இன்னா செய்தாரை ஒறுத்தல் – கதை

அன்று காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போதே அன்றைய ஆங்கில வகுப்பை நினைத்து ரகுவுக்கு பயம் காரணமாக வயிற்றில் புளியைக் கரைத்தது.

‘கோடை விடுமுறையைக் கழித்த விதம்’ பற்றி மாணவர்களைக் கட்டுரை எழுதி சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார் ஆங்கில ஆசிரியர். வகுப்பில் கண்டிப்பாக கட்டுரையைப் பற்றிக் கேட்பார்.

ரகுவுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் படிப்பில் இல்லை. ஆங்கில ஆசிரியர் கூறியிருந்ததை சுத்தமாக மறந்து விட்டிருந்தான்.

அவர் கேட்கும் சமயம், கட்டுரை நோட்டைச் சமர்ப்பிக்காமலிருந்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பிற வகுப்பு மாணவர்கள் மூலம் ரகு ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தான்.

விளையாட்டு வகுப்பிற்குப் பிறகு ஆங்கில வகுப்புதான். அவனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் மைதானத்திற்குக் கிளம்பிச் சென்ற பிறகு ரகு தன் சக மாணவர்களில் ஒருவனான முத்துவின் இருக்கைக்குச் சென்று அவனது புத்தகப் பையிலிருந்து ஆங்கில கட்டுரை நோட்டை உருவினான்.

முத்து எழுதி வைத்திருந்த கட்டுரைப் பக்கங்களைக் கிழித்தான்.

கட்டுரை நோட்டை எடுத்த சுவடு தெரியாமல் திரும்ப முத்துவின் பைக்குள் வைத்து விட்டு தன் இருக்கைக்குத் திரும்பி தன்னுடைய கட்டுரை நோட்டில் முத்து எழுதிய கட்டுரையைப் பார்த்து எழுதினான்.

விளையாட்டு வகுப்பு முடிந்து மாணவர்கள் அனைவரும் மீண்டும் வகுப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.

ரகுவின் இருக்கையைத் தாண்டிச் செல்கையில் அவன் கைகளில் தாள்கள் சில இருப்பதையும், தன்னைக் கண்டதும் அவற்றை மறைக்க முற்படுவதையும் கண்டான் முத்து.

தன் இருக்கைக்குச் சென்று ஆங்கில கட்டுரை நோட்டை எடுத்துப் பார்த்த போது, தான் எழுதி வைத்திருந்த கட்டுரைப் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான்.

ரகுவின் கையிலிருந்த தாள்கள் தான் அவை என்பது முத்துவுக்கு மிகத் தெளிவாய் புரிந்தது.

ஆங்கில ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்து கட்டுரையைப் பற்றிக் கேட்டதும், ஒவ்வொருவராகக் கட்டுரை நோட்டைக் கொண்டு வந்து கொடுத்தனர்.

ரகுவும் கட்டுரை நோட்டைச் சமர்ப்பித்தான். முத்து மட்டும் கட்டுரை நோட்டை சமர்ப்பிக்காததை அறிந்த ஆசிரியர் அவனை அருகில் அழைத்துச் சற்றுக் கடுமையுடன் காரணத்தைக் கேட்டார்.

ரகுவுக்கு நெஞ்சு ‘திக்திக்’கென அடித்துக் கொண்டது. ‘எங்கே தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவானோ’ எனப் பயந்து தவித்துக் கொண்டிருந்தான். குற்றம் புரிந்திருந்த அவன் முகம் முழுக்க வியர்த்திருந்தது.

முத்து அமைதியாகச் சொன்னான்.

“கோடை விடுமுறையைக் கழித்த விதம் பற்றி எப்படி சார் நான் எழுதுவேன்? கோடை விடுமுறையின் போது நான் எங்குமே செல்லவில்லை சார். டைபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்தேன் சார்” என்றான்.

ஆசிரியர் இரக்கத்துடன் பார்த்து, “பரவாயில்லை முத்து இப்போது உடம்பு எப்படி இருக்கு உனக்கு? ஜாக்கிரதையா இருப்பா…”

ரகுவுக்கு போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருந்தது.

அந்த வகுப்பு முடிந்ததும், தன்னைக் காட்டிக் கொள்ளாமல் மிகசாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்த முத்துவிடம் தவறான செயலுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் ரகு.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்னும் குறளுக்கான அர்த்தம் ரகுவுக்கு இப்போது நன்றாகவே புரிந்தது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.