இயற்கையை நேசிப்போம் என்பது இன்றைய வேண்டுகோள் அல்ல; அது அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய கட்டளை.
இயற்கையை நேசிப்போம் என்பது சொல்லாக இருக்கக் கூடாது. அது நமது செயலாக மாற வேண்டும். ஏன் அப்படி என்று நமக்கு சொல்லிக் கொடுக்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
இன்றைக்கு இயற்கையின் சமன் கெட்டுவிட்டது. இவ்வுலகில் வாழும் உரிமை நமக்கு மட்டும்தான் என்ற மனோபாவம் பெருகி விட்டது.
ஒன்றை ஒன்று சார்ந்த விலங்கின இருப்பிடங்கள் அழிக்கப்பட்டன. அவற்றால் அதனதன் இயல்பும் மாறத் தொடங்கியது.
காட்டில் வாழும் விலங்குகள், நம்முடன் வாழும் விலங்குகள், மற்றும் நம்மைச் சார்ந்து இருக்கும் விலங்குகள் என இருந்த நிலை பிறழ்ந்தன.
சிறுத்தை உள்ளிட்ட கொடிய விலங்குகள் இரை தேடி காட்டைவிட்டு வெளியில் வரும் நிலையை உருவாக்கினோம்.
யானைகளின் வழித்தடத்தை மறித்தோம். அதனால் யானைகள் ஊருக்குள் புகுகின்றன.
சிறுத்தைகளை வேட்டையாடியதால் காட்டுப் பன்றிகள் பெருத்துவிட்டன. அவற்றால் விவசாயிகள் அவதிக்குள்ளகின்றார்கள்.
ஏரி கரைகளில் புதர்கள் இருக்கும். அங்கே நரிகள் வாசம் செய்யும். அவை தன் உணவாக இரவு வேலைகளில் வயல்களில் எலிகளைப் பிடித்துண்ணும். அதனால் எலித்தொல்லை குறையும்.
புதர்களை அழித்தோம். அவற்றிற்கு வாழ்விடம் இல்லாமல் செய்தோம். நரிகளில் ஒய் நரி, குள்ள நரி, பெரிய நரி என இருந்த காலங்கள் போய்விட்டன. தற்சமயம் நரிகளைப் பார்ப்பதற்கு உயிரியல் பூங்காவிற்குதான் செல்ல வேண்டும்.
கிராமங்களை ஒட்டிய அடர் புதர்களில் காட்டுப் பூனைகள் இருக்கும். அவைகள் கிராமத்தில் இரவு நேரத்தில் புகுந்து கோழிகளைத் தூக்கிச் சென்றுவிடும். இன்று கோழிகள் இருக்கின்றன; ஆனால் காட்டுப் பூனைகளை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது.
பனைமரங்களை அழித்ததால் மரப்பொந்துகள் இல்லாமல் போயின. அழகான கிளிகள் மறைந்துவிட்டன. அரிய மரங்கொத்திகள் இல்லாமல் போயின.
பறவைகள் பழ மரங்களில் காய்க்கும் பழங்களை உண்ணும். அதன் விதைகள் எச்சத்தின் மூலம் பரவி செடிகள் முளைத்து மரங்களாகும்.
இன்று நாம் விதைத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் விதைப்பதற்கும், பறவைகள் மூலம் பரவுவதற்கும் வித்தியாசம் உண்டு. இதை எங்கள் வயலில் நேரடியாகப் பார்க்கின்றேன்.
கிராமங்களில் இரவு நேரத்தில் ஆடு, மாடு, மற்றும் ஆட்களைக் கண்டால் அலறும் ஆந்தைகள் இல்லாமல் போயின.
மாடங்கள் வைத்து வீடுகள் இருந்ததால் கிளிகள் வசித்தன.
வீடுகளில் வசதிகள் இருந்ததால் சிட்டுக் குருவிகள் இருந்தன. இந்நிலை இன்று முற்றிலும் அழிந்தது.
அக்காலத்தில் வீடுகள் கட்டும்போது பறவைகளுக்கும் சேர்த்து இருப்பிடம் அமைத்த நிலைபோய் நமக்கு மட்டும் அமைத்துக் கொண்டதால் நம்மைச் சார்ந்திருந்த பறவை இனம் காணாமல் போய்விட்டது.
காலம் தவிர்த்து சாகுபடி செய்வதால் பூச்சிகள் அதிகரித்து, பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் பறவை இனங்கள் அழிந்தன. எனக்குத் தெரிந்த பறவைகள் பல இன்று முற்றிலும் அழிந்துவிட்டன.
கிராமங்களில் கண்ட அன்றில், உள்ளான், வக்கா, செம்போத்து, அரி காடை, காடை ஆகிய பறவைகள் அநேகமாக முற்றிலும் அழிந்து விட்டன.
அன்றைக்கு நாங்கள் அறிந்த பறவையினங்கள் இன்றைக்கு ஆர்வலர்கள் தவிர்த்து மற்றவர்க்குத் தெரியாது. தெரிந்து கொள்ள ஆர்வமுமில்லை. இப்போது எத்தனையோ விலங்கு மற்றும் பறவை இனங்கள் அரிதாகி விட்டன.
நீர்பறவைகள் நீர் காக்கை, கிளுவை, பொல்லிக் கோழி (நாமக் கோழி), நீர்க் கோழி, பல்வேறு கொக்கினங்கள், நாரை போன்றவைகள் அன்றைக்கு சாதரணமாக இருந்தன. இன்றைக்கு அரிதாயின.
நீரைச்சார்ந்த பறவைகள்-உள்ளான், வக்கா, காணாங் கோழி, இஸ்நாப் (இதன் பெயர் விளங்க வில்லை ஆனால் அக்காலத்தில் வழக்கில் இருந்த பெயரைக் குறிப்பிட்டுள்ளேன்) இவைகள் எல்லாம் காண அரிதாகிவிட்டன.
ஆந்தை வகையைச் சேர்ந்த கோட்டான் என்ற வெண்ணிறப் பறவையினம் காண அரிதாகிவிட்டது. வெண்ணிறக் கழுகுகள் அரிதாகிவிட்டன. (திருக்கழுக்குன்றத்திலும், மகாதேவர் மலையிலும் வந்து கொண்டிருந்தன). சாக்குருவி இல்லாமல் போனது.
உயரமான மரங்களில் வசிக்கக்கூடிய, கழுத்தில் இறகுகள் இல்லாத பெரிய கழுகினம் காண அரிதாகிவிட்டது.
வெண்தலைக் கருடனைப் பார்ப்பதும் அரிதாகிவிட்டது.
காக்கைக் குருவிகளைக் காட்டி குழந்தைக்கு அன்னமிடும் வழக்கம் போய்விட்டது. “காக்கை குருவிகள் எங்கள் ஜாதி” என்பது போய் சில சுயநலவாதிகளால் ஜாதியைக் கொண்டு மக்கள் பிரிக்கப்பட்டனர்.
கிராமத்தில் ஒருசாரார் காலை நேரத்தில் நூற்றுக்கணக்கான வாத்துகளை மேய்ச்சலுக்காக மண் சாலையில் வயல் வெளிக்குக் கொண்டு செல்லும் காட்சி அற்புதமாக இருக்கும். அவையெல்லாம் இனி காண்பது அரிதே.
வீடுதோறும் கோழிகளை வளர்த்து வந்தார்கள். அவற்றால் அவர்களுக்கு முட்டை மற்றும் இறைச்சி கிடைத்தது. அவை வீட்டின் அருகில் குப்பையை கிளறி புழு பூச்சிளை உண்டு நம்முடன் சேர்ந்து வளர்ந்தன.
நாளடைவில் அதிக முட்டையிடும் கோழிகள் என லெகான் (leghorn) கோழிகள் அறிமுகப்படுத்தினர். அவற்றைக் கூண்டில் அடைத்து வளர்த்தோம்.
நம் பாரம்பரியக் கோழிகளைப் போல் இல்லாமல் நோய்களால் கும்பல் கும்பலாக இறந்தது. அதற்கு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. கோழிகள் விரைவில் வளர ஊக்க மருந்துகள் கொடுத்து நாற்பத்தைந்து நாட்களில் விற்பனைக்குத் தருகின்றோம்.
அதனால் மக்களுக்கு பலவித இன்னல்கள் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதாக பரவலாக சொல்லுகின்றார்கள்.
இயற்கையாக நம்மோடு சேர்ந்து வளரும் கோழிகளை ஊக்குவிக்காமல், மலிவானவற்றை நாடுவதால் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.
நம் இனப் பசுக்களுக்குப் பாசம் இருக்கும். நம்மோடு உறவோடிருக்கும். தேவைக்கு நம்மை ‘அம்மா’ என்று அழைக்கும். அந்த இனங்களை மறந்துவிட்டோம்.
பசுவென்ற விலங்குகளை இறக்குமதி செய்தோம். அவைகளுக்குப் பாசம் தெரியாது, ‘அம்மா என அழைக்கத் தெரியாது. அவைகளோடுப் பழகும் நம்மிடையே கூட பாச உணர்வுகள் குறைகின்றன.
தனம் படைத்தவர்கள் நம் இனப் பசுக்களை மட்டும் தனியாக பராமரிக்க வழிவகை செய்து இயற்கையை போற்ற வேண்டும்.
எத்தனையோ இனங்கள் காணாமல் போய்விட்டன. இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும்.
வயல்களில் செம்மறி ஆடுகளை இரவு நேரத்தில் தங்க வைத்து இரவெல்லாம் அவைகளை அடிக்கடி எழுப்புவார்கள். அப்போது அவை கழிக்கும் சிறுநீரும், புழுக்கையும் வயலுக்கு இயற்கை உரமாகக் கிடைத்தது. இவ்வழக்கம் எங்கோ இருக்கலாம்.
இயற்கை சூழல் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்டிருக்கும். காவிரி பாயும் தஞ்சை மற்றும் அதைச் சார்ந்த இடங்களில் ஒருமாதிரியாக இருக்கும். கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் காட்சி மாறுபடும். நெல்லை மாவட்டத்தில் மாறுபட்டிருக்கும். அன்றைய ஒன்றினைந்த ஏரிகள் மாவட்டம் என்று போற்றப்பட்ட செங்கற்பட்டு மாவட்டத்தில் வித்தியாசமானதாக இருக்கும்.
மா, பலா, வாழை போன்ற முக்கனிகளைத் தானாக பழுக்க விடாமல் தடி கொண்டு (இரசாயனங்களால்) பழுக்க வைக்கின்றோம். அவைகளும் நமக்கு தீங்கே இழைக்கின்றன.
பயிர் ஊக்கி மருந்துகளால் காய்கறிகளும் தரம் தாழ்ந்தன. இப்படி நம் தேவைக்காக இயற்கையை கெடுத்துக் கொண்டுள்ளோம்.
முடிந்த வரை உங்களுக்கு சுயமாக இருக்கும் சிறிய இடங்களில் அல்லது மாடிகளில் கொத்தமல்லி, இஞ்சி, புதினா, கத்தரி போன்ற செடிகளை வளர்த்துப் பயன் பெறலாம்.
அங்குச் செலவிடும் நேரம், உங்களுக்கும் உடற்பயிற்சி செய்வதுபோல் இருக்கும். வசதி இருந்தால் நான்கு கோழிகளையும் வளருங்கள்.
உங்கள் தேவையை முடிந்த வரை இயற்கையாக அடைய முயற்சி செய்யுங்கள். இவைகளோடு தினமும் சிறிது நேரம் செலவிட்டால் உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறும். நோய்களும் குறையும்.
இயற்கை நம்முடன் இருக்கின்றது. ஆனால் நாம் இயற்கையை வெல்வதாக எண்ணி இடர்பாடுகளைச் சங்கிலித் தொடர் போல் விலைகொடுத்துப் பெறுகின்றோம்.
நவீனத்தை வரவேற்போம். இயற்கையை நேசிப்போம். ஓரளவிற்கேனும் உண்ணுதலில், பருகுதலில் இயற்கையை நேசித்தால் இளைய தலைமுறையாவது சீராகும்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 94444104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!