இந்திய அரசியல் என்பது மதம், இனம், மொழி, சாதி என மிக அதிகமான வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு நாட்டின் அரசியல்.
இது உலகிலேயே தனித்துவம் கொண்ட ஒரு நாட்டின் அரசியல். எளிதாக நம்மால் வேறு ஒரு நாட்டின் அரசியலை இந்திய அரசியலோடு ஒப்பிட முடியாது.
இந்த அதிகமான வேறுபாடுகளை பணம் என்னும் ஒரே கருவி எளிதில் வென்று விடுகின்றதோ என்றும் எண்ண வைக்கின்றது.
இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பது ஒரு மிக நல்ல செயல்.
ஆனால் அந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றார்கள்? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என்ற பெருமை நமக்கு உள்ளது.
இந்திய சுதந்திரம் என்பது மிக உயரிய கொள்கைகளைத் தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட ஒரு தலைவரின் தியாக வாழ்வாலும், அவரைப் பின்பற்றித் தம் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்த எண்ணற்ற தொண்டர்களாலும் சாத்தியமான ஒன்று.
சுதந்திரம் அடைந்த உடன், நமது மக்களாட்சி முறைக்கு, மிக நல்ல அடிப்படைக் கட்டமைப்பு, அன்றைய தலைவர்களால் அமைக்கப்பட்டது.
பசி, பட்டினி என வறுமை ஒருபுறம் கோரத்தாண்டவம் ஆடியது. வளர்ச்சிக்கான தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லாமல் பெரும்பாலான பொருட்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.
இந்த சவால்களை நாம் இன்று பகுதியாக வென்று விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.
1947ம் ஆண்டு சுதந்திரத்தின் போது முழு நிலவாய் திகழ்ந்த இந்திய அரசியல் இப்போது தேய்பிறையாய் அமாவாசைக்கு அருகில் உள்ளது.
அரசியல் என்று அல்ல; ஒட்டு மொத்த பொது வாழ்வும் ஒளி மங்கிப் போய்தான் உள்ளது. பொதுவாழ்வில் உத்தமர்களே நிறைந்திருந்த காலம் மலையேறி விட்டது.
இன்றைய இந்திய அரசியல் நிலை என்ன?
1.வெற்றி; எப்படியாவது வெற்றி என்பதே அரசியலின் நோக்கமாக உள்ளது.
2.குணம் அல்ல; பணம் என்பதே ஏற்புடையதாகி உள்ளது.
3.கொள்கை என்ற ஒன்று யாருக்கும் இல்லை.
4.மிகையான வாக்குறுதிகள் விண்ணை முட்டுகின்றன.
5.செயலல்ல; சொல்தான் ஆதிக்கம் செய்கிறது.
ஆண்ட கட்சி, ஆளும் கட்சி, ஆளப்போகும் கட்சிகள், ஆளே இல்லாத கட்சிகள் என எல்லாக் கட்சிகளின் நிலையும் இதுதான்.
இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தனது பணம், நேரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொடுப்பதற்காக, இன்று யாரும் அரசியலுக்கு வருவதில்லை.
பணம், புகழ், பதவி, அதிகாரம் ஆகியவற்றை அடைவதற்காக அரசியலைப் பயன்படுத்துபவர்கள்தான் அரசியலுக்கு வருகின்றார்கள்.
மக்களுக்காகத் தலைவர்கள் என்பது மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் தலைவர்களின் வாழ்வுக்காக மக்கள் என்று ஆகிவிட்டது மக்களாட்சியின் நடைமுறை. – கண்ணதாசன்
தலைவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லோரும் அரசியல்வாதிகளாகத்தான் தெரிகின்றார்கள்.
நம்மை இன்னும் ஐந்து ஆண்டு காலம் வழி நடத்தப் போகும் ஆட்களை நாம் தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டது.
மதம், இனம், மொழி மற்றும் சாதி சொல்லி நம்மைக் கூர்மையாகப் பிரிப்பார்கள். நமக்குப் பணத்தை வாரி வழங்குவார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார்கள்.
நாமும் ஏதாவது ஒன்றில் மயங்கி விடுவோம்.தேர்தல் முடிந்ததும் நம்மை மறந்து விடுவார்கள். நாமும் விதியின் மீது பழி போட்டு விட்டு நமது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுவோம்.
வாழ்க நம் தாய்த் திருநாடு!
மறுமொழி இடவும்