இந்திய உச்ச நீதிமன்றம்

உச்ச நீதி மன்றம் சுதந்திரமான, ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய‌ நீதித்துறையின் தலையாய அமைப்பாகும்.

இந்திய‌ நீதித்துறை மத்திய, மாநில அரசுகளின் சட்டம் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின தலையீடுகளில்லாமல் சுதந்திரமாக இயங்குவதாகும்.

ஒருங்கிணைக்கப்பட்ட நீதித்துறை என்பது நாடு முழுவதும் பல அடுக்குகளிலுள்ள நீதி மன்றங்கள் அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் செயல்படுவது என்று பொருள்படும்.

குடிமக்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

அதுமட்டுமின்றி, அரசியலமைப்பு விதிகளை விளக்குவதிலும், நிர்வாக சட்டமன்றத் தலையீடுகளிலிருந்து அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும், நீதித்துறை முக்கியப் பங்காற்றுகிறது.

 

உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதி மன்றம் இலச்சினை
இந்திய உச்ச நீதி மன்றம் இலச்சினை

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது உச்சநீதிமன்றத்தில், ஒருதலைமை நீதிபதி உட்பட எட்டு நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர். தற்சமயம் உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 26 நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்.

 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் மற்ற நீதிபதிகளையும், குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார்.

நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்யப்படும் நீதிபதிகளைத் தவிர தற்காலிக அடிப்படையிலும் சில நீதிபதிகளை நியமனம் செய்வதற்கும் அரசியலமைப்பில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

 

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தகுதிகள்

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2. உயர் நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

உயர் நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பதவிக் காலம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் பிற நீதிபதிகளும் 65 வயது நிறைவடையும் வரை பதவி வகிக்கலாம்.

பதவி காலத்திற்கு முன் கூட்டியே தங்களது ராஜினாமாவை குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்.

பாராளுமன்ற குற்றச்சாட்டுகள் மூலமும் பதவி நீக்கம் செய்யலாம்.

உச்ச நீதிமன்றம் இந்தியாவின் தலைநகரான தில்லியில் அமைந்துள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியாவின் வேறு எந்த ஒரு பகுதியிலும் அமர்வுகளை நடத்தி முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது கைப்பட பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்குத் தந்து பதவிக் காலம் முடியும் முன்னரே பதவி விலகலாம்.

முறைக்கேடுகளுக்காக உரிய வழிமுறைகளைப் பின்பற்றி எந்த ஒரு நீதிபதியையும் நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்ய முடியும். இதனை ‘குற்றப் பிரேரணை’ என்பர்.

 

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களும் செயல்பாடுகளும்

நீதி வழங்கும் அதிகாரங்கள்

உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக விளங்குகிறது. இரண்டு முக்கிய அதிகாரங்களான முதல்நிலை விசாரணை மற்றும் மேல்முறையீட்டு அதிகாரம் ஆகியவற்றைப் பெற்றுத் திகழ்கிறது.

முதல் விசாரணை அதிகாரம்

உச்ச நீதிமன்றத்திற்கு நேரிடையாக முதன்முதலாகக் கொண்டுவரப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை முதல் விசாரணை அதிகாரம் என்று அழைப்படுகிறது.

இவை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான சிக்கல்கள், மாநில அரசுகளுக்கிடையேயான சிக்கல்கள், அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் போன்றவற்றை உச்ச நீதிமன்றம் நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.

அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தால் நீதிப்பேராணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அவை

1. ஆட்கொணர் நீதிப்பேராணை

2. செயலுறுத்தும் நீதிப்பேராணை

3. தடைப்பேராணை

4. ஆவணக்கேட்புப் பேராணை

5. தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை

உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் மேற்கண்ட ஐந்து ஆணைகளை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசியலமைப்பில் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலன் என்று அழைக்கப்படுகிறது.

 

ஆட்கொணர் நீதிப்பேராணை

சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களைக் காக்கிறது.

செயலுறுத்தும் நீதிப்பேராணை

விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து, பொது சொத்தை பாதுகாக்கிறது.

தடைப்பேராணை

துணை நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்கிறது.

ஆவணக்கேட்பு பேராணை

துணை நீதிமன்றங்களின் வரம்பு மீறி வெளியிடும் ஆணைகளை நீக்குதல்

தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை

பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்

 

மேல்முறையீட்டு அதிகாரங்கள்

சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

அதற்கு உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலும் தேவை. இத்தகைய உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தைத்தான் மேல் முறையீட்டு அதிகாரங்கள் என்கிறோம்.

 

நிர்வாகப் பொறுப்புகள்

பாதிக்கப்பட்டவர்க‌ளுக்கு நீதி கிடைப்பதற்காக, பல அடுக்குகளில் நீதிமன்றங்கள் சங்கிலித் தொடர்போல அமைந்துள்ளன.

தற்போது 21 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. சில உயர் நீதிமன்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் அல்லது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வழக்குகளை எடுத்துக் கொள்கின்றன.

உயர் நீதிமன்றத்திற்கு கீழே பலவிதமான சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன.

அண்மைக் காலத்தில் விரைவாகவும், குறைந்த செலவிலும் நீதி கிடைப்பதற்காக குறிப்பாக ஏழை மக்களுக்கு கிடைப்பதற்காக லோக் அதாலக் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டின் உரிமை பணிச் சட்டத்தின்படி லோக் அதாலக் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை நீண்ட காலம் தேங்கிக் இருக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றன.

இதன் மூலம் மக்கள் தங்களின் பணம், நேரம், சக்தியை பாதுகாக்கலாம்.

குற்றவியல் வழக்குகளைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளுக்கும் இந்நீதி மன்றங்களின் மூலம் தீர்வு காணலாம். இவை விரைவு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள பல வழக்குகளுக்கு இந்நீதி மன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன.

அரசியல் சட்டப் பிரச்சனை தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் பெற விரும்பினால் அத்தகைய ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திற்கு உரியதாகும்.

 

நீதிப் புனராய்வு

சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டத்தையும் அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை ‘நீதிமன்ற மறுபரிசீலனை’ என்கிறோம்.

இந்த சட்ட மறுபரிசீலனையின்படி, இந்தியாவில் உள்ள நாடாளுமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என்று கண்டால் அந்தச் சட்டம் “செல்லுபடியாகாது” என்று அறிவிக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.

நிர்வாக அமைப்பு மற்றும் சட்டமன்றங்கள் மீறிச் செயல்படுவதை இந்த ‘மறுபரிசீலனை’ கட்டுப்படுத்துகிறது. எனவே உச்ச நீதிமன்றத்தை “அரசியலமைப்பின் பாதுகாவலன்” என மிகச்சரியாகக் குறிப்பிடுகின்றனர்.

இராணுவ தீர்ப்பாயங்களில் அறிவிக்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. இராணுவ தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.