இயற்கை அன்னை நமக்கு பலவிதமான அன்பளிப்புகளைக் கொடுத்திருக்கிறாள்.
அந்த அன்னை தந்த பொருளை நாம் அன்பாக நேசிக்கிறோமா? பண்போடு பாதுகாக்கிறோமா? என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதுக்குப் பெயர்தான் உயிர்.
இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். பிறப்பு, வாழ்வு, முடிவு அனைத்தும் நாம் வாழும் நிலத்தில் நடப்பதை நாம் அறிவோம்.
நிலம் என்பது இயற்கையின் அன்பளிப்பு என்று தொன்மைப் பொருளாதார அறிஞரான டேவிட் ரிக்கார்டோ கூறியுள்ளார். நிலவாரக் கோட்பாடு என்ற கோட்பாட்டை பொருளியலில் புகுத்தியவரும் ரிக்கார்டோ ஆவார்.
நிலத்தில்தான் மழைநீர் வழிந்து ஓடும். மழைநீர் மலையில் விழுந்து காடுகள் கடந்து நிலத்தை அடைந்து கடலில் கலக்கிறது என்பது நம் முன்னவர்கள் நமக்குச் சொல்லித் தந்த பாடம் ஆகும்.
ஒருபொருளை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் நிலம்தான் முதலில் தேவை. அதன் பின்பு தான் உழைப்பு, மூலதனம், அமைப்பு போன்ற உற்பத்திக் காரணிகள் தேவைப்படும்.
நிலத்தில் மரத்தை நட்டால், நமக்குக் காற்று சலவை செய்து கிடைக்கும். நாம் சுவாசிக்கும் காற்றைத் தரும் மரத்தை நேசித்தோமா? இல்லை நிலத்தை நேசித்தோமா? அவ்வாறு சரியாக நேசிக்கத் தவறியதால் இன்று இத்தனை அவலங்கள்.
பஞ்சபூதங்களான நீர், வானம், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றை நாம் பாதுகாத்தால் நம் ஜீவன் நலமாக இருக்கும். இது இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விசயமாகும்.
இயற்கையை நீ காத்தால்
இயற்கை உன்னைக் காக்கும்
அதுதான் உண்மை.
நிலம் நம்மைத் தாங்கும் தாய். தன் குழந்தைகளைக் காப்பாற்றும் ஆற்றல் தாய்க்குத்தான் உண்டு. நமக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை அனைத்தும் தருவது பூமிதான்.
தாய்க்கும் தாயான பூமி
நீதானே நம் எல்லோருக்கும் சாமி
என்ற திரைப்பட பாடல் வரிகள் மண்ணின் பெருமையை நமக்குக் காட்டுகிறது.
தேவையற்ற குப்பைகளை பூமித்தாய் மேல் கொட்டி அவளைக் கண்ணீர் சிந்த வைக்க வேண்டாம். நீர்நிலைகளைக் காப்போம். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்.
இயற்கையை நேசிப்போம்!
இன்பமாய் சுவாசிப்போம்!!
முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராசபாளையம்
கைபேசி: 9486027221