இந்தப் பாட்டு எங்கிருந்து வந்ததென தெரியல
இதுக்கு இணை எதுவுமுண்டா புரியல
சந்தங்களும் தாளங்களும் சொல்லித் தந்தது யாரம்மா?
சரிகம என ஏழுசுரம் சேர்த்தது புதிரம்மா
கொஞ்சி கொஞ்சி ‘சலசல’வென ஓடும் ஆறும் பாடுமே
கொட்டும் மழையும் ‘சடசட’வென கூடச்சேர்ந்து ஆடுமே
மஞ்சள் வெயிலு மலையின்மீது விழுகின்ற பொழுதிலே
மரங்கள் தன்னில் பறவைகளும் இசை பாடுமே
தங்குதடை இல்லாது கடலும்கூட பாடுமே
தரையினிலே நண்டுகளும் நாட்டியந்தான் ஆடுமே
பொங்கும்நுரை பொதிகளே மேகமாக மாறுமே
பூப்போன்ற மேகம் தொட்டு தென்றல் கீதம் பாடுமே
எங்கெங்கு திரிந்தபோதும் இதற்கு இணை இல்லையே
எந்த பாட்டு கேட்டபோதும் இந்த சுகம் இல்லையே
இங்கிருக்கும் மனிதரெல்லாம் இதனைக் காக்க வேணுமே
இயற்கை நிலைக்க மனிதவாழ்வும் இசையாக மாறுமே
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)