கொக்கரித்து திரிந்த
வெக்கையை விரட்டி விட்ட
ஆனந்தத்தில் றெக்கையை
மெல்ல விரிக்கத் தொடங்கி விட்டது
மார்கழியின் பனிப் பறவை…
இப்போதெல்லாம் சூடான குவளை
தேநீருக்குள் குதித்து நிமிர்ந்த
பிறகே குதூகலிக்கிறது
கதகதப்பை காதலியாக்கிக்
கொண்ட மனம் …
ஓடையில் ஆடிப்பாடிய
கனவுகள் கூட
கம்பளி போர்வைக்குள்
கண் சிமிட்டி கைகோர்க்கிறது
சூடேற்றியபடி…
மூக்கோடு மூக்கு வைத்து
முணுமுணுக்கும் குருவிகளாய்
முயற்சித்து பெருமூச்சு விடுகையில்
ஏக்கத்தை தீர்த்து வைப்பதாய்
எழுந்த உறுதிமொழிக்குப்
பின்னால் பனிப் பந்தல் என்றாலும்
பரவசம் தான் ஆண்டு முழுவதும்
ஆண்டுவிட்டுப் போகட்டும் என்று
வேண்டிக் கொள்வேன் மார்கழியை!!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!