1970வாக்கில் ஆசிய கண்டங்களிலிருந்து ஹாக்கியின் சாதனையை மாற்றும் நோக்கில்
அற்ப காரணங்களை காட்டி “டர்ப் புல்வெளி” மைதானத்தில் விளையாட வேண்டும் என கூறியது உலக ஹாக்கி சம்மேளனம்.
அதன்படி 1976 மான்ட்ரியல் ஒலிம்பிக்கில் டர்ப் மைதானத்தை அறிமுகப்படுத்தியது. மண் தரையில் விளையாடினால் அதிகம் சிராய்ப்புகள் வீரர்களுக்கு ஏற்படுகிறது என்று காரணம் கூறப்பட்டது. ஒட்டு மொத்தமாகவே சதி செய்யப்பட்டது என்று கூறலாம., இருப்பினும் இந்தியா 1976 ஒலிம்பிக்கில் 7வது இடம் பெற்றது.
1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தமிழரான பாஸ்கரன் தலைமையில் தங்கப்பதக்கம் பெற்றது. அதன்பின்னர் இந்திய அணியின் வீழ்ச்சி தெரியவந்தது.
இந்தியாவில் டர்ப் மைதானங்களை அமைப்பதற்கு பல லட்சங்கள் செலவு ஆகும். அதுபோல பராமரிப்புச் செலவும் அதிகம். ஆனால் மேலை நாடுகளில் ஊருக்கு ஒன்று தயார் செய்து அதில் பயிற்சி செய்தனர். ‘டிரிபிளிங்’ திறனுக்கு டர்ப் மைதானத்தில் அதிகம் வேலை கிடையாது. பந்தானது வேகமாக செல்லும், ‘ஹிட்டிங்’ மற்றும் ‘ஸ்டாப்பிங்’ திறன்தான் அதிகம் பயன்படுத்தப்படும்.
இந்தியாவில் மைதானம் அதிகம் இல்லாததால் மண்தரையில் ஹாக்கி பழகி டர்ப்ல் விளையாடி வெற்றி பெறுவது மிக கடினம். பின்னர் நீலநிற செயற்கை டர்ப்ல் விளையாட ஆரம்பித்தது உலக நாடுகள், அதிலும் பழக்கப்படாமல் இருந்ததால் இந்திய வீரர்களின் திறன் ஜொலிக்கவில்லை.
இந்திய ஹாக்கி வீரர்களையும் தேச அணியையும் ஆட்சியாளர்கள் சரிவர கண்டுகொள்ளவில்லை. தயான் சந்த்திற்கு ஏற்பட்ட நிலை போதாதா? இந்திய ஹாக்கி சம்மேளனமும் நிர்வாகமின்மையால் சரிவர செயல்படாமல் இருந்தது.
கிரிகெட் இந்தியாவில் வேரூன்ற ஆரம்பித்த உடனேயே மக்களின் பார்வையும் அதன் மீது அதீதமாக செலுத்தப்பட்டது. மீடியாக்கள் கிரிகெட்டையே தூக்கி வைத்தனர். எல்லா விளையாட்டுக்களையும் ஆட்சியாளர்கள் சரிசமமாக பார்த்து அதற்குரிய உதவிகளை செய்ய வேண்டும். விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தோன்றுகின்றனர். ஹாக்கி, கால்பந்து வீரர்கள் இன்னும் பிரபலமடையவில்லை.
– த.முருகேசன்