இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்

இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள் என்ற இந்த கதை வாழ்க்கையை எவ்வாறு அணுகி வாழலாம் என்பதை உணர்த்துகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகள் உள்ளன. அப்பிரச்சினைகளைப் புறந்தள்ளி இனிமையான வாழ்வினை வாழ வேண்டும் என்றே எண்ணுகிறோம்.

அன்று கணித வகுப்பு ஆரம்பிக்க மணி அடித்தது. கணித ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்ததும் மாணவர்கள் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னார்கள்.

முதல் வழி

பதிலுக்கு வணக்கம் சொன்ன கணித ஆசிரியர் கரும்பலகையில் 4,8,16 என்று மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார்.

பின்னர் மாணவர்களிடம் “இதற்கான தீர்வு என்ன?” என்று கேட்கிறார்.

அப்போது ஒரு மாணவன் அவசரமாக எழுந்து “ஐயா, இது ஏறுவரிசையில் செல்வதால் இதற்கு அடுத்த எண் 32 என்பதே சரியான விடை ஆகும்.” என்றான்.

“இல்லை” என்று ஆசிரியர் மறுத்துக் கூறினார். உடனே மாணவியர்களில் ஒருத்தி எழுந்து நிற்கிறாள்.

“ஐயா, இந்த மூன்று எண்களையும் கூட்டினால் 28. இதுதான் விடை” என்றாள்.

உடனே ஆசிரியர் “இல்லை… இல்லை..” என்று வேகமாக தலை அசைத்தார். ஆசிரியரின் பதிலைக் கேட்டதும் மாணவர்கள் விழிக்கின்றனர்.

மாணவர்களின் நிலையைப் பார்த்ததும் ஆசிரியர் “மாணவர்களே, நான் எந்தக் கணக்கையும் போடவில்லை. எனக்கு இயல்பாகத் தோன்றிய மூன்று எண்களையே கரும்பலகையில் எழுதினேன்.

மற்றபடி நான் எழுதியது என்பதற்கு தீர்வு ஏதும் இல்லை. அதற்குள் நீங்கள் விடை காண அவசரப்படுகிறீர்கள்.” என்று கூறினார்.

ஆசிரியர் கூறியதைக் கேட்டதும் மாணவர்கள் அனைவரும் தலையசைத்து ஒப்புக் கொண்டார்கள்.

இரண்டாவது வழி

ஆசிரியர் மறுபடியும் மாணவர்களிடம் “இப்போது மீண்டும் முயல்வோம்” என்று கூறி கரும்பலகையில் 22 44 88 66 என்று எழுதினார்.

உடனே மாணவர்கள் “ஐயா, இதற்கான தீர்வு என்ன?” என்று கேட்டனர்.

உடனே ஆசிரியர் சிரித்துக் கொண்டே “இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில் இது என்னுடைய வீட்டு டெலிபோன் நம்பர்.” என்று கூறி சிரித்தார்.

ஆசிரியர் கூறியதைக் கேட்டதும் மாணவர்கள் அமைதியாய் இருந்தனர்.  இதனைக் கண்டதும் ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.

“மாணவர்களே, இந்த இரண்டு கணக்குகள் மூலம் உங்களுக்கு இரண்டு பாடங்களைப் போதிக்க விரும்புகிறேன்.

கற்பனையான பிரச்சினைகளுக்கு, அநாவசியமாக உடனே பதற்றம் அடையாதீர்கள். இதுவே இனிய வாழ்விற்கு முதல் வழியாகும்.

மனஅமைதியாக இருங்கள்; எதனையும் பொறுமையாக அணுகுங்கள். இது இனிய வாழ்விற்கு இரண்டாவது வழியாகும்.

ஆகவே கற்பனையான பிரச்சினைகளுக்கு பதற்றம் அடையாமல், எதனையும் பொறுமையாக அணுகி மனஅமைதியைப் பெறுங்கள். இதுவே இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.