இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள்

இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்னும் அரிய நூல், மூன்று முறை தேசிய விருது பெற்ற‌ டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட நூலாகும்.

முன்னுரை

இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் எனும் தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்நூலில், இந்திய நாட்டின் தலைசிறந்த உடற்பயிற்சிகளாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தண்டால், பஸ்கி,  பற்றி கூறப்பட்டுள்ளன. இவற்றினை எழிலுறச் செய்து பயன்பெறும் முறைகள் பற்றி முறையாக விளக்கப்பட்டிருக்கின்றன.

முதல் முறையாக இந்த அரிய முயற்சிகளை தமிழில் கொண்டுவர முயற்சித்து, ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

பல ஆண்டுகளாக எழுத முயன்று, அடிக்கடி தோன்றிய ஐயங்களினால் அல்லல்பட்டு, தெளிந்துகொள்ள இயலாத நிலையில், தயங்கி நின்றும் மயங்கி நின்றும் மலைத்துப் போய் முயற்சியை அப்படியே நிறுத்தி விட்டிருக்கிறேன்.

இருந்தாலும், மனதுக்குள் உதித்த நினைவு மறைந்து போய் விடவில்லை. போகும் இடங்களில் எல்லாம் இதுபற்றிய குறிப்பினை சேகரிக்க முயன்றேன்.

துளித்துளியாகப் பெற்ற அனுபவங்கள், இப்பொழுது எழுதிடும் துணிவை எனக்குத் தந்தன. தொடர்ந்து என் முயற்சியை மேற்கொண்டேன்.

இம்முயற்சியே இப்பொழுது நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

தண்டால், பஸ்கிப் பயிற்சிகளைப் பற்றிய குறிப்புக்களை சுருக்கமாகவே விவரித்துள்ளேன்.

எளிமையாகத் தோன்றும் பயிற்சிகளான இவற்றைத் தொடர்ந்து செய்தால் எண்ணற்ற பயன்களைப் பெறலாம் என்று எண்ணிச் செய்து எழிலுறத் திகழ்ந்த நம் முன்னோர்கள், சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றார்கள்.

 

வரலாற்றுச் சிறப்புப் பெற்ற தண்டால் பஸ்கிப் பயிற்சிகள், காலத்தின் கோளாறால், மிகஅற்பமாக எண்ணப்படுகின்ற நிலையில் இருப்பதை நாம் காண்கிறபொழுது, வேதனையாக இருக்கிறது.

 

வேதனை தரும் சோதனையையும் வென்று, இன்று இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள் இனம் தலைமுறையினரிடையே வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.

பள்ளிகளில் எங்கும் கட்டாய உடற்கல்விப் பாடம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள், செய்முறையில் சிறந்த முயற்சியினை உடற்கல்வி ஆசிரிய ஆசிரியைகள் மூலம் சிறப்புறப் பெற்றுக் கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு உறுதுணையாக உதவும் வண்ணம் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

தண்டால் பயிற்சிகள், பஸ்கிப் பயிற்சிகள் பற்றிய விளக்கமும் விவரமும் முற்பகுதியில் தரப்பட்டிருக்கின்றன. அதன்பின், தண்டால் பயிற்சிகள் பற்றிய பெயர் விளக்கமும், செய்முறை விளக்கமும் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு பயிற்சியையும் உன்னதமாகப் புரிந்துகொள்ளும் வண்ணம், விளக்கத்திற்கு அருகிலேயே படங்களும் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து பயிற்சி முறையை பொறுப்புடன் செய்திட படங்கள் உதவி செய்யும்.

அத்துடன், சாகசச் செயல்கள் எனும் தலைப்பில் மாணவ மாணவிகள் பயிற்சி செய்திடும் வண்ணம் ஒரு சில விளையாட்டுக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. உடற்கல்விப் பாடத் திட்டத்தில் உள்ள அத்தனை விளையாட்டுக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

மாணவ மாணவிகள் மட்டுமன்றி, இளைஞர்கள் மற்றும் உடலை எழிலாகவும் வலிமையுடனும் வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும், தாங்களே கற்றுக்கொண்டு இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் செய்திடும் வண்ணம் இந்நூல் செய்முறைகள் விளக்கமாகத் தரப்பட்டிருக்கின்றது.

எனது நூல்களை அன்புடன் ஏற்று ஆதரிக்கும் அன்பாளர்கள், பண்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றியும் வணக்கமும்.

அன்புடன்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

One Reply to “இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள்”

  1. மிகவும் பயனுள்ள பதிவு, நான் தினமும் செய்து வரும் தண்டால் பயிற்சியைப்பற்றிய பதிவு என்பதால் மேலும் சிறப்பு சேர்கிறது இந்த பதிவு. தங்கள் முயற்சிக்கு நன்றி.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.