கறிவேப்பிலை இல்லாத சமையலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இது வாசனைக்காவும், அதில் உள்ள சத்துக்களுக்காகவும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
இதனுடைய தனிப்பட்ட மணம் மற்றும் சுவையானது உணவுப் பொருட்களுக்கு அதிக ருசியினைக் கொடுக்கிறது.
இது பார்ப்பதற்கு வேப்பிலையை போன்று இனிப்பு சுவையுடன் உள்ளதால் இனிப்பு வேப்பிலை என்றும் கூறப்படுகிறது.
வேப்பிலை போன்ற தோற்றத்தில், கறியாகிய உணவில் சேர்க்கப்படும் இலை ஆதலால் கறி வேம்பு இலை கறிவேப்பிலை என்று அழைக்கப்படுகிறது.
இது கறிவேம்பு இலை, கருவேப்பிலை, கறுவப்பில்லை, கறுகப்பில்லை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இது உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கறிவேப்பிலையானது ருடாசியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் முறயா கொயிங்கீ என்பதாகும்.
இதனுடைய தாயகம் இந்தியா ஆகும். இது முதன் முதலில் இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. தற்போது சீனா, ஆஸ்திரேலியா, நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது.
கறிவேப்பிலையின் வளரியல்பு மற்றும் அமைப்பு
கறிவேப்பிலையானது மரவகைத் தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. கறிவேப்பிலைமரமானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் செழித்து வளரும்.
மணல் சார்ந்த செம்மண், வண்டல் மற்றும் மணல் கலந்த கரிசல் மண் ஆகியவற்றில் இப்பயிர் செழித்து வளரும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுள்ள இடம் இப்பயிருக்கு ஏற்றது.
இம்மரம் அதிக வெப்பப்தையும், வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது. கறிவேப்பிலைமரமானது சிறியது முதல் நடுத்தர உயரம் (4 – 6 மீ) வரை வளரும். இம்மரத்தில் இலைகள் தனித்தனியாக இல்லாமல் கொத்து கொத்தாகவே காணப்படும்.
ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். இம்மரத்தில் கிளையின் நுனியில் வெள்ளைநிற மலர்கள் கொத்தாகக் காணப்படுகின்றன.
இப்பூக்களிலிருந்து பச்சைநிற உருண்டை வடிவ காய்கள் தோன்றுகின்றன. பச்சைநிற காய்களிலிருந்து செங்கருப்பு மற்றும் கருப்பு நிற பழங்கள் தோன்றுகின்றன. கறிவேப்பிலையின் பழத்தினையும் நாம் உண்ணலாம்.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இப்பயிர் இலாபகரமானது. இது சுமார் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு நீடித்து வருமானம் தரக்கூடியது.
கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கறிவேப்பிலையில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), சி, இ போன்றவை உள்ளன.
இதில் தாதுஉப்புக்களான பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செம்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, குரோமியம் ஆகியவை காணப்படுகிறது.
மேலும் இது கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்ச்சத்து, நீர்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கறிவேப்பிலையின் மருத்துவப்பண்புகள்
கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை ஆகியவை மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அனீமியாவைக் குணப்படுத்த
இரும்புச்சத்து குறைபாட்டினால் மட்டும் அனீமியா ஒருவருக்கு ஏற்படுவதில்லை. போதிய இரும்புச்சத்து கொண்ட உணவினை உட்கொண்டும் இரும்புச்சத்தினை உடல் உட்கிரகிக்க இயலாமலும் அனீமியா ஏற்படும்.
இரும்புச்சத்தினை உட்கிரகிக்க ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியமான ஒன்று. கறிவேப்பிலையானது இரும்புச்சத்தினையும், ஃபோலேட்டுகளையும் அதிகஅளவு கொண்டுள்ளது. எனவே கறிவேப்பிலையை நாம் உட்கொண்டு அனீமியாவை விரைந்து சரிசெய்யலாம்.
கல்லீரல் பாதுகாப்பிற்கு
உடல் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகும் ஆக்ஸிஜனேற்ற காரணிகள் மற்றும் நச்சு பொருட்களால் கல்லீரல் பாதிப்படையாமல் கறிவேப்பிலை பாதுகாக்கிறது.
கறிவேப்பிலையில் உள்ள காம்பெஃபோல் என்ற சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிஜென்டு பாதிப்படைந்த கல்லீரலை மேலும் சேதமடையாமல் பாதுகாக்கிறது.
மேலும் இதில் உள்ள விட்டமின் ஏ, சி போன்றவை கல்லீரலை நன்றாக வேலை செய்ய தூண்டுகிறது. கறிவேப்பிலையில் உள்ள டானின்கள், கார்பசோல் அல்கலாய்டுகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய், கல்லீரல் அழற்சி நோய் உள்ளிட்ட நோய்களிலிருந்து கல்லீரலை பாதுகாக்கிறது.
சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்த
இன்சுலின் செயல்பாட்டினை சரிசெய்து சர்க்கரை நோயினைக் கட்டுக்குள் வைக்க கறிவேப்பிலையானது உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலையானது செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பினை உறிஞ்சி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பருமனான சர்க்கரைநோயாளிகளுக்கு சிறந்த தீர்வினை கறிவேப்பிலை வழங்குகிறது.
இதயத்தைப் பாதுகாக்க
கொலஸ்ட்ரால்கள் ஆக்ஸிஜனேற்றத்தின் காரணமாக கெட்ட கொழுப்புகள் உடலில் சேருகின்றன. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கொலஸ்ட்ராலின் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து கெட்ட கொழுப்பாக மாறுவதை தடைசெய்கின்றன. அவை நல்ல கொழுப்பு உடலில் சேருவதை ஊக்குவிக்கின்றன.
இதனால் இதயநோய்கள் மற்றும் பெருங்குடல் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. எனவே கறிவேப்பிலையை உணவில் சேர்த்து இதயநலத்தைப் பாதுகாக்கலாம்.
வயிற்றுப்போக்கினை சரிசெய்ய
கறிவேப்பிலையில் உள்ள கார்பாசோல் ஆல்கலாய்டுகள் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இப்பண்புகள் வயிற்றுப்போக்கினை உண்டாக்கும் கிருகிகளுக்கு எதிராக செயல்பட்டு வயிற்றுபோக்கினை சரிசெய்து வயிற்றுப்போக்கால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் சரிசெய்கிறது.
புற்றுநோய் தடுக்க
கறிவேப்பிலையில் உள்ள பீனால்கள், கார்பசோல்கள் புற்றுசெல்களின் வளர்ச்சியை தடைசெய்கின்றன. மேலும் இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தால் ப்ரீ ரேடிக்கல்கள் உருவாதைத் தடைசெய்து குரோமோசோம்கள் மற்றும் எலும்பு மஜ்ஜைகளை பாதுகாக்கின்றது. எனவே கறிவேப்பிலையை உணவில் சேர்த்து புற்றுநோயினைத் தடுக்கலாம்.
நரையற்ற அடர்த்தியான கேசத்திற்கு
கறிவேப்பிலையானது ஆரோக்கியமான, கருமையான, அடர்த்தியான முடி வளர்ச்சியினைத் தூண்டுகிறது. இதனால் முடி கொட்டுதல், இளநரை ஆகியவற்றிற்கு இது தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
மலேசெசியா ஃபர்ஃபர் என்ற பூஞ்சை தொற்றினால் பொடுகு உண்டாகிறது. பொடுகினால் முடி கொட்டுதல் ஏற்படும். கறிவேப்பிலை சாற்றினைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்பு பொடுகினை சரிசெய்து கேசத்தினை ஆரோக்கியமாக்குகிறது.
பி தொகுப்பு விட்டமின்கள் குறைபாட்டினால் முடி கொட்டும். கறிவேப்பிலையில் பி தொகுப்பு விட்டமின்கள் கணிசமான அளவு உள்ளன. எனவே கறிவேப்பிலையைப் பயன்படுத்தி கேசத்தினைப் பராமரிக்கலாம்.
தெளிவான கண் பார்வையைப் பெற
விட்டமின் ஏ குறைபாடு ஏற்படும்போது கண் பார்வையில் பிரச்சினை ஏற்படும். சிலநேரங்களில் பார்வை பறிபோய்விடும்.
கறிவேப்பிலையில் விட்டமின் ஏ அதிகளவு உள்ளது. எனவே இதனை உண்டு தெளிவான கண் பார்வையைப் பெறலாம்.
சரும பிரச்சினைகளுக்கு
கறிவேப்பிலையானது பூச்சை, பாக்டீரியா உள்ளிட்டவைகளின் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. எனவே இதனை உண்டு நுண்ணுயிரிகளால் ஏற்படும் சருமப்பிரச்சினைகளை சரி செய்யலாம்.
கறிவேப்பிலையை வாங்கும் முறை
கறிவேப்பிலையை வாங்கும்போது புதிதாக, ஒரே சீரான நிறத்துடன் ஈர்க்கில் ஒட்டியுள்ளவற்றை வாங்க வேண்டும். கறிவேப்பிலையை காய வைத்தும, பொடியாக்கியும் பயன்படுத்தலாம்.
சத்துக்கள் நிறைந்த தொற்றுக்கிருமிகள் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ள கறிவேப்பிலையை பச்சையாகவோ, சமைத்தோ பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.
One Reply to “இனிப்பு வேப்பிலை கறிவேப்பிலை”