முன்னொரு காலத்தில் பருத்தியூரில் கந்தன் என்பவன் வசித்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். இரக்க குணம் உள்ளவன். ஆனால் அப்பாவி.
அவனுக்கு அம்மா மட்டுமே இருந்தார். அவனுடைய தந்தையார் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். அவனுக்கு சொந்தமாக எந்த வேலையும் செய்யத் தெரியாது.
வறுமையில் வாடிய அவன் தன்னுடைய ஊரில் உள்ளவர்கள் கூறும் எடுபிடி வேலையை செய்து பிழைப்பை நடத்தி வந்தான்.
ஒருநாள் சலவைக்காரர்களுடன் துணிகளை சலவை செய்வதற்காக ஆற்றிற்குச் சென்றான். ஆறு செல்வதை பார்த்துக் கொண்டிருந்த கந்தன் சலவைக்காரனிடம் “ஐயா, இந்த ஆறு எங்கே செல்கிறது?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “நம் ஊரின் வழியாகத்தான் செல்கிறது” என்றனர்.
அதனைக் கேட்டதும் கந்தன் சலவை செய்த துணிகளை எல்லாம் ஆற்றில் போட்டான். கந்தனின் செயலைக் கண்ட சலவைக்காரர்கள் கோபத்தில் கந்தனை ஆற்றில் தூக்கிப் போட்டுவிட்டு “நீயும் இந்த ஆற்றில் போனால் நம் ஊரை அடைவாய்” என்று கோபத்தில் கூறினர்.
கந்தனும் மிகவும் சந்தோசமாக அவர்களுக்கு நன்றி கூறினான். பின் ஆற்றின் வேகம் அதிகரித்தால் கந்தனால் தாக்குப் பிடிக்க முடியாவில்லை.
மயங்கிய அவன் ஏதோ ஒருஇடத்தில் கரை ஒதுங்கினான். மயக்கம் தெளிந்த கந்தன் கால்போன போக்கில் போனான்.
கந்தன் செய்த உதவிகள்
அப்போது ரோஜாச்செடி ஒன்று தண்ணீர் இல்லாமல் வாடி இருப்பதைக் கண்டான்.ரோஜாசெடியைச் சுற்றிலும் தண்ணீர் நிற்பதற்கு ஏதுவாக கரையைக் கட்டி தண்ணீர் விட்டான்.
அவனுக்கு நன்றி சொல்லிய ரோஜாச்செடி பூக்களைக் கொடுத்தது. ரோஜாபூக்களை பத்திரமாக வைத்துக் கொண்டான்.
பின்னர் அவன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது காலில் முள்குத்தியதால் பசு ஒன்று கண்ணீர் வடிப்பதைக் கண்டான்.பசுவின் காலில் இருந்த முள்ளினை நீக்கிவிட்டு அதற்கு பச்சிலை வைத்துக் கட்டினான்.
அவனுக்கு நன்றி தெரிவித்த பசு சிறுமணியை அவனிடம் கொடுத்து உதவி தேவைப்படும்போது அடித்தால் அவனுக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தது.
மேலும் பயணம் செய்தபோது மீன் ஒன்று ஏரியின் தண்ணீரைவிட்டு வெளியே துள்ளிக் கொண்டிருந்தது. மீனினை ஏரியினுள் விட்டான்.
அப்போது மீன் அவனிடம் முத்து ஒன்றை கொடுத்தது. அதனையும் பத்திரப்படுத்திய அவன் தொடர்ந்து பயணம் செய்து தலைநகரை அடைந்தான்.
அப்போது ராணி நோய்வாய்பட்டிருப்பதாகவும், அவரைக் காப்பாற்றுபவருக்கு பாதி நாடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
இதனைக் கேட்டதும் தன்னிடம் இருந்த சிறுமணியை அடித்து பசுவை உதவிக்கு அழைத்தான்.
உடனே அவ்விடத்திற்கு வந்த பசு அவனிடம் ஒரு செம்பு பாலினைக் கொடுத்து “இப்பாலினைக் கொதிக்க வைத்து உன்னிடம் இருக்கும் மீன் கொடுத்த முத்தினை போட்டால் முத்து கரைந்து விடும். அப்பாலினை அரசிக்கு பருகக் கொடு. பின்னர் உன்னிடம் இருக்கும் ரோஜாப்பூக்களை நுகரச் சொல். ராணியின் நோய் குணமாகிவிடும்.” என்று கூறியது.
கந்தனும் பசு கூறியவாறே பாலினைக் காய்ச்சி முத்தினை அதில் போட்டு கரைத்து எடுத்துக் கொண்டான். ரோஜாப்பூக்களையும் தன்னுடன் கொண்டு சென்றான்.
பின்னர் அரண்மனைக்கு சென்று பசு கூறியவாறு பாலினை ராணியைக் குடிக்கச் செய்தான். ராணியின் பாதி நோய் குணமாகியது.
பின்னர் ரோஜாப்பூக்களை நுகரச் செய்தான். ராணியின் நோய் முற்றிலும் குணமாகியது.
அரசனும் அறிவிப்பு செய்தபடி நாட்டின் பாதியை கந்தனுக்கு கொடுத்தான். அரசனான கந்தன் நல்ல முறையில் ஆட்சி செய்து தன் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
இரக்கத்தின் பரிசு கதையின் கருத்து
நாம் பிறருக்கு உதவினால் தக்க சமயத்தில் நமக்கும் உதவி கிடைக்கும். ஆதலால் எல்லோருக்கும் நம்மால் இயன்றவரை உதவ வேண்டும் என்பதே இரக்கத்தின் பரிசு கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.