அலையோடும் ஆழிகள்
விளையாடும் திருநிலத்தில்
இசையோடும் கலையோடும்
இன்பமலர் உதிர்க்கின்றாள் நம் இந்தியத்தாய்!
முத்தும் மணியும் முதிர்ந்த பவளங்களும்
தத்தி விளையாடும் தாய்த்திரு நாட்டில்
கத்தியும் சத்தமும் கண்ணீர்ப் பெருங்கடலும்
புத்தியைக் கெடுக்கும் புதுப்புதுச் சாதிகளும்
நித்தமும் பெருகிவரும்
நிலைமையை மாற்றிடுவோம்!
மொட்டு விரிந்த மலர்தனைப்
பட்டுக் கூந்தலில் சூட்டிக்கொண்டு
சிட்டுப் போல் சிறகடித்த
சிங்காரப் பெண்மகளைக்
கொட்டும் தேளைப்போல்
குற்றங்கள் வருத்துவதா?
பாரதத் தாயும் பெண்தானே
யாரதை மறுத்திட முடியுமடி?
இருவிழியெனப் பெண்ணை எண்ணாமல்
இழைத்திடும் கொடுமைகள் தடுத்திடுவோம்!
பணமே வாழ்க்கை என அலையும்
குணம் கொண்ட மனிதரின் சுரண்டலிலே
பிணமாய்ப் போகும் ஏழைகளின்
பசிப்பிணி தடுத்துக் காத்திடுவோம்!
சூழ்ந்த வான வீதியிலே
சுதந்திரப் பவனி வருகின்ற
சின்னஞ் சிறிய கிளிப்புள்ளின்
சிறகினை வெட்டுதல் சரிதானா?
உயிர்களிடத்து அன்பு வேண்டுமென்ற
உண்மையை உணர்ந்து செயல்படுவோம்!
கடலைச் சேரும் நதிகளுக்கிடையில்
கடுமைப் பேதங்கள் இருந்ததில்லை
உடலில் ஓடும் செங்குருதி
உலகில் எல்லோர்க்கும் ஓர்நிறந்தான்
உலகம் எல்லோர்க்கும் பொதுவம்மா
உண்மையை உணர்ந்தால் நலமம்மா!
பல்வகை மணிகளால்
பளிச்சென்று ஒளிரும்
பாரதத்தாய் மேல் இருள்
படிந்து கிடப்பதா?
இந்தியத் தாயின்
இருளை விலக்கி
இனியொரு விதி செய்வோம்!
எழுந்து வாரீர்!!
த . கிருத்திகா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!