தோட்டம்

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது.

வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும். அதாவது இயற்கையின் போக்கில் விவசாயம் செய்வது ஆகும்.

இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

பயனீட்டாளர்களுக்கும் உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது.

விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தையும் பெறுகின்றனர்.

முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம்.

இயற்கை வேளாண்மையின் கூறுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு செயலும் இயற்கை வேளாண்மையின் கூறுகளாகும்.

நிலத்தை தயார் செய்தல்

ஒற்றைநடவுமுறை

பயிர்சுழற்சிமுறை

கலப்புபயிர் பயிரிடுதல்

இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல்

மூடாக்கி போடுதல்

இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல்

இயற்கை பயிர் ஊக்கிகளைப் பயன்படுத்துதல்

பயிர்களுக்கிடையே தேவையான காற்றோட்டத்தை பராமரிப்பது

நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல் ஆகியவைகள் ஆகும்.

 

நிலத்தை தயார் செய்தல்

பயிர் வளர்வதற்கு ஏற்றவாறு நிலத்தினை தயார் செய்ய வேண்டும். நிலமானது உழுவதற்கு எளிதாகவும், பஞ்சு போல மிருவானதாகவும் இருக்க வேண்டும்.

கீழ்க்கண்ட வழிமுறை மூலம் 50 வருடங்கள் செயற்கை உரம் பயன்படுத்திய நிலத்தின் வளத்தினை 6 மாதங்களில் மீட்டெடுக்கலாம் என வட இந்திய கணித மேதை ஸ்ரீபாத தபோல்கார் கூறியுள்ளதாக நம்மாழ்வார் குறிப்பிட்டுள்ளார்.

20 வகையான பயிர்களை (நான்கு தானியங்கள், நான்கு எண்ணெய் வித்துக்கள், நான்கு மணப்பொருட்கள், நான்கு உரச்செடிகள்) கலந்து விதைத்து 20 நாட்களில் உழுது நிலத்தில் மடக்க உழவு செய்ய வேண்டும்.

பின்பு மீண்டும் 20 வகைப் பயிர்களை விதைத்து வளர்த்து 60 நாட்களில் உழுது நிலத்தில் மடக்கி உழ வேண்டும்.

அதனை அடுத்து மீண்டும் 20 வகை பயிர்களை விதைத்து வளர்த்து 90 நாட்களில் (பயிர்களின் விதைகள் முற்றிய பிறகு) உழுது நிலத்தில் மடக்க வேண்டும்.

 

 

பயிர் சுழற்சி முறை

ஒரே மாதிரியான பயிரினை தொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்வதன் மூலம் நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கலாம்.

நெல் பயிர் சாகுபடிக்கு பின் உளுந்து, எள், துவரை, பருத்தி   போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயிர் செய்யலாம். பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.

 

கலப்பு பயிர் பயிரிடுதல்

கலப்பு பயிர் பயிரிடுதல் முறையானது பருத்தியுடன் துவரை, உளுந்து பயிர்களை கலந்து பயிர் செய்வது, மிளகாயுடன் அகத்தியை பயிர் செய்வது போன்றவை ஆகும்.

இம்முறையானது விளைச்சலை அதிகப்படுத்தவும், தீமை செய்யும் பூச்சிகளை விரட்டவும் பயன்படுகிறது.

 

இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தல்

பயிர் செய்யும் நிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் காணப்படுகின்றன.

செயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது இருவகைப்பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன.

எனவே தீமை செய்யும் பூச்சிகளை விரட்டுவதற்கு இயற்கைப் பூச்சிவிரட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

இயற்கை பூச்சிவிரட்டிகள் பூஞ்சைப் பூச்சிவிரட்டி, இஞ்சி மிளகாய் பூண்டு பூச்சிவிரட்டி, இலைதழைகளில் இருந்து பெறப்படும் பூச்சி விரட்டி.

 

மூடாக்கிப் போடுதல்

மூடாக்கிடுதல் என்பது பயிர்களுக்கு இடையே இலைதழை, வைக்கோல், கரும்பு சோகை ஆகியவற்றைக் கொண்டு மூடுதல் ஆகும்.

இதனால் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். மண்புழுக்கள் வளர ஏதுவாகும். களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். மண்ணின் இயற்பியல் தன்மை பாதுகாக்கப்படும். மூடாக்கு இடுவதன் மூலம் அதிக விளைச்சலையும் பெறலாம்.

 

இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல்

பயிர்களுக்கு இயற்கை உரங்கள் ஆன மண்புழு உரம், சாணஎரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

இதனால் குறைந்த செலவில் நிறைய விளைச்சலைப் பெறலாம். ஆரோக்கியமான உணவுப்பொருட்களை பயனீட்டாளரும் பெறலாம்.

 

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துதல்

பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சலைத் தர இயற்கைபயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். குணப்பசலம், தேங்காய்பால்மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவை இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆகும்.

 

பயிர்களுக்கிடையேயான காற்றோட்டத்தை அதிகரிப்பது

நெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்ப பயிரின் வகைகளைப் பொறுத்து அவற்றிற்குத் தேவையான இடைவெளி விட்டு பயிர் செய்ய வேண்டும்.

 

நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்

தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்தி இயற்கைமுறையில் வேளாண்மை செய்வதன் மூலம் அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களைப் பெற முடியும்.

 

தற்போது நம் நாட்டின் வேளாண்துறையில் இயற்கை வேளாண்மை என்றொரு பிரிவு செயல்பட்டு வருகிறது. எல்லோரும் இயற்கை வேளாண்மையின் நன்மைகளைப் புரிந்து கொண்டு அதற்காக முனைந்து செயல்படுவோம்.

-வ.முனீஸ்வரன்


Comments

“இயற்கை வேளாண்மை” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Nancy Chandrasekar

    The information provided in very simple language was very useful!!!!!!!!!

  2. This methods r very useful 2 me….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.