வலி நிவாரணி என்றால் வலியை நீக்குவது அல்லது குறைப்பது என்று பொருள்.
நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு, அவற்றைப் போக்கிக் கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
நம் உடலில் தோன்றும் வலிகளுக்கு இயற்கையே சில பொருட்களை வலி நிவாரணப் பொருட்களாக அளித்துள்ளது. அவையே இயற்கை வலி நிவாரணிகள்.
அதுவும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களே இயற்கை வலி நிவாரணிகள் என்பது ஆச்சர்யமான விஷயம். அவற்றைப் பற்றியே இக்கட்டுரை.
பல் வலி
பல் வலி என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் வாட்டி வதைக்கும் உடல் உபாதை. அதற்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகும்.
பற்களில் வலி உள்ள இடத்தில் கிராம்பை பொடி செய்து தடவ வலி குறைவதை உணரலாம். கிராம்பிற்குப் பதில் கிராம்பு எண்ணெயையும் வலி உள்ள இடத்தில் தடவலாம்.
காது வலி
காது வலி ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டினைப் பயன்படுத்தலாம். வெள்ளைப் பூண்டு நுண்ணுயிர்களின் செயல்பாடுகளைக் குறைப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்யும்.
இரத்தக் காயம்
இரத்தக் காயம் மற்றும் நாள்பட்ட வலிக்கு மஞ்சள் சிறந்த நிவாரணியாகும். சிறிய மற்றும் நடுத்தர இரத்தக் காயம் ஏற்பட்டதும், சுத்தமான மஞ்சளை பொடி செய்து காயத்தில் தடவும் போது காயம் சீழ் வைக்காமல் இருக்கும்.
செரிமானம்
நல்ல செரிமானத்திற்கு அன்னாசிப் பழம் (பைனாப்பிள்) மற்றும் பப்பாளிப்பழம் உதவும்.
உணவு உண்ட பின்பு கிராம்பினை வாயில் போட்டு சுவைத்தால், அமிலத்தன்மை அதிகரிப்பால் உண்டாகும் நெஞ்செரிச்சலைத் தவிர்க்கலாம். எனவேதான் சாப்பிட்டிற்கு பின்பு உண்ணும் பீடாக்களில் கிராம்பினை வெற்றிலையில் குத்தி வைத்திருப்பார்கள்.
நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் செரிமானமின்மை ஆகியவற்றிற்கு காலை உணவிற்கு முன்பு பாதி கப் அளவிற்கு வேக வைத்த பீட்ரூட்டை உண்டு நிவாரணம் பெறலாம்.
இஞ்சி வயிற்றுக்கு சிறந்த உணவுப் பொருளாகும். அசௌரியமான வயிற்று வலிக்கு இஞ்சியையே நிவாரணப் பொருளாக நம் முன்னோர்கள் பராம்பரியமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
சளி, இருமல், தலைவலி
கோடை வெப்பத்தினால் உண்டாகும் தலைவலிக்கு தர்பூசணி சிறந்த தீர்வாகும். கோடையில் தினமும் தர்பூசணி உண்டால் நீர்இழப்பையும் தவிர்க்கலாம்.
சாதாரண சளி, இருமல், தொண்டைப் புண், தொண்டை கரகரப்பு ஆகியவற்றிற்கு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றினை கலந்து பருக வேண்டும். இது கோழையை அகற்றுவதோடு சளியினால் ஏற்படும் தொந்தரவுகளையும் நீக்கும்.
அன்னாசி பழச்சாறு இருமலுக்கு உண்ணும் சிரப்பினைப் போன்று ஐந்து மடங்கு சக்தி வாய்ந்தது. மேலும் அன்னாசி சாறு சளி மற்றும் காய்ச்சல் உண்டாவதைத் தடுக்கும்.
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தொடர் இருமல் ஏற்படும்போது, உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேல் உயர்த்தினால் இருமல் கட்டுப்படும்.
உடல் உள் உறுப்புக்களின் ஆரோக்கியத்திற்கு
தினமும் மாதுளைச் சாற்றினை அருந்தினால் இதயம் பலப்படும். மேலும் இச்சாறு குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் சிறந்த தீர்வாக அமையும்.
இதயம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வெள்ளைப் பூண்டு சிறந்த நிவாரணியாகும். உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய், தமனிகளின் தடிப்பு ஆகிய இதயம் சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க வெள்ளைப் பூண்டினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
திராட்சையின் பெரும்பான்மையான சத்துக்கள் அதனுடைய தோலில் குவிந்துள்ளன. நுரையீலை வலுப்படுத்தவும், நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு காணவும் இது மிகவும் உதவுகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. அதே சமயம் கணையத்தில் புற்றுநோய் உண்டாக்கும் வாய்ப்பினை 50 சதவீதம் குறைக்கிறது.
வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான புதிய செல்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.
மஞ்சள், இஞ்சி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தேன் ஆகியவை இயற்கை நமக்கு வழங்கியுள்ள இயற்கை நுண்ணுயிர் கொல்லி (Anti-Biotic) ஆகும்.
பீட்ரூட், காரட், கிரீன் டீ, ஆப்பிள், ப்ரொக்கோலி, எலுமிச்சை, வால்நட், முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவகோடா, கீரைகள், வெள்ளைப் பூண்டு, மஞ்சள் ஆகியவை கல்லீரலைச் சுத்தம் செய்யும் இயற்கை உணவுப் பொருட்கள் ஆகும்.
உணவே மருந்தென உணர்வோம்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!