சந்திர வானவில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இயற்கையின் வளிமண்டல நிகழ்வான இதனை இரவின் அழகு என்று சொன்னால் மிகையாகாது.
நாம் சாதாரணமாக வானவில்லை காலையிலும் மாலையிலும் மழை பெய்வதற்கு முன்னும் பின்னும் கண்டிருப்போம். அதாவது வானவில்லை சூரியன் இருக்கும் நேரத்தில்தான் நாம் பார்த்திருப்போம்.
ஆனால் சந்திர வானவில்லை இரவு நேரங்களில் காணலாம். சந்திர வானவில் பற்றி மேலும் பார்ப்போம்.
வானவில் என்றால் என்ன?
பொதுவாக வானவில் என்பது காற்றில் மழைத்துளி அல்லது பனித்துளி இருக்கும்போது சூரிய ஒளியானது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைந்து சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தோன்றுகிறது. இந்நிகழ்வில் மழைத்துளி அல்லது பனித்துளியானது முப்பட்டகம் போல் செயல்படுகிறது.
சந்திர வானவில்
சந்திர ஒளியானது மழைத்துளி அல்லது நீர்வீழ்ச்சிகளின் நீர்திவலைகளினால் ஏழுவண்ணங்களாக பிரிகை செய்யப்பட்டு சந்திரன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தோன்றுகிறது.
இது சூரிய வானவில்லைப் போன்று பிரகாசமாக இருப்பதில்லை. சந்திரனின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் அளவானது சிறிதாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
இதனால் சந்திர வானவில் பெரும்பாலும் மனிதக் கண்களால் பிரித்தறியப்பட முடியாமல் வெள்ளைநிறமாகவே அறியப்படுகிறது. இதனால் இது வெள்ளை வானவில் என்றழைக்கப்படுகிறது.
சந்திர வானவில்லை ஆங்கிலத்தில் மூன்போ என்று அழைக்கின்றனர். சந்திர வானவில்லை நீண்ட வெளிப்பாடு புகைப்படம் எடுப்பதன் மூலம் தெளிவாகக் காணலாம்.
கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் தனது வானஇயற்பியலில் சந்திர வானவில்லைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சந்திர வானவில் ஏற்பட அவசியமான காரணிகள்
சந்திர வானவில்லானது அரிதாக தோன்றுகிறது. இது உண்டாக சில அவசியமான வானியல் நிலைமைகள் மற்றும் வானிலை கூறுகள் தேவைப்படுகின்றது. அவை
1. நிலவானது வானத்தில் மிகக்குறைந்த உயரத்தில் இருக்க வேண்டும். அதாவது நிலவிற்கும், அடிவானத்திற்கும் இடைப்பட்ட கோண அளவானது 42 டிகிரிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. நிலவானது முழுநிலவாகவோ அல்லது கிட்டத்தட்ட முழுநிலவாகவோ இருக்க வேண்டும்.
3. வானமானது அடர்ந்த கருமை நிறத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் எந்த பிரகாச ஒளியும் இந்நிகழ்வினை மறைத்துவிடும்.
4. நிலவு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் காற்றில் நீர்த்துளிகள் இருக்க வேண்டும்.
சந்திர வானவில் அதிகமாகத் தோன்றும் இடங்கள்
ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசியப்பூங்கா, கன்பெர்ன் மற்றும் கென்சினுக்கு அருகில் உள்ள கம்பர்லாண்ட் நீர்வீழ்ச்சி, ஆப்பிரிக்காவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாவே நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி, ஹவாய் தீவுகள் ஆகிய இடங்களில் இதனைக் காணலாம்.
குரேசியாவில் பில்டிவைஸ் ஏரி, கோஸ்டாரிக்காவின் மழைக்காடுகள் ஆகிய இடங்களில் தெளிப்பு சந்திர வானவில்லைக் காணலாம்.