இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தையான பொன்னனையாள் என்பவளுக்காக வெண்கல, இரும்பு, ஈயம் உள்ளிட்டவைகளை இரசவாதத்தின் மூலம் தங்கமாக மாற்றிய நிகழ்வை விளக்குகிறது.

இரசவாதம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது.

பொன்னனையாளின் விருப்பம்

மதுரைக்கு அருகில் திருப்பூவனம் என்னும் ஊர் ஒன்று இருந்தது. (தற்போது அது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது). அவ்வூரில் இருந்த பூவனநாதர் என்னும் திருக்கோவில் இருந்தது.

இக்கோவிலில் கணிகையர் எனப்படும் ஆடல்குலப் பெண்கள் ஆடல், பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்பினர். அப்பெண்களில் ஒருத்தி பொன்னனையாள்.

அவள் ஆடல் மற்றும் பாடல்களில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். அவள் தினமும் பூவனநாதர் கோவிலுக்குச் சென்று மற்ற ஆடல்மகளிருடன் இணைந்து ஆடல் மற்றும் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்புவாள்.

பின்னர் தன் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து எஞ்சிய உணவினை உண்பாள். இதனையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு தன் நாட்டியத்திற்கு அதிபதியான இறைவனாரை பொன்னால் வடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பொன்னால் இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டுமானால் அதற்கு நிறையப் பணம் வேண்டும்.

ஆடல், பாடல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதும் அடியார்களுக்கு தொண்டு செய்வதிலேயே கழிந்தது. எனவே பொன்னாலான இறைவனின் திருமேனியை செய்வதற்கு அருள்புரியுமாறு இறைவனாரிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் பொன்னனையாள்.

மதுரை சொக்கேசரும் பொன்னனையாளின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார்.

இறைவன் இரசவாதம் செய்தல்

சொக்கேசர் சிவனடியாரின் வடிவம் ஏற்று சித்தராக பொன்னனையாள் இல்லத்திற்கு எழுந்தருளினார். பொன்னையாளின் இல்லத்தில் சிவனடியார்கள் எல்லோருக்கும் திருவமுதினைப் படைத்தாள்.

சித்தரான சிவனடியார் அமுதுண்ண இல்லத்திற்கு உட்செல்லாமல் புறக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது பொன்னனையாளின் பணிப்பெண் சித்தரை திருவமுது உண்ண வருமாறு அழைத்தாள்.

சித்தரோ இவ்வில்லத்திற்கு உரிமையான பொன்னனையாளை அழைத்து வருமாறு கூறினார். சித்தர் கூறியதை பணிப்பெண் பொன்னனையாளிடம் தெரிவித்தாள்.

அதனை ஏற்று பொன்னனையாளும் சித்தர் இருப்பிடத்திற்கு வந்தாள். சித்தரிடம் “ஐயா, தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களுக்கு பணிவிடை செய்கிறேன். தாங்கள் தயவுகூர்ந்து திருவமுது உண்ண வாருங்கள்” என்று கோரிக்கை வைத்தாள்.

சித்தரும் பொன்னனையாளிடம் “பெண்ணே, உன்னுடைய முகம் வாடியும், உடல் மெலிந்தும் இருப்பதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார்.

பொன்னனையாளும் பொன்னாலான இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து அதனாலேயே தான் முகம்வாடி, உடல் மெலிந்து இருப்பதாகக் கூறினாள்.

இதனைக் கேட்டதும் சித்தர் “சரி, உன்னுடைய வீட்டில் உள்ள வெள்ளி, இரும்பு, செம்பு, வெண்கல, ஈயப் பொருட்களை கொண்டு வா. நான் அதனை எல்லாம் பொன்னாக மாற்றித் தருகிறேன். அதனைக் கொண்டு நீ உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்று கூறினார்.

பொன்னனையாள் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் அவளின் வீட்டில் இருந்த சித்தர் கூறிய பொருட்களை எடுத்து வந்தாள். சித்தரும் அப்பொருட்களின் மீது திருநீற்றினைத் தூவி “இவற்றை இரவு முழுவதும் நெருப்பில் இட்டு விடு” என்று கூறினார்.

அதற்கு பொன்னையாள் “ஐயா, தாங்கள் இங்கு தங்கியிருந்து பொன்னாலான இறைவனின் திருமேனியைக் காண வேண்டும்.” என்று கூறினாள்.

அதற்கு சித்தர் “பொன்னனையாள், நான் மதுரையில் வசிப்பவன். என்னை சித்தன் என்பார்கள். முதலில் நீ உன்னுடைய பணிகளை முதலில் முடி. நீ விரும்பும்போது இங்கு வருவேன்” என்று கூறி மறைந்தருளினார்.

பொன்னனையாளும் அவ்வுலோகப் பொருட்களை தீயில் புடமிட்டாள். மறுநாள் காலையில் அப்பொருட்கள் பொன்னாக மின்னின.

இதனைக் கண்டதும் பொன்னனையாள் “இச்செயலை சாதாரணமானவர்கள் செய்ய இயலாது. சிவனடியாராக வந்தது சொக்கநாதரே” என்பதை உணர்ந்தாள்.

பின்னர் பொன்னாலாகிய இறைவனின் திருமேனியை உண்டாக்கினாள். அத்திருமேனியின் அழகில் சொக்கிய பொன்னனையாள் திருமேனியைக் கிள்ளி “அழகிய பிரானோ” என்று கொஞ்சி முத்தமிட்டாள்.

பொன்னனையாள் கிள்ளியதால் ஏற்பட்ட நகக்கீறலும், அழகிய பிரான் என்ற பெயரும் இறைவனுக்கு நிலைத்து விட்டன.

இரசவாதம் செய்த படலம் கூறும் கருத்து

தன் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை இறைவனார் கட்டாயம் நிறைவேற்றுவார் என்பதே இரசவாதம் செய்த படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

முந்தைய படலம் தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

அடுத்த படலம் சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.