இனிப்பு பால் அவல் எளிதாக செய்யக் கூடிய சிற்றுண்டி. மாலை நேரங்களில் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.
இதனை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வினைக் கொடுக்கும். இதனை தயார் செய்ய வெள்ளைச் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
விருந்தினர் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.
ஆரோக்கியம் நிறைந்த எளிதில் செய்யக் கூடிய இதனை சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அவல் – 1 கப்
நாட்டுச் சர்க்கரை – 1/3 கப்
பால் – 1/4 கப்
தேங்காய் துருவல் – 1/4 கப்
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – மிகவும் சிறிதளவு
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
இனிப்பு பால் அவல் செய்முறை
முதலில் அவலை கல் மற்றும் தூசி நீக்கி சுத்தமாக்கிக் கொள்ளவும்.
பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை மெல்லிசாகத் துருவிக் கொள்ளவும்.
நாட்டுச் சர்க்கரையை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
அவலை லேசாக தண்ணீரில் அலசி வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.
பின்னர் காய்ச்சி ஆறிய பாலை அலசிய அவலுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அவல் ஊறியதும் அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறவும்.
அவல் கலவையுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.
பின்னர் அவல் கலவையின் மீது ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறவும்.
அவல் கலவையை ஒருசேர அழுத்தி மூடி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
பின்னர் எடுத்துப் பரிமாறவும்.
சுவையான இனிப்பு பால் அவல் தயார்.
இதனை சிறியவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும் விரும்பி உண்பர்.
குறிப்பு
சற்று தடிமனான சிவப்பு அவலை பயன்படுத்துவது நல்ல சுவையைத் தரும்.
விருப்பமுள்ளவர்கள் பாலைத் தவிர்த்து தண்ணீரில் அவலை நனைய வைத்து பின்னர் வடிகட்டி சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
அரிசி அவலிற்கு பதில் கேப்பை, சோள அவலையும் பயன்படுத்தி இதனைத் தயார் செய்யலாம்.
ஜான்சிராணி வேலாயுதம்