்கள் வறண்ட வானிலை நிலவுகிறது.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.