இயற்கை காதலி கவிதைகள்

இயற்கை காதலி கவிதைகள்

இயற்கை காதலி கவிதைகள் என்பவை இயற்கை பற்றிய அருமையான கவிதைகள்.

படித்துப் பாருங்கள்.

நீங்களும் இயற்கை மீது காதல் கொள்வீர்கள்!

கதிரவன்

கதிரவனே,

என் மேல் என்ன கோபம்?

உன்னை நெருங்க நினைக்கிறேன்!

ஆனால் நீயோ வட்டப்பாதையில்

சுற்ற வைக்கிறாய்!

எவ்வளவு நாள் என்று தெரியாமல்

நானும் சுற்றுகிறேன்…

 

 

நிலா

தொடக்கம் எது?

முடிவு எது? என்று தெரியாத

நீல வண்ண அரண்மனையின்

அழகு மிகுந்த இளவரசியே!

மீண்டும் மீண்டும் உன் காதலில் தோற்கிறேன்

என்னை அறியாமலே,

ஏனென்றால் நீ‌ மட்டும் எனது வலியை

எனக்கே தெரியாமல் திருடுகிறாய்.

 

 

நானும் காதலும்

நீ மட்டும் எப்படி

சிக்காமல் போகிறாய்

நான் விரிக்கும் மந்திர வலையில்?

அடேய், காதலே உன்னில் சிக்கியதால் தான்

கவிதையை உணருகிறேன்!

 

 

ஆகாயம்

ஏன் இவ்வளவு அமைதியாகவும்

அழகாகவும் இருக்கிறாய்?

யாரும் உன்னை ரசிக்கவில்லை என்பதற்காகவா?

இல்லை நான் ரசிக்க வேண்டும் என்பதற்காகவா?

 

 

என் காதல்

நிலா,

நீ தான் என் காதலன் என்பதையே மறந்து,

உன்னையே

என் காதலனுக்காக

வார்த்தைக் கடன் வாங்கிச்

சுட்ட அமிர்தமான தோசை,

என்று உவமையாக்கிவிட்டேன்!

ஏனோ?

காதல் மாதத்தின் குழப்பமோ…

 

 

அமாவாசை

தோழமையின் பொறாமையால்

நட்சத்திர நண்பனுடன்

கோபம் கொண்ட நிலாவின் ஒரு

அவதாரம் தான்

அமாவாசை.

 

 

தென்றல்

ஏய்,தென்றலே

உன் உரசலிலே

விழுந்துவிட்டேன்!

உன் உருவம்,

ஓசை உணராமலே..

 

தென்றலே !

எப்படி முத்தமிடுகிறான்?

ஹார்மோன் இல்லாமலே

உணருகிறேன்.

 

 

பயணம்

ஒளித்து வைக்கப்பட்ட

32 ஜி.பி நினைவக அணை

உடைக்கப்பட்டது,

ஜன்னல் ஓரம் பேருந்து

பயணத்தின் போது!

 

 

காதல்

எனக்கும் எனது

மனத்திற்கும் இடைப்பட்ட ரகசிய

ஊடுருவல் தான்.

 

 

வானம் 

இயற்கை இருளை

ரசித்துக் கொண்டிருந்ந

அழகான இராட்சசியிடம்(என்னிடம்)

காதலைச் சொல்ல

நிலாவைப் பரிசாக

வைத்துச் சுற்றுகிறது

வானம்!

 

 

மின்னல்

வெட்கத்தில் விழுங்கினேன்;

இருளில் என்னைப் பார்த்து

நீ

கண்சிமிட்டிய பின்னால்!

 

 

மேகங்கள்

அளவே தெரியாமல்

கட்டப்பட்ட கட்டிலில்

பஞ்சு மெத்தைகள்

கொட்டிக் கிடக்கின்றன

பல உருவங்களில்!

உறங்கத் தான் ஆசை.

விலை என்னவோ?

 

 

இயற்கை

புன்னகையில் மிதக்கிறேன்,

“என்னை மகிழ்விக்க

ஆகாய மேடையில்

நிலா வெளிச்சத்தில்

தென்றலும் மேகமும்

கலை நிகழ்ச்சி

நடத்துவதைப் பார்த்து”.

 

 

என் உலகம்

என் உலகில் நான் பாட,

தென்றல் ஆட,

நட்சத்திரங்கள் கை தட்ட,

நிலா சிரிக்க,

வான‌ம் கண் கலங்க,

ஒரே கூத்தா இருக்கு.

 

 

இரவு வானம்

நிதானத்தை இழக்கிறேன்;

உன்னை இவ்வளவு அழகாகக் காட்டும்

என் கண்களால்!

 

 

இரவு வானம்

நிம்மதியை உணருகிறேன்,

இரவின் மடியில்!

ஏனோ,

கருவறை பழகியதாலோ?

 

 

இயற்கையின் சுதந்திர காலம் (கொரானா காலம்)

குயிலின் இசையினாலும்

தென்றலின் நடனத்தினாலும்

கருமேகத்தின் கண்ணீராலும்

அன்பின் உணவினாலும்

சுதந்திர காலம் கொண்டாடப்படுகிறது,

இயற்கையால்!

 

 

உணர்வுகள்

நான்கு அறைகளையும்

அலசிப் பார்த்து விட்டேன்,

எங்கே ஒளித்து வைத்திருக்கிறான்

உணர்வுகளை?

பலே திருடன் தான் இதயம்!

மு.செந்தாமரை செல்வி

Comments

“இயற்கை காதலி கவிதைகள்” மீது ஒரு மறுமொழி

  1. Thala thala

    Super

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.