இயற்கை எரிவாயு – வளியின் குரல் 7

“மனிதர்களே, உங்களுக்கு எனது அன்பான வணக்கம்.

இன்று அதிகாலையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றது நினைவிற்கு வந்தது. அது ஒரு ஈரநிலம் என்று நினைகிறேன்.

நிலத்திலிருந்து தானாக நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. சில காலமாகவே அந்த நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

உடனே இயற்கை எரிவாயுவைப் பற்றி உங்களிடம் பேசலாம் என்று தோன்றியது.

இம்ம்… இயற்கை எரிவாயுவைப் பற்றி உங்களில் சிலருக்கோ அல்லது பலருக்கோ தெரிந்திருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன்.

அது தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது.

‘அதான் பெயரிலேயே இருக்கிறதே’ என்கிறீர்களா? சரி தான்.

எரியும் தன்மை கொண்ட இயற்கை எரிவாயுவிற்கு நிறமோ, மணமோ இல்லை.

இப்போது நான் வியப்படைகிறேன். காரணம், பூமியில் இருந்து இயற்கை எரிபொருட்கள் திட திரவ மற்றும் வாயு நிலைகளில் கிடைக்கிறதே, அதனால் தான்.

அதாவது திட நிலையில் இருக்கும் நிலக்கரி, திரவ நிலையில் இருக்கும் கச்சா எண்ணொய் மற்றும் வாயு நிலையில் இருக்கும் இயற்கை எரிவாயு, எல்லாமே எரிபொருட்கள் தானே?

தெரியுமா பூமிக்கடியில் இருந்து கிடைப்பதால் இயற்கை எரிவாயுவை ′மண் வாயு′ என்றும் அழைக்கின்றனர்.

முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். இயற்கை எரிவாயு என்பது குறிப்பிட்ட சில வாயுக்களின் கலவை தான்.

எனினும் மீத்தேன் வாயு பெரும்பான்மையாக இதில் இருப்பதால் ‘இயற்கை எரிவாயு’ என்று அழைக்கும்போது மீத்தேன் என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

மீத்தேனைத் தவிர, இதில் பிற நீரியக் கரிமங்களான ஈத்தேன், புரொப்பேன், பியூட்டேன் மற்றும் பென்ட்டேன் ஆகியவையும் சிறிய அளவில் இருக்கின்றன.

இத்தோடு கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீராவி போன்ற நீரியக் கரிமங்கள் அல்லாத வாயுக்களும் உள்ளன.

சரி இயற்கை எரிவாயு எப்படி உருவாகிறது? என்பதை சொல்கிறேன்.

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள் பூமியின் மேற்பரப்பு மற்றும் கடல் தளங்களில் தங்கி, காலப்போக்கில் மணல் மற்றும் பாறையின் கீழ் இவை புதைக்கப்பட்டன.

பொதுவாகவே உயிரினங்களில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் நிறைந்திருக்கின்றன.

பூமிக்கடியில் நிலவும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் இவை இயற்கை வாயுவாக மாறுகிறது.

‘நிலக்கரியும் பெட்ரோலும் இப்படி தானே உருவாகிறது?’ என சில பேர் நினைக்கிறீர்கள்.

ஆம், உண்மை தான். சில இடங்களில் நிலக்கரி உருவாகிறது. சில பகுதிகளில் எரிவாயு உருவாகிறது.

இருக்கும் இடத்தைப் பொருத்து இயற்கை எரிவாயுவிற்கு பெயர்கள் இருக்கின்றன.

இயற்கை எரிவாயு பூமிக்கடியில் பெரிய விரிசல்கள் மற்றும் மேலோட்டமான பாறை அடுக்குகளுக்கு இடையில் இருந்தால் அதனை ′வழக்கமான இயற்கை எரிவாயு′ என்று அழைக்கப்படுகிறது.

களிப்பாறை, மணற்கல் மற்றும் பிற வகை படிவுப்பாறைகளில் உள்ள சிறிய துளைகளில் இருக்கும் இயற்கை வாயுவிற்கு ′களிப்பாறை வாயு′ அல்லது ′இறுக்கமான வாயு′ என்று அழைக்கப்படுகிறது,

பூமிக்கடியில் இருக்கும் இயற்கை எரிவாயுவை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கிணறுகளில் இருந்து திரட்டப்படுகிறது.

சரி இயற்கை எரிவாயுவின் முக்கிய பயன் என்ன?

வேறு என்ன? எரிபொருள் தான்.

அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை போக்குவரத்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.

ஏன், சமையல் அடுப்பு எரிபொருளாகவும் இயற்கை எரிவாயு பயன்படுகிறது. உலகின் சில பகுதிகளில் வீட்டினுள் வெப்பமேற்றுவதற்கும் இயற்கை எரிவாயு பயன்படுகிறது.

ஒன்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கிறேன். மணம் இல்லாத இயற்கை எரிவாயுவிற்கு செயற்கையாக மணம் ஊட்டப் பட்டதை தான்.

ஒருவேளை இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் போது கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது?

மனித அறிவாற்றலால், இயற்கை எரிவாயுவை இனங்காட்ட ‘மெர்கேப்டன்‘ எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.

தீங்கற்ற மெர்காப்டன் அழுகிய முட்டை நாற்றத்தை இக்கலவைக்குத் தரும். இதனால், எரிவாயு கசிந்தால் எளிதில் கண்டுபிடிக்க இயலும். வாழ்த்துக்கள் மனிதர்களே.

மற்ற புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில் இயற்கை எரிவாயு மிகையான தூய்மைக் கேடுகள் தராமல் எரியக் கூடியது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இயற்கை எரிவாயு எரியும் போது பெட்ரோலியத்தை விட முப்பது சதவிகிதமும், நிலக்கரியை விட நாற்பத்தைந்து சதவிகிதமும் குறைவான அளவு கார்பன்-டை-ஆக்சைடு வாயுவையே வெளியிடுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மிகுதியாக மாசுபடுவதில்லை.

இயற்கை எரிவாயுவினால் வேறு என்ன பயன் இருக்கிறது?

மின்சாரம் தான். ஆம், சுழலிகள் மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கும் இயற்கை எரிவாயு பெரிதும் உதவுகிறது.

இவ்வகை மின்சாரத்தைப் பயன்படுத்தி நீரை சூடாக்கவும், மின்சார அடுப்பு மற்றும் துணிகளை உலர்த்தம் கருவியினை இயக்கவும் முடியும்.

கொதிகலன்கள் மூலம் நீராவி உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தலாம்.

இவை மட்டும் அல்ல, வேதித் தொழிற்சாலைகளிலும் இயற்கை எரிவாயு பயன்படுகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், உர உற்பத்திக்குத் தேவையான அம்மோனியாவைத் தயாரிக்கவும், மெத்தனால் உற்பத்தியிலும் இயற்கை எரிவாயு பயன்படுகிறது.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இறந்த தாவர விலங்களையும் இந்த பூமி எரிபொருளாக மாற்றி உங்களுக்கு தந்து உதவுகிறதே! அதற்காக பூமிக்கு எனது நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். என்னால் இது தான் முடியும்.

அன்பிற்கினிய மனிதர்களே!

அடிப்படை ஆதாரமான இந்த பூமியை, செயற்கை மாசுபாட்டிலிருந்தும் சீர்கேட்டிலிருந்தும் காப்பது உங்களது கடமை தானே?

எதிர்காலச் சந்ததியினரின் தேவைக்கு மட்டுமின்றி, தற்காலத்தில் வாழும் உயிரினங்களுக்கும் தீங்குகள் நிகழாமல் இருக்க வேண்டுமானால், எல்லா வகையான மாசுபாட்டிலிருந்தும் பூமியை காக்க வேண்டும்.

அப்படி செய்தால் அதுவே நீங்கள் பூமிக்கு செலுத்தும் சிறந்த நன்றிகளாகும். இதனை செய்வீர்களா? நிச்சயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

இன்னொரு நாள் வருகிறேன். உங்களுடன் பேச, நன்றி.”

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.