இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

 நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். 

அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
    
அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது. 

எங்கள் கிராமம் 50 வீடுகளைக் கொண்ட, சுமார் 150 பேர் வசிக்கும், ஒத்தையடிப் பாதையும் மண் சாலையும் கொண்ட, பேருந்து போக்குவரத்தே இல்லாத கிராமம். 

அழகான பசுமையான பண்பான பாசமான ஊர் அந்நாளில்.  எங்கள் ஊரில் நிறைய வேப்ப மரங்களும் ஒரு ஆலமரமும் உண்டு.  இரண்டே இரண்டு புளியமரம் அக்கா, தங்கை போல. 

அக்கா மரம் எனது தாத்தாவின் அப்பா காலத்தில் பிறந்தது என்று கேள்விப்பட்டதாக மனதில் படிகிறது. 

அந்த மரத்தில் ஏராளமான பறவைகள் வாழ்ந்து, ஓய்வெடுத்து வீடும் அமைத்து அங்கேயே அடங்கியும் இருக்கிறதாம்.  ஒரு நாள் திடீரென்று ஏராளமான கருடக் கழுகுகளும் இருந்ததாம்.

ஏதோ ஒரு காரணத்தால் சண்டை எழுந்து அக்கா புளியமரத்தை வெட்டி விட்டார்களாம்.  எனது அப்பா காலத்தில் அந்த அக்காமரம் மீண்டும் புதுப்பொலிவுடன் வளர ஆரம்பித்தாளாம்.  இப்பொழுது எங்கள் காலமும் வந்து விட்டது இன்றும் இருக்கிறாள்.

அக்கா மரமும் தங்கை மரமும் அருகருகே இருந்தாலும் அவர்களை பிரிக்கிறார், எங்கள் ஊர் அய்யனார்.  அய்யனார் என்றவுடன் பெரிய மீசையும் கையில் அரிவாளும் எனக் கற்பனை செய்ய வேண்டாம். 

நடக்கும் குழந்தையின் உயரமும் சற்றே பருமனான உடல்வாகு தரும் அகலமும் கொண்ட சிலைகூட அல்ல; கல் மட்டுமே. அவருக்கு இடுப்பு இல்லை என்றாலும் இடுப்பில் கட்டுவது போல் ஒரு துண்டு அவரைச் சுற்றி. 

ஒரு சுற்றுச்சுவர், சுற்று சுவர் சிறு குழந்தை அமரும் உயரம் மட்டுமே, மூடாக்கு இல்லை. சுவரின் உள்ளே விளக்கு வைக்க இரு மாடங்கள் போன்ற சதுர வடிவ ஓட்டை. அதற்கு பின்னால் பெரிய குளம். 

தாத்தா காலத்தில் அந்த குளத்தில் ” கெத்கெத்” என்று தண்ணீர் இருக்குமாம்.  ஆனால் எனது காலத்தில் அதில் சாக்கடை நீர் ஓர் ஓரத்தில் தேங்கியிருந்தது. அன்று பரவாயில்லை இன்று கருவேலமரம் நிறைந்து காணப்படுகிறது. 

புளியமரம் இரண்டும் பூக்கத் தொடங்கியது தான் தாமதம், என் அண்ணன் மற்ற வாலிபர்களுடன் சேர்ந்து எங்களை எல்லாம் அழைத்து கூட்டம் கூட்டுவான். 

அக்கூட்டம் குதுகாலிக்கும் விருந்திற்கு என்று தெரியும்.  ஆனால் அண்ணனை அதன் தலைவனாக நினைத்து அவன் கூறுவதை கூர்ந்து கவனிப்போம்.  இது பொதுவாக வெள்ளிக்கிழமை மாலையில் நடக்கும். 

மறுநாள் மதியம் தங்கை புளியமரத்தின் அருகே உள்ள பட்டிக்கல்லில் எங்கள் கூட்டம் கூடும்.  அண்ணனின் ஆணையின்படி வீட்டில் இருந்து சர்க்கரை எடுத்து வந்திருப்போம்.

 ஆனால் அவன் “கொண்டு வந்தீர்களா?”  என்று கேட்ட பின்புதான் எங்கள் உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த சர்க்கரையை நீட்டுவோம்.

அவனும் புன்சிரிப்பு வெளியில் தெரியாதபடி கையில் இருந்து வாங்குவான். ஏற்கனவே பெறக்கி அரையும் குறையுமாக அரைத்து வைத்திருந்த புளியம் பூ பச்சடியுடன் சிறிது சிறிதாக சேர்ப்பான்.

மோர்ந்து மோர்ந்து பார்த்து ஏங்கிய பார்வை வரும் வரை காத்திருக்க வைத்து, அவன் செய்த அந்த உணவை உருண்டை பிடித்து தருவான். 

அது வாயில் பட்டு அமிர்தம் போல் இருக்கும்.  மதியம் அம்மா வைத்த சாப்பாட்டை கூட சாப்பிடமாட்டோம், எங்கே அந்த சுவை வாயில் இருந்து பறிபோய்விடுமோ என்று. வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருக்கும் அதை நினைக்கும் பொழுது. 

இன்றும் நினைக்கிறேன் எச்சில் ஊறுகிறது. துவப்பும், இனிப்பும் சேர்ந்து தரும் சுவை. அடுத்து புளியம் பிஞ்சில் மிளகாய் பொடியும் உப்பும் சேர்ந்து சாப்பிடுவோம்.

சாரக்காற்று சாரலுடன் வீசும்.  அப்பொழுது அக்கா புளியமரத்தின் கிளைகள் சரசரவென உரசி வீட்டிற்குள் இருக்கும் எங்களை அதனருகே வரவழைக்கும்.  எங்கள் ஊரில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் அந்த புளியமரத்தடியில் கூடுவோம்.

காற்றின் வேகம் தாங்காது கிளைகளில் இருந்து விழும் புளியம்பழம் தரையிலும் ஒரு சிலர் தலையிலும் விழுந்து ” சட்சத்” என்ற சத்தத்தை அளிக்கும்.

ஒருவர் தலையில் விழுந்து சிரித்து மகிழும்போதே, சிரிப்பவர் தலையில் விழுந்து மேலும் சிரிப்பை வரவழைக்கும் தருணம் அது. புளியம்பழம் மேலே விழாமல் சிலர் தப்பிப்பது கூட சிரிப்பை வரவழைக்கும்.    

நாங்கள் அனைவரும் அக்கா மரத்தடியில் தான் புளியம்பழம் பொறுக்குவோம். எங்களுக்குத் தெரியும் தங்கையிடம் புளியம்பழம் இருக்காது. இருந்தாலும் அவள் தரமாட்டாள், தந்தாலும் ருசி நன்றாக இருக்காது.

ஆனால் அக்கா அவ்வாறில்லை தருவதிலும் தாராளம்.  சுவையிலும் மிஞ்சுவதற்கு ஆளில்லை. புளியம்பழம் மடியை நிரப்மி விடும் நேரத்தில் காற்றும் நின்று விடும். சடசட வென சாரல் பெருமழையாக மாறும்.நாங்களும் வீட்டிற்கு மாறுவோம்.

மழை ஒரு மணிநேரம் பொழியும்.  மழை வெறித்ததுதான் தாமதம், கடகடவென அக்கா மரத்தடிக்கு போவேன்.

அக்கா மரத்தடியில் நிறுத்தப்பட்டிருக்கும் “கட்டவண்டிக்கு” மேல் ஏறி அதில் கிடக்கும் பழத்தை எடுத்து மடியில் போட்டுக் கொள்வேன். ஒன்றை உரித்து வாயில் “லாலிபாப்” போல சூம்பிக் கொண்டு வீட்டிற்கு திரும்புவேன். 

வீடு கண்ணில் பட்டதுதான் தாமதம், வாயில் இருந்த புளியம்பழம் கீழே செல்லும்.  நல்ல பிள்ளையாக அம்மாவிடம் மடியைக்காட்டி அம்மா கட்டி முத்தமிடும் வரை காத்திருப்பேன். 

ஒரு சிலநாள் முத்தத்திற்கு பதில் சத்தம் போட்டு முதுகில் இரண்டு திண்டும் கட்டுவாள்.  அழுது கொண்டே சாப்பிட்டு விட்டு தூங்கியவள் முதுகை முத்தமிட்டு கொஞ்சி “எம்பொண்ணு எவ்வளவு பழம் பொறக்கிட்டு வந்திருக்கா, ஒருமாசத்துக்கு புளியே வேண்டாம்” என்று பாராட்டி தள்ளுவாள் தந்தையிடம். 

அவரும் “என் புள்ளையாச்சே” என்று கொஞ்சி புகழ்வார். தூங்காமல் தூங்குவது போல் நடித்து புகழ்ந்ததை கேட்ட பின்னரே மனமும் உடலும் தூங்கும்.

விடுமுறை நாட்களில் எங்கள் பெரியம்மா வீட்டிற்கு செல்வோம். அங்கே நிறைய புளியம்பழம் கொட்டியிருப்பார்கள். நான் நினைத்தது உண்டு இரவோடு இரவாக அக்கா மரத்தை உலுப்பி எடுத்து விட்டார்களோ என்று.

ஓடிச்சென்று மேல்மூச்சு கீழ்மூச்சு இறங்க அக்கா மரத்தை பார்த்த பின்பு தான் மகிழ்ச்சி பொங்கும் மனதில்.  அக்கா பழங்களை ஏந்தி எங்கள் வருகைக்காகத்தான் காத்திருக்கிறாள் என்று மனம் மகிழும்.

பின்னாளில் தெரிந்து கொண்டேன். அங்கு குவிக்கப்பட்டிருந்தவை அனைத்தும் அவருடைய அம்மா, அவருடைய ஊரான (லட்சுமரம்) லட்சுமியம்மாள் புரத்திலிருந்து குத்தகைக்கு எடுத்து அனுப்பியது என்று.

விடுமுறையில் பெரியம்மா வீட்டில் தான் இருப்பு. சாப்பிடவும் தூங்கவும் மட்டும்தான் எங்கள் வீட்டிற்குச் செல்வோம்.

பெரியம்மா ஒரு நாழி புளியம்பழம் தந்து கையில் இரண்டு ரூபாய் கொடுப்பாள்.  தோல் உடைப்பதற்கு 2ரூ, நார் உரிப்பதற்கு 3ரூ அல்லது 4ரூ, கொட்டை எடுப்பதற்கு 5 அல்லது 6 ரூபாய் என்று தருவார். 

அவரவர் வேலையை பார்த்துக் கொண்டே கேலிப்பேச்சுக்களோடு நாள் செல்லும். 

வேலை முடியாத வேளையில் நைசாக புளியம்பழத்தை மற்றொருவர் இடத்தில் தள்ளி, அவர் கண்டு பிடித்து காணாமல் விட்டுவிடுவது, பின்னர் அவர்களை எங்கே பார்தாலும் புன்சிரிப்பு முகத்தில் விரியும்.

ஆனால் அவையெல்லாம் எங்கே இன்று?  அக்கா, தங்கை இருக்கிறார்கள்.  ஆனால் அதனடியில் விளையாட குழந்தைகள்?

அக்கா, தங்கையை குத்தகைக்கு விட்டு, விற்று வருமானம் ஊருக்கு என்று ஊதாரித்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் மற்ற ஊர்களைப் போல.

நேரம் அதிகமாகவே இருக்கிறது, ஆனால் எங்களால் அக்கா மரத்தடிக்கோ, இல்லை தங்கை மரத்தடியில் இருக்கும் பட்டிக்கல்லில் அமர கூட நேரமில்லை.

இது எல்லாம் நாங்கள் வளர்ந்து விட்டதால் இருக்கலாம்.  ஆனால் எங்கள் பின்னால் பிறந்த குழந்தைகள் எங்கே? 

ஏன் அவர்கள் அக்கா,தங்கை அடியில் விளையாட வில்லை? பெரியம்மா வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? 

காலம் கடந்துவிட்டதா? 

இல்லை, மகிழ்சியைக் கடத்தி விட்டதா காலம்?

பேரன் பிள்ளைகளின் வருகையின்றி, நாடி வற்றி காண ஆளில்லாது தலை விரிகோலமாய், வருவோர் போவோரை கண்டு, பழைய நியாபகங்களை நினைத்து, எப்போது சாய்வோம் என ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கிறாள் அக்கா புளியமரம்.

பாரதி ஜெயராமன்