இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்று தொடங்கும் இப்பாடல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் நான்காவது பாடலாகும்.

உலக உயிர்களுக்கு எல்லாம் அருள் புரியும் இறைவரான சிவபெருமானின் மீது திருவாதவூரார் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகர் திருவாசக திருப்பள்ளியெழச்சிப் பாடல்களைப் பாடியுள்ளார்.

மார்கழி மாத இறைவழிபாட்டில் திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் மார்கழி 30 நாட்களுக்கும் பாடப்படுகின்றன.

தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் திருப்பள்ளியெழுச்சியும் ஒன்று.

உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன. அதாவது நம் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இறைஞானத்தை தட்டி எழுப்ப எனப் பொருள் கொள்ளலாம்.

திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், ரங்கநாதப் பெருமானின் மீது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.

இறைவனின் அருளினைப் பெற அடியவர்கள் பலரும் பல்வேறு நிலைகளில் காத்துக் கிடக்கின்றனர். அவர்களோடு எளியோனாகிய அடியேனுக்கும் அருளுவதற்காக பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக என வேண்டுவதாக இப்பாடல் அமையப் பெற்றுள்ளது.

உள்ளத்தால் உருகியும், இசையை மீட்டியும், வேதமந்திரங்களை முழங்கியும், கைகளை உயர்த்தி சரணாகதி ஆகியும் அடியவர்கள் உன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடக்கின்றனர். அவர்களையும், சிறியேனாகிய என்னையும் ஆட்கொண்டருள பள்ளியிலிருந்து எழுந்தருள வேண்டும் என்று மாணிக்கவாசகர் இப்பாடலில் வேண்டுகோள் விடுக்கிறார்.

இறைவனை எவ்வாறு வழிபட்டாலும் குற்றமற்ற பரிபூரண அன்பு அவனருளை பெற்றுத் தரும் என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

இனி திருப்பள்ளியெழுச்சி நான்காவது பாடலைக் காண்போம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

விளக்கம்

இப்பாடலில் இறைவனின் திருவருளைப் பெற அடியவர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

திருப்பெருந்துறையில் நிறைந்துள்ள சிவபெருமானே, உன் அருளினை வேண்டி அடியவர்களில் சிலர் இனிமையான இசையினைத் தரும் வீணையை மீட்டியும், யாழினை இசைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மற்றும் சிலரோ ரிக் முதலிய வேதங்களைப் பாடியும், தோத்திரம் எனப்படும் தமிழ்ப்பாக்களைப் பாடியும் கொண்டிருக்கின்றனர்.

வேறு சிலர் மலர்களால் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள மாலைகளை கைகளில் கொண்டும் உள்ளனர்.

சில அடியவர்கள் தலைவணங்கி தொழும், பலர் அன்பு மேலீட்டால் அழுதும், மெய்மறந்து துவண்டும் காணப்படுகின்றனர். வேறும் சிலர் தலையின் மீது கைகளைக் கூப்பி அஞ்சலி செய்கின்றனர். இவ்வாறு உன் அடியவர்கள் பலரும் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றனர்.

பல்வேறு நிலைகளில் இருக்கும் அடியர்களுக்கும், சிறியேனாகிய எனக்கும் உன் அருளை வழங்குவதற்காக பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.

எவ்வழியில் இறைவனை வழிபட்டாலும், மாசற்ற அன்பு இறையருளைக் கிடைக்கச் செய்யும் என்பதை இப்பாடல் அறிவுறுத்துகிறது.

One Reply to “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்”

  1. இப்பாடல்களுக்கான விளக்கங்களை ஒப்பு நோக்கில், மணிவாசகர் தனக்கு அருள் புரியும்படி வேண்டுவதைப் போல் உள்ளது. அது அப்படி அல்ல.

    இறைவன் அருளிய தன்மையை வியந்து போற்றுவது அமைந்துள்ளது.

    உதாரணமாக 4வது பாடலின் விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். இறைவனை இறைஞ்சி போற்றும் அடியவர்கள் நிலையை எடுத்துக் காட்டி, என்னையும் ஆண்டு கொண்டு இன்னருளே புரிகின்ற( புரியும்) இறைவனே! பள்ளி எழுந்தருள்வாயாக! என்று மொழி கின்றார் என எடுத்துக் கொள்ள சாலச் சிறந்தது. ஏனெனில் அவரே சொல்கிறார் – தந்தது உந்தன்னை கொண்டது எந்தன்னை – சங்கரா யார் கொலோ சதுரர்!.

    இதில் தான் அனுபவப்படும் சிவானுபவ நிலையினை வியந்து போற்றும் நிலையினை பாட்டில் உணர முடிகிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.