இயற்கையின் ஓட்டமும் செயற்கையின் ஆட்டமும்

உலகம் என்பது உயிர்கள் வாழ்வதற்காக இயற்கையால் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது. இயற்கையின் ஓட்டமும் செய்கையின் ஆட்டமும் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் வாசிக்கும் வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

தற்பொழுது நடக்கும் அவலத்தைத்தான் இந்தக் கட்டுரையில் எழுதப் போகிறேன். என் பார்வையில் சிந்தித்திருக்கிறேன். உங்கள் பார்வையில் தங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? யாரால்? ஏன்ற கேள்விகளை அடிக்கடி கேட்பவர்கள்தான் நல்ல பதிலைப் பெற முடியும்.

உங்களுக்குள் இருந்து உங்களையே கேளுங்கள். கேள்விகளால் ஒரு வேள்வியை நீங்களே நடத்துங்கள். நீங்களே உங்களைக் கண்டறிய முடியும்.

ஒரு காலத்தில் மனிதன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்தான். அப்போது உடல் நலமாக இருந்தது; மனம் மகிழ்வாக இருந்தது.

வைகறைத் துயில் எழுந்தான்

செஞ்ஞாயிற்று ஒளியில் மூழ்கினான்

கிணற்று நீரில் குளித்தான்

ஆற்று நீரைக் குடித்தான்

பகல் நேரங்களில் மரத்தடியில் படுத்தான்

வேர்வை சொட்டச் சொட்ட நிலத்தில் உழைத்தான்

அவன் உணவுக்குத் துணையாக பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் உறவாக இருந்தது. நல்உணர்வாக இருந்தது. உடல் நலம் அவனிடம் நீங்காதிருந்தது.

இயற்கையை நேசித்த தலைமுறை மாறி, செயற்கையை சுவாசிக்கும் தலைமுறை இன்று தடுமாறுகிறது. இந்த தடுமாற்றம் ஏன்? ஒரு பழைய சினிமா பாடல் இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேணும் வெளிநாட்டில்

ஒழுங்காய் பாடு படு வயல்காட்டில்

உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில்

அன்று தொழில் இயற்கையோடு இயைந்ததாக இருந்தது. இன்று செய்யும் தொழிலிலும் வாழும் சூழ்நிலையிலும் இயற்கையை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம்.

மரத்தை வெட்டினோம்; மண்ணின் மாண்பை இழந்தோம்.

கரோனா என்ற கொடிய அரக்கன் வந்தவுடன் நாம் சுவாசிக்கும் காற்றை விலைக்கு வாங்கும் அபாயம் வந்து விட்டது.

அன்று இயற்கையை வஞ்சித்தோம்; இன்று இயற்கை நம்மைத் தண்டிக்கிறது.

இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அணு விஞ்ஞானியும், ஆத்ம மெய்ஞானியுமான முனைவர் அ.ப.செ.அப்துல்கலாம் அவர்கள் மரக்கன்றுகளை நடச் சொன்னது, காற்றை சலவை செய்யத் தான்.

அதையேதான் இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல என்ற கவிதைப் புத்தகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்

மரந்தான் மரந்தான்

எல்லாம் மரந்தான்

மறந்தான் மறந்தான்

மனிதன் மறந்தான்

என்று கூறுகிறார்.

மரத்தைக் காக்க மனிதன் மறந்ததால்

மரணம் அவனைத் தழுவுகிறது

மரம் மட்டும் இல்லை என்றால்

சுத்தமான காற்று எங்கே?

மழைநீர் எங்கே?

மனிதா விழித்துக் கொள்!

மண்ணை நேசி!

மரம் சலவை செய்யும் காற்றை சுவாசி!

நாம் இயற்கை மேல்

இன்னும் இச்சை கொள்வோம்

வாழ்வோம் வாழ்விப்போம்

முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராச‌பாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராச‌பாளையம்
கைபேசி:  9486027221

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.