இனி எல்லாம் அவளுக்காக!

எங்கு தொடங்கி எங்கு முடிப்பேன் என்னவளைப் பற்றி?

என்னுள் தோன்றிய முதல் உயிரடி

நீ கண்ட நாளிலிருந்து கண்ணுக்குள் வைத்துக் காக்கிறேன்

காணாத ஒன்றைக் கனவிலும் நினைக்கிறேன்…

எண்ணங்களால் ஆனவள் என்னவள்

எண்ணிக் கொண்டிருக்கிறேன் அவளைக்

காணப் போகின்ற நாட்களை

ஒவ்வொரு நாட்களும் ஒரு யுகமாய் நகர்கிறது…

எனது உயிருக்கு ஊக்கமளிக்கும் அவளது அசைவுகள்

மனம் தளரும்போதெல்லாம் மடியினில் அவளது உதைகள்

பெண்மையை பூர்த்தி செய்யும்

அவனது வருகைக்காக உதிரம் உதிர்க்கத் தாயார்!

காணக் கிடைக்காத அற்புத நிகழ்வு

முதல் முறையாக பார்வை கிடைத்தவளின் பரிதவிப்பு போல

அவளைக் கையில் வாங்கிய நொடி

இக்கணமும் எனை அறியாமல் புன்முறுவல் பூக்கச் செய்கிறது!

வெறும் அசைவுகளாய் தெரிந்தவள்

அற்புதமாய் அதிசயமாய் எனது கைகளில்…

அக்கணம் முடிவெடுத்தேன் நான்

இனி எல்லாம் அவளுக்காக…

என் வாழ்வாதாரம் அவள்

சிந்தனையில் இருந்து சிறிதும் விலகாதவள்…

அவளது முத்துச் சிரிப்பிற்கு

மொத்த உலகையும் விலை பேசலாம்…

எனது வாழ்க்கை அவளது சிறு கன்னக்குழியில் புதைந்து விட்டது…

அவளது ஒவ்வொரு செய்கையும் என்னை செயலிழக்கச் செய்கிறது.

ஆயிரம்பேரை எதிர்த்து நிற்கும் தைரியமானவள்

உன் முன் சிறைக்கைதி போல மண்டி இடுகின்றேன்…

நான் கல்லறைச் செல்லும் வரை

எனது கண்களால் உனக்கு காவல் செய்வேன்…

கல்லறைக்குள்ளும் உனை மட்டுமே காதல் செய்து கொண்டிருப்பேன்

காரணம் எனை ஈன்ற இன்னொரு தாயடி நீ…

இனி எல்லாம் உனக்காக மட்டுமே!

மு.சீத்தாலட்சுமி

Visited 1 times, 1 visit(s) today