நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை

அந்த தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன் ஸ்டூலில் காக்கிச் சீருடையில் அமர்ந்திருந்த சாரங்கன் ஒருவித சலிப்புடன் கொட்டாவி விட்டவாறே சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்.

அதிகாலை நான்கு மணி.

வெறுப்பாக இருந்தது அவனுக்கு. இன்னும் இரண்டு மணி நேரத்தைத் தள்ள வேண்டும். பொழுது புலரும் காலை ஆறு மணியளவில் தான் இரவுப்பணி முடியும்.

“என்ன வேலை வேண்டிக் கிடக்கு? வருடத்தில் ஆறு மாதங்கள் இரவுப்பணி தான். இரவு பத்து மணிக்கு வந்தால் காலை ஆறு மணி வரை தொழிற்சாலை வாயிலில் வாசம் செய்ய வேண்டும்” தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான்.

எட்டாம் வகுப்பு தோல்வியுற்றவனுக்கு ஆபீசர் வேலையா கிடைக்கும்? பிரம்ம பிரயத்தனம் செய்து இந்தக் காவலாளி வேலையைத் தேடிக் கொண்டான். அவனுக்கு விருப்பமில்லாத வேலைதான்.

சொந்தமாகத் தொழில் செய்ய வசதியும் இல்லை. எதை நம்பி இவனுக்கு கடன் கொடுப்பார்கள்? நடையாய் நடந்து, நாயாய் அலைந்து உள்ளுர் எம்.எல்.ஏ சிபாரிசில் இந்த வேலை கிடைத்திருக்கிறது.

வேலையில் சேர்ந்த கையோடு ஓராண்டு முடிந்ததும், திருமணமும் செய்து கொண்டாயிற்று. திருமணத்திற்கு முன் ஏற்படாத சலிப்பும், வெறுப்பும் திருமணமான பிறகு விஸ்வ ரூபமாய் மாறி அவனைப் படாதபாடு படுத்தியது.

புத்தம் புது மனைவி வீட்டில் இரவில் தனியாய் இருக்க, தினம் ஒரு முழு இரவை அநியாயமாய் வீணடிக்க வேண்டியிருக்கிறதே என்பதே அவனின் பெருமூச்சு.

காலை ஆறு மணி ஆனதும், இரவுப் பணி முடிந்த சந்தோஷத்தோடு குஷியுடன் கிளம்பினான் சாரங்கன்.

தொழிற்சாலையிலிருந்து நகரப் பேருந்து மூலம் அரைமணி நேரம் பயணம் செய்து வீட்டை அடைய வேண்டும். அருகிலிருந்த நகரப் பேருந்து நிலையம் நோக்கி நடையைத் துரிதப்படுத்தினான்.

எதிரே ஒருவன் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு சிறிய கம்பியினாலான தடியால் தரையைத் தட்டிக் கொண்டே மற்றொரு கையில் பையை வைத்துக் கொண்டு (லாட்டரிச் சீட்டுகளை அடுக்கிக் கொண்டு) தட்டு தடுமாறி வந்து கொண்டிருந்தான்.

சாரங்கன் அவன் மீது மோதிவிடாமல் சற்றுக் கவனமாக விலகிச் செல்கையில் அவனது அவசரத்தைப் புரிந்து கொள்ளாமல் “ஐயா, இட்லிப்பொடி, மாஊறுகாய் இருக்கு. வாங்கிக்கோங்க..!” என்றான் அவன்.

சாரங்கன் எரிச்சலடைந்தான்.

“யோவ்! காலங் கார்த்தாலேயே வந்து ஏன்யா கழுத்தை அறுக்கறே?! உங்களுக்கெல்லாம் வேறு வேலை வெட்டி இல்லையா?” உஷ்ணமாக வார்த்தைகளைக் கொட்டிய சாரங்கனிடம்

“ஐயா! இப்படி லாட்டரிச் சீட்டு விற்றுக் கிடைக்கிற கமிஷன்ல தான் எங்களைப் போன்றவங்க வாழ்க்கையே ஒட்டிக்கிட்டிருக்கு.

நாங்க நேரம் காலம் பார்த்ததால் எங்க பொழைப்பு எப்படிங்க நடக்கும், பேக்கடரி நைட் ஷிப்ட் முடிஞ்சு எல்லோரும் வர்ற நேரமாய் இருக்கிறதுனால ஒரு சிலராவது எங்க பொழைப்புக்கு உதவ மாட்டாங்களாங்கிற நப்பாசைதான்.

நீங்கெல்லாம் இரவு முழுக்க வேலை செஞ்சாவது கை நிறைய சம்பாதிக்கிறீங்க. நாங்க இரவில் என்னங்க பண்றது?

எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள்கூட இரவில்தான் உழைக்கிறோம். புரியலீங்களா? இந்த பகல்கூட எங்களுக்கு இரவு தானே?” என்றான் அந்தக் கண்பார்வையற்ற இளைஞன்.

அவன் இப்படி சொன்னதும் நிலைகுலைந்து போன சாரங்கன் சற்று நின்று அவனைப் பரிதாபமாகப் பார்த்தான்.

தான் செய்யும் தொழில், தன் நிலைமையைக் கொஞ்சம்கூட நிந்திக்காமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன், மனநிறைவுடன் காலந்தள்ளி வரும் இவனைப் போன்ற பார்வையற்ற ஊழியர்களைச் சற்று எண்ணிப் பார்த்தான்.

கூனிக்குறுகிப் போனது அவன் மனம். கொட்டிய உஷ்ண வார்த்தைகளுக்குப் பரிகாரமாக அவனிடமிருந்து சில லாட்டரிச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டான்.

இப்போதெல்லாம் சாரங்கன் இரவுப் பணி குறித்து அலுத்துக் கொள்வதோ, சலித்துக் கொள்வதோ இல்லை.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

ஆசிரியரின் பிற படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.