முள் சீதா பெயருக்கு ஏற்றாற் போல் தன் உடல் முழுவதும் முட்களைக் கொண்டுள்ளது. இப்பழத்தை நாம் பார்த்திருப்பது அரிது.
இதனுடைய மருத்துகுணம் காரணமாக உலகெங்கும் தற்போது பரவியுள்ளது.
இப்பழம் சீத்தாபழத்தின் உறவினர் ஆகும். இது பார்ப்பதற்கு சீத்தாப்பழம் போன்ற தோற்றத்தினையும், முட்களோடு அளவில் பெரிதாகவும் இருக்கும்.
இப்பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவையினைக் கொண்டுள்ளது. இப்பழத்தின் வாசனை அன்னாச்சி, ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, முலாம் பழம் ஆகிய பழங்களின் வாசனையைக் கலந்து தனிப்பட்டதாக இருக்கும்.
இது அனோனேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் அனோனா முயுரிகேட்டா என்பதாகும். இது கிராமப்புறங்களில் இராம் சீத்தா என்று அழைக்கப்படுகிறது.
முள் சீதாவின் வளரியல்பு மற்றும் அமைப்பு
முள் சீதாவானது வெப்ப மண்டலத்தைச் சார்ந்த மரவகை தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இம்மரம் சுமார் 20 அடி உயரம் வரை வளரும்.
இது பசுமை மாறாத பளபளப்பான நீள்வட்ட இலைகளைக் கொண்டுள்ளது. இம்மரமானது பச்சை கலந்த மஞ்சள் நிறப்பூக்களைப் பூக்கிறது.
இதிலிருந்து அடர்பச்சை நிறம் கொண்ட வெளிப்பரப்பில் முட்களுடன் கூடிய முள் சீதா தோன்றுகிறது. இக்காயானது பழுக்கும்போது பச்சை கலந்த மஞ்சள் நிறத்திற்கு மாறும்.
இப்பழம் இதய வடிவம், நீள்வட்டம் அல்லது ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படுகிறது.
இப்பழமானது மூன்று முதல் ஐந்து கிலோ எடைவரை இருக்கும். இப்பழம் பொதுவாக ஒரு அடி நீளத்தினையும், ஒரு அடி அகலத்தினையும் கொண்டிருக்கும்.
இப்பழத்தின் உட்புறச் சதையானது வெள்ளை நிறத்தில் கிரீம் போன்று காணப்படும். இதனுள் அடர் பழுப்புநிற விதைகள் காணப்படுகின்றன.
தண்ணீர் தேங்காத வளமான மண்ணில் செழித்து வளரும். இது வறட்சியை தாங்கும் சக்தி கொண்டது. இது விதைகள் மூலமாகவும், மொட்டுக்கட்டிய ஒட்டுச் செடிகள் மூலமும் பயிர் செய்யப்படுகிறது.
பொதுவாக இம்மரம் மே மாதத்தில் பூத்து ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பழம் தரும். ஒரு மரம் ஒரு பருவத்தில் சராசரியாக 100 கனிகளைத் தரும்.
முள் சீதாவினைப் பற்றிய வரலாறு
இப்பழத்தின் தாயகம் அமெரிக்காவின் அமேசான் காடுகள் ஆகும். தற்போது பல வெப்பமண்டல நாடுகளிலும் இது பரவி வருகிறது.
பிலிபைன்ஸ், மலேசியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது.
இந்தியாவில் கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இயற்கையாகக் காணப்படுகிறது.
நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள பல நாடுகளிலும் இது இயற்கையாக வளர்கின்றது.
முள் சீதாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இப்பழத்தில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), சி, போலேட்டுகள் போன்றவை உள்ளன.
கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம், கோலைன் போன்ற தாதுஉப்புகள் காணப்படுகின்றன.
கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து ஆகியவையும் இப்பழத்தில் இருக்கின்றன. இப்பழத்தில் டிரிப்டோபன், மெத்தியோனைன், லைசின் போன்ற அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன.
முள் சீதாவின் மருத்துவ பயன்கள்
முள் சீதாவின் இலை, மரப்பட்டை, வேர், கனிகள் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.
செரிமானப் பாதையின் நலத்திற்கு
இப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யின் காரணமாக வாய் துர்நாற்றம் மற்றும் வயிற்றுப்போக்கிற்கு இது இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
இப்பழம் மற்றும் அதன் சாற்றினை அருந்தும்போது அது இரைப்பை, குடல் போன்ற செரிமான உறுப்புகளைச் சுத்தம் செய்கின்றன. செரிமான உறுப்புகளில் உள்ள அதிகப்படியான நச்சு மற்றும் உப்புக்களை இப்பழம் வெளியேற்றுகிறது.
இப்பழத்தில் காணப்படும் ஆல்காய்டுகள் மற்றும் குவோனோலோன்கள் உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு கூறுகள், குடலில் உள்ள ஒட்டுண்ணிகளைக் குறைக்கின்றன. மேலும் இப்பழம் வயிறு மற்றும் பெருங்குடல் பகுதியில் ஏற்படும் வலியையும் எரிச்சலையும் குறைக்கின்றது.
நோய் எதிர்ப்பாற்றலைப் பெற
நோய் எதிர்ப்பு பண்பினைப் பாதுகாப்பதால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும். விட்டமின் சி-யினை உடைய முள் சீதாப்பழம் நோய் எதிர்ப்பு பண்பினை நமக்கு வழங்குகிறது.
இப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாள்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
புற்றுநோயைத் தடுக்க
இப்பழத்தில் அசிட்டோஜெனின், குயினோலோன்கள், ஆல்காய்டுகள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய் எதிர்பாற்றலையும், புற்றுநோய் வளருதலைத் தடுக்கும் பண்பினையும் கொண்டுள்ளன.
இவை புற்றுச்செல்லுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடைசெய்து அவை வளருவதைத் தடுக்கின்றன. வயிறு, மார்பு, கல்லீரல், கணையம் உள்ளிட்ட பன்னிரெண்டு இடங்களில் வளரும் புற்றுநோயைத் தடுக்கும் பண்பினை இப்பழம் பெற்றுள்ளது.
இப்பழத்தில் உள்ள தனிப்பட்ட கரிமவேதிச்சேர்மங்களின் புற்றுநோய் தடுக்கும் பண்பினைப் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அசிட்டோஜென்கள் அசோனேசியே தாவரக் குடும்பத்தில் காணப்படும் தனித்துவமான வேதிச்சேர்மமாகும்.
மனஅழுத்தம் குறைந்து நல்ல தூக்கத்தினைப் பெற
மனஅழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்கள் உடல் நலத்தினை சீரழிக்கின்றது. அத்தோடு உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தில் குழப்பத்தினை உண்டாக்கி தூக்கிமின்மையை ஏற்படுத்துகிறது.
இப்பழச்சாறு மனஅழுத்தத்தை போக்கக்கூடிய மருந்தாக பலநூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பழத்தில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் காரணமாக இது அதிக பதட்டத்தோடு கூடிய மனஅழுத்தத்திற்கு நிவராணம் அளித்து நல்ல தூக்கத்தினைத் தருகிறது. எனவே மனஅழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த தீர்வாகும்.
வாதம் மற்றும் கீல்வாதத்திற்கு
வாதம் மற்றும் கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு முள் சீதா இலையிலிருந்து எடுக்கப்படும் சாறானது பயன்படுத்தப்படுகிறது. இச்சாற்றினை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும்போது இதில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் விரைந்து செயல்பட்டு நிவாரணம் அளிக்கிறது.
முள் சீதாஇலைச்சாறானது பாதிக்கப்பட்ட இடத்தின் வீக்கத்தினைக் குறைத்து வலியை குணமாக்கி எளிதாக மூட்டுகளை அசைக்கச் செய்கிறது.
சுவாச பிரச்சினைக்கு
இப்பழத்தின் எதிர்ப்பு அழற்சி பண்பானது சளி மற்றும் கோழையால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை நீக்குகிறது. இதனால் சுவாசம் எளிதாகுகிறது.
நுண்கிருமிகளின் வசிப்பிடமான உடலில் உள்ள சளி மற்றும் கோழையினை இப்பழம் வெளியேற்றுகிறது. இப்பழம் நாசித்துளைகள், சுவாச பாதையில் உள்ள வீக்கத்தினைக் குறைத்து சுவாசம் எளிதாக ஏற்பட வழிவகை செய்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு சுவாச பிரச்சினைகளை தீர்க்கலாம்.
வலி நிவாரணி
இப்பழச்சாற்றினை அடிபட்ட மற்றும் நாள்பட்ட காயங்களின் மீது தடவும்போது வலிநிவாரணம் கிடைக்கிறது. இப்பழத்தின் மயக்கம் மற்றும் அழற்சி பண்புகள் காரணமாக இப்பழம் உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புற வலிகளுக்கு நிவாரணியாக உள்ளது.
சருமப்பாதுகாப்பிற்கு
இப்பழத்தின் விதைகள் அரைக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்டு சருமத்தில் தடவப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் தோல் சுருக்கம், வயதான தோற்றம், சருமக்கோடுகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்கிறது.
சருமப்பாதிப்பு உள்ள இடங்களில் பக்குவப்படுத்தப்பட்ட அரைத்த விதை விழுதானது தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது நோய் தொற்றுதலிருந்து சருமத்தைப் பாதுகாத்து சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
முள் சீதா பற்றிய எச்சரிக்கை
இப்பழம் மற்றும் இலைகளை அதிகளவு பயன்படுத்தும்போது இது நடுக்கு வாதத்தினை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்தப்பழத்தை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
முள் சீதாபழத்தினை வாங்கி பயன்படுத்தும் முறை
இப்பழத்தினை வாங்கும்போது புதிதான, கனமான, ஒரே சீரான நிறத்துடன், முட்கள் மேற்பரப்பு முழுவதும் உள்ளவற்றை தேர்வு செய்யவும். மேற்பரப்பில் வெட்டுகாயங்கள், கீறல்கள் உள்ளவற்றைத் தவிர்க்கவும்.
முள் சீதாகாயினை அறையின் வெப்பநிலையில் வைத்து பழுக்க வைக்கலாம். பழுத்தவுடன் இதனை குளிர்பதனப் பெட்டியில் 2 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
இப்பழத்தினை நறுக்கி விதைகளை நீக்கி சதைப்பகுதியினை அப்படியே உண்ணலாம். இப்பழத்திலிருந்து பழச்சாறு, சர்பத், பழபானங்கள், ஐஸ்கிர்Pம்கள், மிட்டாய்கள், சாலட்டுகள் ஆகியவை தயார் செய்யப்படுகின்றன.
நாமும் ஆரோக்கியம் தரும் முள் சீதாவினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!