இரவில் பாடும் தவளை

அழகான அந்த குளக்கரையில் மலர்ந்த தாமரை மலர்களின் மீது மோதியபடி அதன் இலைகளின் மீது ஏறி தாவிக்கொண்டே அங்குமிங்குமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த தவளை தங்கப்பன் கரையினை ஒட்டியிருந்த மணற்பாங்கான பகுதியில் தனது வளையிலிருந்து வெளியே வந்து மெல்ல நடந்து கொண்டிருந்த நண்டு நல்லப்பனைக் கண்டது.

தவளை தங்கப்பன் அவ்வப்போது பாடுவதும் உண்டு. நண்டு நல்லப்பனைக் கண்டவுடன் பாடத் தொடங்கியது.

“கர கர கர இக்குளக்கரையில்

வாழும் தவளை நான்தானே

விரு விரு விரு வெனஅங்குமிங்கும்

விரைந்து செல்வதில் வல்லவனே

துறு துறு துறு வென இக்குளத்தில்

என்போல் எவரும் கிடையாதே

கர கர கர இக்குளத்தின்

காவல் காரனும் நான்தானே” என்ற தவளை தங்கப்பனின் பாடலைக் கேட்டதும் நண்டு நல்லப்பன் அதனருகில் வந்தது.

“தாவும் தவளை தங்கப்பா

தரையில் நான் தான் பாரப்பா

மேவிய மணலில் ஓரத்தில்

மூடிய வளையில் வாழ்பவன் நான்

கூவும் குயில் போல் நீ பாட

கேட்டிட விரும்பியே வந்தவன் நான்

நாவால் நீயும் பாடிடவே

நானும் நடனம் ஆடிடுவேன்”

என்று தனது மனதில் உள்ள ஆசையினை தவளை தங்கப்பனிடம் கூறியது.இதனைக் கேட்ட தவளை தங்கப்பனும் சரி அது போலவே செய்யலாம் என ஒப்புக் கொண்டது.

தவளை தங்கப்பன் மீண்டும் பாடுவதற்கு தயாரானது. நண்டு நல்லப்பன் தனது முழு உடலையும் அடைத்தபடி ஆடுவதற்கும் தயாராக இருந்தது. அப்போது அந்தக் குளத்திலிருந்து மெல்ல தலையை வெளியே நீட்டியபடி ஆமை ஒன்று வெளியே வந்தது.

 

ஆமை ஒன்று தவளை மற்றும் நண்டு ஆகிய இருவரையும் பார்த்தபடியே அவர்களை நோக்கி வந்தது.

“அன்புள்ளம் கொண்ட நண்பர்களே

ஆமை என் பெயர் அழகப்பன்

மென்மை கொண்ட மனமுண்டு

மிகுந்த வலிமை என் உடலினுக்கு

பாடிய ஒலிதனையே

இன்ப மனதுடன்

இனிதாய் கேட்க வந்தேனே

துன்பமில்லா உங்களுடன்

துணையாய் என்னையும் ஏற்பீரோ?

என்று தன்னையும் நண்பனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியது.

இவ்வாறாக தவளையின் பாட்டினைக் கேட்டு மயங்கிய இருவர் தனக்கு நண்பர்களாக கிடைத்ததை எண்ணிய தவளை தங்கப்பனுக்கு தலைக்கனம் உண்டானது. தலைக்கனம் மிகுதியால் மீண்டும் பாடத் தொடங்கியது.

தவளை தங்கப்பன் பாட நண்டு நல்லப்பன் ஆடிட ஆமை அன்பழகனும் தனது தலையை ஆட்டியபடி பாட்டினையும் நண்டினுடைய நடனத்தையும் ரசித்தது.

இங்கு நடக்கின்ற நிகழ்வுகளை கண்டாலும் அதற்கும் தமக்கும் எந்த விதமான உறவோ பாதிப்போ இல்லை எனும் விதமாக மீன் ஒன்று தண்ணீருக்குள்ளிருந்து மேலே துள்ளி துள்ளி குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.

அதனைக் கண்ட தவளை தங்கப்பன் தான் பாடுவதை நிறுத்திவிட்டு துள்ளியபடி குதித்துக் கொண்டும், நீந்திக் கொண்டும் இருந்த மீன் முத்தையனை அழைத்தது. தவளை தங்கப்பன் அழைத்ததையும் கண்டு கொள்ளாது இருந்த மீன் முத்தையன் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.

தவளையின் மனநிலையினை அறிந்து கொண்ட அவனது தோழர்களான நண்டு நல்லப்பனும், ஆமை அன்பழகனும் கூடி பேசலாயின. அதன்படி தங்களை கண்டு கொள்ளாது இருக்கும் மீன் முத்தையனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தன.

 

அதன்படி அவை மூன்றும் சேர்ந்து மீன் முத்தையனை அழைத்தன.

துள்ளும் மீனே முத்தையா

தோழர்கள் எங்களை பாரய்யா

நல்ல நீரால் நிறைந்திட்ட

இக்குளத்தில் வாழும் நண்பர்கள் தான்

மெல்ல எங்கள் பேச்சை நீ

மெதுவாய் கேட்டே செல்வாயே!
என கூறியதைக் கேட்ட மீன் முத்தையா தான் துள்ளுவதை நிறுத்திவிட்டு நீரின் மேல் மிதந்து செல்ல துவங்கியது.

மீன் மீது பொறாமை கொண்ட தமது மனத்தினை மறைத்தபடி மூவரும் இணைந்து மீன் முத்தையனையும் தங்களுடன் ஒன்றாக இணைத்துக் கொண்டன.

புதிய நண்பர்கள் அனைவருக்கும் தான் விருந்து கொடுக்க விரும்புவதாகவும் அதற்கென மற்ற மூவரும் தமது வீட்டிற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

இவர்களின் தவறான எண்ணத்தைப் பற்றி ஏதுமறியா அப்பாவியான மீன் முத்தையாவும் தானும் விருந்துக்கு வருவதாக ஒப்புக் கொண்டது.

விருந்து நாளன்று தவளையின் வீட்டிற்கு நண்பர்கள் அனைவரும் வந்தன. தவளை தங்கப்பனும், அவர்களுக்கான உணவு வகைகளை எடுத்து வைத்தபடி இருந்தது.

தான் வாழும் நீரினை விட்டு வெளியே வந்தவுடன் தனக்கு தங்குவதற்கு நீர் நிரம்பிய ஒரு சிறிய அறை ஒன்று வேண்டும் என மீன் முத்தையன் ஏற்கனவே கேட்டுக் கொண்டாலும் அது மாதிரி அறை ஒன்றினை தவளை தங்கப்பன் உருவாக்கி வைக்காமல் இருந்தது.

மீன் முத்தையனின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் நீர் நிரம்பிய அறையினை உருவாக்காமல் விட்டதோடு அல்லாமல் தனது வீட்டினுள் சேமித்து வைத்திருந்து நீர் நிரம்பிய அனைத்து பாத்திரங்களிலிருந்து நீரினை தரையில் கொட்டிவிட்டது.

இதையெல்லாம் கண்டவுடன் தவளையின் மனதினை தெளிவாக மீன் முத்தையன் புரிந்து கொண்டது. தான் ஏமாற்றப்பட்டோம் எனவும் இன்னும் சிறிது நேரம் நீர் இல்லாவிட்டால் இறக்க நேரிடும் எனவும் நினைத்து கவலைப்பட்டது.

ஆனால் தவளை தங்கப்பனுக்கோ இக்குளத்தின் மேலே இருக்கும் உயரமான மலையின் மீதிருக்கும் நீர் தேங்கியிருக்கும் நிலையினைப் பற்றி தெரியாமல் இருந்ததால் மீன் முத்தையா இன்னும் சற்று நேரத்தில் இறப்பது உறுதி என எண்ணி மகிழ்ந்தது.

இங்கு நடப்பவற்றை எல்லாம் பார்த்தபடி குளக்கரையின் உயரமான மரத்திலிருந்த கடற்காகம் ஒன்று விரைந்து சென்று மலையின் மேலே தேங்கியிருந்த தண்ணீரை கீழே விழும்படியாக பாதையினை உண்டாக்கிவிட்டது. புதிய பாதையின் வழியாக விரைந்து விழுந்த நீர் அருவியாக தவளை தங்கப்பனின் வீட்டினை மூழ்கடித்தது.

திடீரென்று விழுந்த அருவி நீரினால் மீன் முத்தையன் உயிர் பிழைத்ததோடு மீண்டும் குளத்தினை அடைந்தது.

தனது கெட்ட எண்ணத்தால் தோல்வி அடைந்த தவளை தங்கப்பன் வீட்டினை இழந்ததோடு பாறைக்குள் சென்று மறைந்து வாழத் தொடங்கியது.

இப்போதும் கூட தவளை தங்கப்பன் தனது பாட்டால் மீன் முத்தையாவை மகிழ்விக்க வேண்டும் என்று அவ்வப்போது பாடத் தொடங்குவதையும், அது பாடத் துவங்கியதும் மீன் முத்தையன் தனது உறவினர்களோடு குளத்தின் அடிப்பகுதிக்குச் சென்று விடுவதையும் நாம் காணலாம்.

ஆனால் தவளையின் நண்பர்களான நண்டு நல்லப்பனோ ஆமை அன்பழகனோ இப்போதெல்லாம் தவளையின் பாட்டுக்காக ஆடுவதும் தாளம் போடுவதும் இல்லை.

தாங்கள் மீன் முத்தையனுக்கு துரோகம் இழைத்து விட்டோம் என்ற துயரத்துடன் தத்தமது இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதே இல்லை.

தவளை இல்லாத நேரங்களில் மட்டுமே வெளியே நடமாடும். இவர்கள் மீன் முத்தையனை பார்ப்பதற்கே வெட்கப்பட்டு ஆமை முகத்தை மூடிக் கொள்வதையும் நண்டு வளைக்குள் ஓடி ஒளிந்து கொள்வதையும் வழக்கமாக்கி கொண்டன.

பகற்பொழுதெல்லாம் நண்பர்களின்றி தனித்து விடப்பட்ட தவளை தங்கப்பன் வருத்தமான குரலில் இரவு பொழுதுகளில் மட்டுமே பாடுவதை நாமும் கேட்கலாம்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)