பூச்சி விரட்டி

இயற்கை பூச்சி விரட்டி

பூச்சி விரட்டி என்பது நமது வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றில் வளர்க்கப்படும் தாவரங்களை பூச்சி தொல்லைகளிலிருந்தும், பயிர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.

இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

 

பூச்சி விரட்டி -1

தேவையான பொருட்கள்

3லிருந்து 5 வரை கிள்ளினால் பால் வரும் இலை தழைகள்
(உதாரணத்திற்கு – அத்தி, பப்பாளி, வாதாமுடக்கி, ஆவாரம், வரிக்குமட்டி, நுணா (மஞ்சணத்தி) ஆடுதீண்டாஇலை) ஒவ்வொரு இலையிலும் 1 கிலோ அல்லது தேவைக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளவும்.

கோமியம் – 10 லிட்டர், மேற்கூறிய தாவர விதைகள் -100 கிராம், சாணம் – ஒரு கைப்பிடி

செய்முறை

இலை தழைகள், விதைகளை நறுக்கி கோமியம் மற்றும் சாணக் கரைசலில் 15 நாட்களுக்கு ஊற வைக்கவும். 15 நாட்களுக்குப் பிறகு ஊற வைத்த கலவையை வடிகட்டவும்.

இதனை பூச்சி மற்றும் பூஞ்சைகளை விரட்டும் பொருட்டு பயிர்கள் மீது தெளிக்கவும். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

 

பூச்சி விரட்டி -2

தேவையான பொருட்கள்

பூண்டு : 500கிராம்

இஞ்சி : 250கிராம்

மிளகாய் : 250கிராம்

செய்முறை

பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவற்றை அரைத்து பாத்திரத்தில் கொட்டி நன்றாகக் கலந்து பிழிந்து சாறைப் பயன்படுத்தவும். 300 மில்லி லிட்டர் சாறை 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கவும்.

 

பூஞ்சைப் பிரச்சனை களைய

தேவையான பொருட்கள்:

சோற்றுக் கற்றாழை, பப்பாளி, போகன்வில்லா (தாள் பூ) தலா ஒவ்வொன்றும் 3 கிலோ.

மஞ்சள் பொடி 50 கிராம்.

செய்முறை

இலை மற்றும் பூவை நைத்துக் கொள்ளவும். மஞ்சளைச் சேர்க்கவும். 25 லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் ஆற விட்டு வடிகட்டவும். வடிகட்டிய பின் உள்ள கசடில் 25 லிட்டர் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

இதனை மீண்டும் வடிகட்டி ஏற்கனவே உள்ள கஷாயத்தோடு கலக்கவும். ஏறக்குறைய 50-60 லிட்டர் கஷாயம் கிடைக்கும். இதனை ஆற வைத்துப் பயிர்களுக்கு தெளிக்கவும்.

 

சாம்பல்

இலைகளின் மீது சாம்பலைத் தூவுவதின் மூலம் இலைகளுக்கு ஏற்படும் நோய் மற்றும் பூச்சித் தொல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

செய்முறை

சாம்பலை துணியில் முடிந்து கொள்ளுங்கள். இந்த முடிச்சை செடிகளுக்கு அருகில் கொண்டு சென்று ஒரு தடியால் லேசாகத் தட்டினால் சாம்பல் பறந்து இலைகளில் ஒட்டிக் கொள்ளும். பனி படரும் காலைப் பொழுதில் இதைச் செய்தால் சாம்பல் எளிதாகச் செடிகளில் ஒட்டிக் கொள்ளும்.

 

குறிப்பு

பயிர் வளர்ச்சி ஊக்கி, பூச்சி விரட்டி போன்றவற்றைப் பயன்படுத்தும் போது சரியான அளவை உபயோகிக்க வேண்டும். இவற்றை ஒரு சில பயிர்களுக்கு மட்டும் முதலில் பரிசோதித்து பார்க்க வேண்டும். இவற்றின் அளவை பிற செடிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.