இரட்டை சந்தோஷம்

ஜி.எம். பதவிக்கான நேர்முகத் தேர்வில் கடைசியாக வந்த இளைஞன் அருணை அந்நிறுவனத்தின் எம்.டி. ஜெகதீசனுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.

கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலளித்த அருணிடம்,

“கடைசியாக ஒரு பொதுவான கேள்வி மிஸ்டர் அருண்!” என்று நிறுத்தினார்.

“கேளுங்கள் சார்!” என்றான் அருண்.

“எல்லோருக்கும் வாழ்க்கையில் லட்சியம்னு ஒண்னு இருக்கும். உன் லட்சியம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“ஷ்யூர் சார். மாற்றுத்திறனாளியான ஊனமுற்ற ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை அளிக்க உத்தேசம்”

எம்.டி.க்கு வானில் பறப்பது போலிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்த திருப்தி.

போலியோ அட்டாக்கில் சூம்பிய காலுடன் கோல் ஊன்றி நடக்கும் அழகு ரதியான மகள் வித்யாவுக்கு இவன்தான் மிகச்சரியான வரன். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் தீர்மானத்துடன்

“ரொம்ப சந்தோஷம் அருண். யூ ஆர் அப்பாயிண்டட். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.

“என்ன சார்?” ஆவலுடன் கேட்டான் அருண்.

தன் மகள் வித்யாவைப் பற்றி விவரங்களைக் கூறிய எம்.டி. “இந்த நிறுவனத்திற்கு நீ ஜி.எம். மட்டுமல்ல. என் மாப்பிள்ளையாகவும் இருக்கணும்” என்றார்.

“ஓ.கே. சார் ஆனால் ஒரு கண்டிஷன்” என்றான் அருண்.

“சொல்லுப்பா” என்றவரிடம்

“எனக்கு முன் வந்த இளைஞனும் ஊனமுற்றவன்தான். என் நெருங்கிய நண்பன். என்னைப் போல நன்கு படித்த திறமைசாலி. உங்க நிறுவனத்தில் அவனுக்கும் வேலை போட்டுத் தரணும்” எனக் கேட்டான் அருண்.

“இந்நிறுவனத்தின் ஜி.எம். நீ. உன் நண்பனுக்கு என்ன வேலை தரலாம் என்பதை நீதான் முடிவு செய்யணும்”

எம்.டி. இப்படி சொன்னதும் அருணுக்கு இரட்டை சந்தோஷம். மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு உதவிய திருப்தி அவன் முகத்தில் தவழ்ந்தது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998