இந்திய குடியரசுத் தலைவர்

இந்திய அரசியலமைப்பின்படி, குடியரசுத்தலைவர், இந்திய குடியரசின் தலைவராகவும், இந்திய ஒன்றியத்தின் (யூனியன்) நிர்வாகத் தலைவராகவும் விளங்குகிறார். மேலும் நீதித்துறைக்கும் பொறுப்புடையவராவார்.

53-வது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடமே உள்ளன.

இவ்வதிகாரங்களை இவர் நேரிடையாகவோ அல்லது அவர் கீழ் இயங்கும் அலுவலர்கள் மூலமாகவோ செயல்படுத்தலாம்.

 

இந்திய குடியரசுத் தலைவருக்கான தகுதிகள்

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.

லோக் சபை என அழைக்கப்படும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய தகுதி உடையவராக இருக்க வேண்டும்.

மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊதியம் பெறும் பதவியில் இருக்கக் கூடாது.

நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும், மாநில சட்ட மன்ற அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது. அப்படி உறுப்பினராக இருந்தால் குடியரசு தேர்தலுக்கு முன்னர் விலகி விட வேண்டும்.

 

இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல்

விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பின்பற்றி ஒற்றை மாற்று வாக்கு முறையில் தேர்வாளர் குழுவால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இத்தேர்வாளர் குழுவில் நாடாளுமன்ற இருஅவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்.

பதவிக்காலம் முடியும் முன்னரே குற்ற விசாரணை மூலமாக இவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தினால் முடியும் (சட்டத்திருத்தம் 61).

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அவர் மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தகுதி உடையவராவார்.

இவர் பதவி விலக விரும்பினால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசு துணைத் தலைவர் மக்களவை தலைவருக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ராஜினாமா பற்றி அறிவிப்பார்.

 

இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள்

இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன‌. அவை
1. நிர்வாகப் பணிகள்

2. நெருக்கடி கால அதிகாரங்கள்

 

நிர்வாகப் பணிகள்

சாதாரண காலங்களில் கீழ்கண்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வார்.

1. நிர்வாக அதிகாரங்கள்

2. சட்டமன்ற அதிகாரங்கள்

3. நிதி அதிகாரங்கள்

4. நீதித்துறை அதிகாரங்கள்

5. இராணுவ அதிகாரங்கள்

 

நிர்வாக அதிகாரங்கள்

இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆவார். நாட்டின் நிர்வாகம் இவரது பெயரால் மேற்கொள்ளப்படுகிறது.

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்து சட்டங்களும் இவரது ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக வெளிவரும்.

பல்வேறு உயர் பதவிகளை இவரே நியமனம் செய்கிறார். பிரதம அமைச்சரை நியமனம் செய்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற உச்ச நீதி மன்ற நீதிபதிகளையும், உயர் நீதிமன்ற தலைமை மற்றும் பிற நீதிபதிகளையும் நியமனம் செய்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் தலைவரையும், அட்டார்னி ஜெனரல் மற்றும் தணிக்கைக் குழு தலைவரையும் தேர்ந்தெடுக்கிறார்.

மத்திய பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும், ராணுவ படைத் தளபதிகளையும் நியமனம் செய்கிறார். முப்படைகளுக்கும் தலைவராகவும் விளங்குகிறார்.

 

சட்டமன்ற அதிகாரங்கள்

மத்திய நாடாளுமன்றத்தின் தலைவர் குடியரசு தலைவர் ஆவார். நாடாளு மன்றத்தின் இரு அவைகளையும் கூட்டவும், தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

முதல் நாடாளு மன்றத்தின் கூட்டத்தைத் துவக்கி உரை நிகழ்த்துகிறார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும், இவரது இசைவு பெற்ற பின்னரே சட்டமாகிறது. பண மசோதா இவரது முன் அனுமதி பெற்றே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்புப் பெற்றவர்களில் 12 உறுப்பினர்களை ராஜ்ய சபைக்கு நியமனம் செய்கிறார்.

 

நீதித்துறை அதிகாரங்கள்

குடியரசுத் தலைவர் எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. எனினும் பாராளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தலாம்.

குற்றவாளிகளின் தண்டனைகளை குறைக்கவோ, கூட்டவோ அல்லது தள்ளுபடி செய்யவோ இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மரணதண்டனையைக் கூட தள்ளுபடி செய்யலாம்.

 

நிதித்துறை அதிகாரங்கள்

நாட்டின் நிதிக்கு குடியரசுத் தலைவரே முழு பொறுப்பாவார். இவரது பரிந்துரையில்லாமல் எந்த ஒரு நிதி மசோதாவும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.

ஆண்டு வரவு செலவுக் கணக்கு இவரது அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்படுகிறது.

எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து செலவழிக்கும் உரிமை குடியரசு தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவர் அந்நிதியிலிருந்து நாடாளுமன்றத்தில் இறுதி அங்கீகாரம் பெறும் முன்னர் அரசின் எதிர்பாராச் செலவுகளைச் சமாளிக்க அரசுக்கு முன் பணம் வழங்க அதிகாரம் பெற்றுள்ளார்.

 

நெருக்கடி நிலை அதிகாரங்கள்

இந்திய நிலைமைகளை சமாளிக்க குடியரசுத் தலைவருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை ‘நெருக்கடி நிலை அதிகாரங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. மூன்று நெருக்கடி நிலை அதிகாரங்களை குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார்.

 

தேசிய நெருக்கடி நிலை

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், போர், அயல்நாட்டுப் படையெடுப்பு மற்றும் ராணுவ கிளர்ச்சி ஏற்படும்போது அதனை சமாளிப்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 352-வது பிரிவு வழிவகை செய்கிறது.

இதன் மூலம் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவித்து நாட்டை பாதுகாக்க முடியும்.

 

அரசு நெருக்கடி

ஒரு மாநிலத்தில் மாநில அரசு, அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும்போது அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலைமையை கொண்டு வர இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவு வழிவகை செய்கிறது.

இதன்படி மாநிலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகத்தை ஏற்றுக் கொள்கிறார்.

 

நிதி நெருக்கடி

இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நெருக்கடி தோன்றினால் அதனை சமாளிப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 360-வது பிரிவு வழிசெய்கிறது. இதன்படி நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியிலோ நெருக்கடி நிலைமை அறிவிக்கப்படுகிறது.

 

குடியரசுத்தலைவர் இந்திய குடியரசின் தலைவராகவும் நிர்வாகத் தலைவராகவும் விளங்கி நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவராகின்றார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.