ஆசிய விளையாட்டில் 16 வருடங்களுக்குப் பின் இந்தியா ஹாக்கியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
தற்பொழுது உலக விளையாட்டரங்கில் ஏறுநடை போடும் இந்திய ஹாக்கியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஹாக்கி 1885ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டாகும். உலக அரங்கில் அசைக்க முடியாத ஜாம்பவனாக திகழ்ந்த இந்தியா 1928 முதல் 1956 வரை நடந்த ஒலிம்பிக்கில் 6 முறை தொடர்ந்தும், 1964, 1980ல் நடந்த ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் பெற்று மொத்தம் 8 தடவை தங்கம் வென்ற நாடு என்ற சரித்திரம் படைத்தது. மேலை நாடுகள் அனைத்தும் இந்தியாவை வியந்து பார்த்தன.
1960ல் வெள்ளியும் 1968, 1972ல் வெண்கலமும் வென்ற இந்திய ஹாக்கி அணி உலக அரங்கில் சிறப்பாக செயல்பட்டது. அதற்குக் காரணம் இந்திய அணி வீரர்கள் பந்தை தட்டி செல்வதில் கில்லாடிகள். எதிரிகளை தங்களுடைய திறமையால் அடிபணியச் செய்தனர். அமெரிக்க அணிக்கு எதிராக இந்தியா 1932 லாஸ்ஏஞ்சல் ஒலிம்பிக்கில் 24–1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது இதுவரை முறியடிக்கப்படாத சாதனை ஆகும்.
மண் தரையில் டிரிபிளிங், ஹிட்டிங், பாஸிங் போன்ற திறன்களில் இந்தியர்களை மிஞ்ச எவருமிலர் என்ற நிலை 1980 வரை இருந்தது. மேலை நாடுகளான ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளால் இந்தியா மிகவும் எதிரியாகக் கருதப்பட்டது.
“வாழ்ந்தவன் வீழ்ந்தான்” என்பது போல் ஹாக்கி விளையாட்டில் ஒரு சறுக்கம் ஏற்பட்டது. ஹாக்கி விளையாட்டுதானே இந்தியா வென்று விடும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும், ஹாக்கி சம்மேளனத்திடமும் இருந்தது. ஆனால் அதற்குரிய முன்னேற்றங்களுக்கான செயல்பாடுகளை அதிகம் செய்யவில்லை.
1984 முதல் 1996 வரை நடந்த ஒலிம்பிக்கில் 5,6,7,8 என்ற இடத்தை பெற்றனர். 2000 மற்றும் 2004ல் 7வது இடத்தை பெற்றனர். தகுதியே பெறாமல் மிகவும் மோசமான நிலைமையை 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் அடைந்தது. 2012 ஒலிம்பிக்கில் 12வது இடத்தைப் பெற்றனர். 2016ல் நடக்க இருக்கும் ஒலிம்பிற்கு தகுதி அடைந்துள்ளது என்பது சற்று மகிழ்ச்சி. காரணம் என்னவென்றால் ஆசிய விளையாட்டில் 16 வருடங்களுக்குப் பின் இந்தியா தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
-த.முருகேசன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!