இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். உலக வெப்பமயமாதல் என்ற கத்தி மனித சமூகத்திற்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கின்றது.
இன்றைய தலைமுறை இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பதைப் புறக்கணித்தால், மனிதன் பூமியில் வாழ்ந்தான் என்று எதிர் காலத்தில் பிற உயிரினங்கள் நினைத்துப் பார்க்கும் நிலை வரலாம்.
இயற்கையிலிருந்து நாம் வெகுதொலைவுக்கு வந்து விட்டோம் என்று இன்றைய தலைமுறை நினைக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளாகத்தான் நாம் நிறைய மாறி விட்டிருக்கிறோம்.
நம் வாழ்வில் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம். ஆனால் போகும் பாதை சரிதானா என்ற கேள்வி இப்போது எழுகிறது.
நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது எளிதான ஒன்றாக இருந்தது. அந்த வாழ்க்கை முறையை நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
கிராமத்தாருக்கு ஆண்டு முழுவதும் தொழிலும் தொழுகையும் இணைந்து மகிழ்விக்கும். தொடரும் சுழற்சியாகவும் அவை இருந்தன.
இதற்கெல்லாம் காரணம் அப்போதைய உழைப்பு வாழ்வுக்கும் உண்பதற்கும் உடுப்பதற்குமே என்றிருந்தது. இன்றைய நிலைமை உழைப்பும் ஊதியமும் ஆடம்பர வாழ்க்கைக்கே என்று ஆகிவிட்டது.
அதே போல் கல்வியும் ஊதியத்திற்காகவே உருவாக்கப்பட்டது போல் ஆகிவிட்டது. அதனால் பண்பாடும் கலாச்சாரமும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
அன்றைக்கு விவசாயம் ஒரு வரைமுறைக்குட்பட்டு காலத்தே பயிர் செய்யப்பட்டது.
முப்போகம்
ஏரிப் பாய்ச்சலுக்குட்பட்ட நிலங்களில் ஆடியில் தொடங்கும் சம்பா பட்டம். தையில் தொடங்கும் கார் பட்டம். நீர்வளம் மிகுந்தவிடத்தில் சித்திரையில் தொடங்கும் சொர்ணவாரிப் பட்டம். இவற்றையே முப்போகம் என்று சொல்வார்கள்.
சம்பா பட்டத்தில் சமநிலத்தில் பையகுண்டா, கிச்சிலி சம்பா, சிறுமணி மற்றும் வாடன் சம்பா போன்ற நெல்லை விதைப்பார்கள். பள்ளப் பாங்கானப் பகுதியில் பிசினி, மணிக்கத்தை, பூம்பாளை, மோசனம் மற்றும் நீருள் சம்பா போன்ற நெல்லைப் பயிரிடுவார்கள்.
கார் பட்டத்தில் ஏரியில் நீர் போதுமானதாக இருந்தால் முட்டைக்கார், வெள்ளைக்கார் போன்ற பயிர்களையும், நீர் குறைவாக இருந்தால் குள்ளக்கார் போன்ற நெல்லையும் சாகுபடி செய்வர்.
நீர் வளம் பெற்றிருப்போர் சொர்ணவாரி பட்டத்தில் பின்சம்பா பயிர்களை சாகுபடி செய்வார்கள். அக்காலத்தில் அப்பட்டத்தில் விளையும் நெல் தங்கத்தைபோல் மின்னுமாம். ஆகவே ‘சொர்ணவாரி’ என்றழைக்கப்பட்டதாம்.
விவசாயத்திற்கு உகந்த காலமாக நட்சத்திரங்களைக் கொண்டு இன்ன கார்த்திகையில் இன்னன்னபடியெல்லாம் இருக்கும் என ஒரு வரையறை வைத்திருந்தார்கள்.
நெல் விதைக்க, ஆடி மாதம் மக கார்த்திகையில் இருந்து பூராடம் உத்திராடக் கார்த்திகை வரையில் உகந்ததாகக் கொள்வர்.
புரட்டாசி மாதம் அஸ்த கார்த்திகையில் காற்றுடன் மழை பெய்தால் ஆடுகளுக்கு ஆகாது என ஆடுகள் மேய்ப்போர் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை கார்த்திகைகள் மழைப்பொழியும் காலம். அதற்கேற்றார்போல் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
இக்காலங்களில் சரியாக மழைப் பொழியவில்லையெனில் மார்கழி மூலகார்த்திகையில் மழை பெய்யும் என்று எச்சரிக்கையாக அதற்கேற்றார்போல் இருப்பார்கள்.
ஒரு கார்த்திகை என்பது பதிமூன்றே முக்கால் நாளாகும்.
குறிப்பறிதல்
புரட்டாசி மாதத்தில் பொன்னுருக வெய்யில் இருக்கும். மழையும் மண்ணுருகப் பெய்யும் என்பார்கள். ஐப்பசியில் அடைமழை பெய்யும். கார்த்திகையில் அழுகைத் தூறல் விழும் என்று சொல்லுவார்கள்.
தென்மேற்கு பருவ காலங்களில் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மழை வரும். வடகிழக்கு பருவ காலங்களில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி 15 நாட்கள் வரையில் மழைவரும்.
அதற்கு அடுத்து ‘கர்ப்போட்ட காலம்’ என்பார்கள். அதாவது அடுத்த ஆண்டுக்கு மேகங்கள் மழைப் பொழிய தயாராகும் காலம் என்று பொருள்.
அப்படி கர்ப்போட்டத்தில் மழைவந்தால் அது எந்த பாகத்தில் வருகின்றதோ, அடுத்த ஆண்டு அந்த காலத்தில் மழை குறையும் என பெரியோர்கள் குறித்துச் சொல்வார்கள். இன்று கேட்பாருமில்லை; சொல்வாருமில்லை.
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் இரவில் நன்கு காற்றடித்தால் விடியற்காலையில் மழை வரும் என்று குறிப்பறிவார்கள்.
வானத்தில் மேற்கு மேகம் சூழ்ந்திருந்து தலைக்குமேல் நேராக மின்னல் தோன்றினால் அருகில் மழை பெய்வதாகவும், அடிவானத்தில் மின்னல் தோன்றினால் வெகுதொலைவில் மழை பொழிகின்றது எனவும் சொல்லுவார்கள்.
பிறைச் சந்திரனைப் பார்த்து இது இது நடக்கும் என ஊகிப்பார்கள்.
மீனாடு தெற்குயர மிக்கெட்டும் வடக்குயர
தான் மகர கும்பம் சமமாக சொன்னபடி
சோமன் இரானாயின் மன்னர் மடிவர்
அன்னம் அரிது ஆகும்
பங்குனி, சித்திரையில் பிறை தெற்கு உயர்ந்திருக்கும். அடுத்து வைகாசி முதல் மார்கழி வரை எட்டு மாதங்கள் பிறை வடக்கு உயர்ந்திருக்கும்.
தை, மாசியில் பிறை சமமாக இருக்கும். இதற்கு மாறானால் நாட்டில் அசம்பாவிதங்கள் நேரும்; பஞ்சம் வரும் என்று கிராமத்தில் பெரியோர்கள் சொல்லுவார்கள்.
அன்று இப்படி இருந்த கிராம வாழ்க்கை இன்றைய நிலையில் இருப்பதை பார்க்கின்றோம்.
நிலத்தை பூமிமாதாவாக போற்றிய காலம் போய்விட்டது. இன்று குப்பை மேடாக ஆக்கப்பட்டது.
ஆகாசவாணி என்று போற்றப்பட்ட ஆகாயம் மாசு படிந்து போய்விட்டது.
கங்கா மாதாவாக போற்றிய நீர்நிலை எல்லாம் காணாமலும் போய்விட்டது; களங்கப்படுத்தவும் பட்டது.
வாயு பகவானாக வணங்கப்பட்ட காற்றைப் பற்றி சொல்லவும் முடியாத மோசமான நிலை.
அக்கினித் தேவனாக போற்றப்பட்டதும் இன்று அவல நிலைக்கு தள்ளப்பட்டது.
இவற்றால் நாம் அறிவது என்னவென்றால் ஐந்து பூதங்களாக வணங்கப்பட்டு பாதுகாத்து வந்த நிலையை இன்றைய நாகரீகம் பாழாக்கிவிட்டது.
உலகிலேயே இயற்கையை ஐந்து பூதங்களாக நாம்தான் வணங்கிப் போற்றியவர்கள். அந்நிய மோகத்தால் இவை திட்டமிட்டே அழிக்கப்பட்டன.
தமிழ் மொழி
தமிழ், தமிழ் என்று பேசுவோர் தமிழப் பெயர்களை அழித்தார்கள்; அதனால் வரலாறு மறைக்கப்பட்டது.
உதாரணம் அன்றைக்கு ‘இளையான்‘ என்ற பெயர் அநேகம்பேர் வைத்திருந்தார்கள்.
‘இளையான்’ என்பது இலக்குமணப் பெருமானைக் குறிப்பதாகும். இந்த அருமை தெரியாதவர்களால் ‘இளையான்’ என்ற பெயர் திட்டமிட்டு ஏளனமாக்கப்பட்டது.
இராமனைக் குறிக்கும் ‘பெரியசாமி‘, இலக்குமணனைக் குறிக்கும் ‘சின்னசாமி‘ என்று வைத்தப் பெயர்களைத் திட்டமிட்டு வைக்காமல் செய்தார்கள்.
இறைவன் ஒருவனே என்றுணர்த்த ‘ஏகன்‘ என்று பெயர் வைத்தவர்களை ஏளனம் செய்து மாற்றம் கொள்ளச் செய்தனர். ஓரிரண்டு மட்டும் சொல்லியுள்ளேன்.
இவை எல்லாம் நம் வரலாற்று உண்மைகளை மறக்கடிக்கச் செய்யப்பட்ட திட்டமிடலாகும்.
அடித்தட்டில் தமிழ் வளர்த்த மகான்களை மறந்துவிட்டோம். அவர்களால் இலவசமாக காட்டப்பட்ட, ஊட்டப்பட்டத் தமிழ் உணர்வுகளைப் போற்றாமல் விட்டு விட்டோம்.
பண்பாட்டையும் ஒற்றுமையையும் மொழி ஆர்வத்தையும் கெடுத்து சீர்குலைக்கும் காட்சிகளை பணம் கொடுத்து பார்க்கின்றோம். இவையெல்லாம் காலத்தின் கொடுமையே.
எங்கள் ஊரில் இளையப்பரெட்டி என்ற பெரியவர் இளைஞர்கள் சிலரை உடன் வைத்துக்கொண்டு இனிமையான எளிமையான தமிழ் பக்திப்பாடல்களை பாடியவாறு வலம்வருவார்.
உதாரணத்திற்கு ஒருபாடலை குறிப்பிடுகின்றேன்.
கோபுரம் தெரியுதே கோவிந்தம் கேட்குதே
கால்களும் நோகுதே கடும்பசி ஆகுதே
அந்த கோஷ்டிகள் இடும் சத்தம் கோவிந்தமெனப் புரளுதே
அந்த காட்டில் வாழும் மிருகங்கள் கண்டென்னைச் சீறுதே
பாவ தேசங்கள் எல்லாம் பஞ்சு போல் பறக்குதே
அப்பா இன்னும் எத்தனை எத்தனை தூரமோ
அறியேன் பண்டரிபுரம் தேரியேன் பாண்டுரங்கன்
எளிய தமிழை புரியும் நடையில் பாடியதை பார்க்கின்றோம்.
மலைமீது மேவும் சீலா!
உன்னை வேண்டினேன் சுப்பிரமண்ய வேலா!
மயிலேறி வந்த அய்யா! மால் மருகா முருகய்யா!
காணவேணும் காணவேணும் ஐயா! கந்தா சிவ நந்தா!
இது போன்ற எளிமையான தேமதுர பாவினை பாடுவோரும், கேட்போரும் இருந்தால் அவர்களைப் போற்றுவோம்.
சாலைக் கிணறு
எங்கள் ஊரில் குடிநீர் தேவையை கிணற்றின் மூலமே பெற்று வந்தோம். அக்கிணறு சாலை சந்திப்பில் இருந்தது. இக்கிணற்றுக்கு ‘சாலைக் கிணறு’ என்றுதான் பெயர். இக்கிணற்றில் இருந்துதான் ஊரார் முழுவதும் குடிநீர் பெற்று வந்தனர். அங்கே சமத்துவம் காணப்பட்டது.
தண்ணீர் இறைக்க வரும்போது அவரவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மனக்குறை, நிறைகளை சற்று நேரம் பேசி செய்திகள் பரிமாறிக் கொள்வார்கள்.
குழாய் நீர் வந்த பின் ‘குழாயடி சண்டை’ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு சென்று விட்டோம்.
அதாவது இன்றைய நிலை இயந்திர கதியில் செயல்படுகின்றது. இயற்கையான நெருக்கம் போய்விட்டது. சிரித்து பேசுவதுகூட, உளப்பூர்வமாக இல்லாமல் சடங்காகிப் போனது.
ஏரிக்கரையின் பனை மரங்களில் ஏறத் தெரிந்தவர்கள் பனங்காய்களை பறித்து போட்டு, அனைவரும் அமர்ந்துண்டு களித்து, மணிக்கணக்கில் ஏரி குளங்களில் குதித்து குளித்து விளையாடிய பொற்காலம் இனி எப்பிறவியிலும் கிடைக்குமா?
இயற்கையாக அமைந்த உழைப்பினை நாகரீகத்தால் இழந்தோம். தேவைகள் பெருகி விட்டன. செலவினம் எகிறியது. பாசங்கள் போயின. பதவிக்காக பறந்தனர். உற்றார் உறவு நலிந்தது.
சமூகக் கட்டமைப்பை பொய்களால் அந்நியர் கெடுத்தனர்.
பணமே உறவை நிர்ணயிக்கும் காலமாகிவிட்டது. மனமோ மௌனமாகி விட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் (யாதும் நம்மூரே; யாவரும் நம் உறவினரே) என்ற கோட்பாட்டை சிதைத்தது அந்நிய மோகமே.
இயற்கையோடு இணைந்து வாழ்தல்
இயந்திரத்தனமாக வாழ்வதின் பொருள் என்ன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்.
இயற்கையோடு இணைந்து வாழ்தல் எப்படி நமக்கு சாத்தியம் என்று யோசிக்க வேண்டும். அதுவே பாலைவனச் சோலையாக மகிழ்ச்சி நம் வாழ்வில் தழைக்க உதவும்.
கிராமம் என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகள் மூலம், அன்றைய கிராமத்தின் நல்ல பழக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த நல்ல குணங்களில், நல்ல பழக்கங்களில் ஏதாவது ஒன்று உங்கள் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, உங்களுக்கும் நமது சமூகத்திற்கும் சிறிதளவாவது பயன் அளித்தால் நான் பெரும்பேறு பெற்றவன் ஆவேன். நன்றி!
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 94444104
இதையும் படியுங்கள்
கிராமம் - பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி
கிராமம் - பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!