கல்வி செல்ல வேண்டிய திசை எது?

கல்வி செல்ல வேண்டிய திசை எது? என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய கல்விச் சிந்தனைகள் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கல்விக்கு இதயம் தேவை. சோவியத் கல்வியாளன் சுகோம்லின்ஸ்கி ‘குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்’ என்று எழுதினான்.

கல்வி, மூளையோடு மட்டுமோ, கற்கும் நூல்களோடு மட்டுமோ சம்பந்தமுடையதன்று. இதயத்தோடும் சம்பந்தமுடையது.

கல்வி கற்பிக்கவும், கல்வி கற்கவும், அதற்கென ஒரு சிறந்த பாங்கு தேவை.

கற்பிக்கும் ஆசிரியருக்குச் சிறந்த உணர்வு நிறைந்த இதயம் தேவை. கற்கும் மாணவருக்கும் ஆசிரியரைப் பூரணமாக ஆசிரியரின் மனத்தைக் கூடப் புரிந்துகொள்ளும் உள்ளம் வேண்டும்.

அப்போதுதான் கற்பிக்கும் பணியும், கற்கும் பணியும் அர்த்தமுள்ளது ஆகும்.

இத்தகு கல்விச்சூழலுக்கு உரியமொழி தாய்மொழியே என்ற கருத்திற்கு இரண்டாவது கருத்து இருக்கமுடியாது.

இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி.

தாய்மொழியே சிந்தனைமொழி, உணரும் மொழி.

ஒரு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முதற்சாதனம் தந்த நாட்டு மக்களைத் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதிக்காது இருப்பதே.

இன்று நம்முடைய நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியிக்கம் வெற்றி பெறவில்லை. தேசீய மொழியைக் கற்றபாடில்லை.

ஆங்கிலத்திலிருந்து தாய்மொழிக் கல்விக்கு மாற மறுப்பது பலவீனம். இந்த திசையில் செல்வது விரும்பத்தக்கதல்ல.

 

தாய்மொழிக் கல்வியும், தேசீய மொழியறிவும் நாம் பெற வேண்டியவை. உலகத்தின் சாளரத்தை மூடவும் வேண்டாம். ஆங்கிலத்தையும் ஒரு மொழியாகக் கற்கலாம்.

தாய்மொழியை மதித்துப் போற்றும் கல்வி உலகமே நமக்குத் தேவை. தாய்மொழி வழி உள்ளத்தை உயர்வு செய்யும் கல்வி கற்போம். அறிவை வளப்படுத்தும் கல்வி கற்போம்.

உலகக் கல்வியும் கற்று உலகமாந்தருடன் கைகோர்த்து நிற்போம்! சுயஅறிவை வளர்ப்போம். அதற்குத் துணையாகக் கற்கும் கல்வியை ஆக்குவோம்!

பெரிய, பெரிய இலட்சியங்களை இமயத்திலும் உயர்ந்த இலட்சியங்களைக் கொள்வோம்! அவற்றை அடைய உழைப்போம்! இதுவே இன்றைய கல்வி உலகு நம்மை அழைத்துச் செல்ல வேண்டிய இடம்.

நாளைய இந்தியா இன்றைய பள்ளியிலேயே தொடங்குகிறது என்பதை நமது அரசுகளும் சமூகமும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.

எதிர்கால இந்தியா ஏற்றமடைவது இன்றைய பள்ளியின் நடைமுறையையும், நமது குழந்தைகளுக்குத் தரப் பெறும் கல்வியையுமே பொறுத்திருக்கிறது.

இன்றைய கல்வி செல்ல வேண்டிய திசை எது?

நாம் இன்று சாதி, மத, இன எல்லைகளிலும், பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கைகளிலும் சிக்கிச் சீரழியும் போக்கினைத் தவிர்த்து, அடுத்த தலைமுறையினருக்குப் புதிய உலகைக் காட்ட வேண்டும்.

நம்முடைய இளைஞர்கள் சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெற்று, பொறுமை, உறுதி, முயற்சி, இவற்றோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணிசெய்வதில் நம்பிக்கை வைக்கக்கூடிய கல்வியே இன்றையத் தேவை.

இதுவே நாம் செல்லவேண்டிய திசை..!

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.