இராமானுஜர் – 1000 ஆண்டுகள்

இராமானுஜர்

இராமானுஜர் இந்திய நாட்டின் புகழ்மிக்க பக்தி இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்.  1000 ஆண்டுகள் முன்பு பிறந்த இவர் சமய‌ம் மற்றும் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்தவர். 

இராமானுஜர்ஆழ்வார்களின் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் இசையுடன் பாடிட வழிவகுத்தவர். இதனால் இவர் தமிழ் வேதமான திருவாய் மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுகிறார். பன்மொழிப் புலமைமிக்கவர்.

இராமானுஜர் தமிழ் மறையை தழைக்கச் செய்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சாதி மத பேதமின்மை ஆகிய கொள்கைகளை மக்களிடையே உபதேசித்ததோடு அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டியவர்.

ஆன்மிகத்தோடு சமூக ஒற்றுமையும் வலியுறுத்திய சிறந்த சமூக ஆன்மீக சீர்திருத்தவாதி. ஆதிதிராவிடர்களைத் திருக்குலத்தவர் என்று புகழ்ந்தவர். உடையவர், ஸ்ரீ பாஷ்யக்காரர், எம்பெருமானார், திருப்பாவை ஜீயர், யதிராஜமுனி, இளையபெருமாள் என பல பெயர்களால் குறிப்பிடப்படுபவர்.

திருவரங்கம் கோவிலின் நிர்வாகத் திட்டங்களை சீரமைத்து, தொகுத்து வகுத்தவர். இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத் தத்துவத்தைத் தோற்றுவித்தவர். விசிஷ்டாத்துவைதத்தை இந்தியா முழுவதும் பரப்பியவர்.

ஏழை எளிய மக்களிடமும் வைணவம் பரவக் காரணமானவர். பரிபூரணமான பக்தியும் சரணாகதியுமே இறைவனை அடைவதற்கான எளிய வழி என்று கூறி மக்களை எளிய வழியில் நெறிப்படுத்தியவர்.

 

பிறப்பு மற்றும் இளமைக் காலம்

இராமானுஜர் தமிழ்நாட்டில் ஸ்ரீ பெரும்புதூரில் 04.04.1017ல் சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது தந்தையிடம் இருந்து வீட்டிலேயே வேதங்களை கற்று வந்தார்.

சிறு வயதிலேயே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்களை எளிதாகப் புரிந்து கொண்டார். தனது 16வது வயதில் தஞ்சம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான சிலமாதங்களில் தனது தந்தையை இழந்தார்.

பின் கல்வி கற்கும் ஆர்வத்தினால் ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார். காஞ்சிபுரத்தில் யாதவ பிரகாசர் என்கிற பண்டிதரிடம் சீடராகச் சேர்ந்தார். கல்வி, கேள்வி ஞானங்களில் தேர்ச்சி பெற்றவரான யாதவ பிரகாசர் அளித்த சில அத்வைத விளக்கங்களில் ராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்டு யாதவ பிரகாசர் இராமானுஜரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்ய எண்ணி காசிக்கு சீடர்களுடன் பயணமானார்.

காசியை நெருங்கும் போது தனது தம்பி கோவிந்தன் மூலம் குருவின் திட்டத்தை அறிந்து காசியிலிருந்து காஞ்சிக்கு தப்பினார் இராமானுஜர். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே நாள் இரவில் பெருமாளின் கருணையால் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.

 

துறவறம் மேற்கொள்ளுதல்

பின் திருக்கச்சி நம்பி என்பவரை குருவாக ஏற்றார். அவர் வைசிய குலத்தைச் சார்ந்தவர். இது ராமானுஜரின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. ஒருமுறை திருக்கச்சி நம்பிக்கு விருந்தளிக்க எண்ணி விருந்தினை தயார் செய்யுமாறு மனைவிடம் கூறினார். பின் திருக்கச்சிய நம்பியை அழைக்கச் சென்றார்.

நம்பிகளோ குறித்த நேரத்திற்கு முன்னதாக விருந்திற்கு வந்துவிட்டார். தஞ்சம்மாள் நடைபாதையில் நம்பியை அமரச் செய்து உணவிட்டாள். பின் அவர் சாப்பிட்ட இலையை கோலால் எடுத்தெறிந்துவிட்டு வீடுமுழுவதும் சாணம் தெளித்து சுத்தம் செய்து வேறு சமையல் செய்து இராமானுஜருக்காகக் காத்திருந்தாள். விவரம் அறிந்த ராமானுஜர் கோபம் கொண்டார்.

பின் ஒரு நாள் வைணவர் ஒருவருக்கு ஆகாரம் அளிக்குமாறு கூற வீட்டில் ஒன்றுமில்லை என்று பொய் கூறினாள். ராமானுஜரின் குருவான பெரிய நம்பின் மனைவியிடம் தகாத வார்த்தைகள் கூறினாள். இந்நிகழ்வுகள் இராமானுஜரை பாதித்தன. தன் பக்தி மார்க்கத்திற்கும், மனித நேயத்திற்கும் உறுதுணையாக இருக்க மாட்டாள் என்று எண்ணி துறவறம் மேற்கொண்டார்.

 

ஆச்சரிய பரம்பரையில் சேர்தல்

வைணவத்தில் ஆழ்வார்கள் பக்தியால் மக்களின் மனதைத் தொட்டவர்கள். ஆச்சாரியர்களோ புத்தி பூர்வமாக மக்களின் மனதைத் தொட்டவர்கள். ஆச்சாரிய குரு பரம்பரையில் முதல் ஆச்சாரியர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாத முனிகள் ஆவார். அவருக்குப் பின் யமுனாச்சாரியர் என்ற ஆளவந்தார் ஆச்சாரியர் ஆனார். இவர் நாதமுனிகளின் பேரன் ஆவார். அடுத்து வந்தவர் இராமானுஜர் ஆவார்.

யமுனாச்சாரியாரின் அழைப்பை ஏற்று அவரைப் பார்ப்பதற்கு பெரிய நம்பியுடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு காடு, மலை கடந்து திருவரங்கத்திற்கு ஓடோடி வந்தார் ராமானுஜர். ஆனால் யமுனாச்சாரியாரின் உயிர் பிரிந்த உடலையே காண நேர்ந்தது.

ஆனால் அவ்வுடலில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன. அதனைப் பார்த்த ராமானுஜர் யமுனாச்சாரியாரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று லட்சியங்களை நிறைவேற்றுவதாகக் கூறினார். அவை

1. வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்துவைத் தத்துவம் முறையில் விளக்கம் எழுதுவது

2. பாரசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலக்கு எடுத்து கூறுவது

3. விசிஷ்டாத்வைத்தை உலகிற்கு எடுத்து சொல்லி அறியாமையால் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு இறை அருள் கிடைக்கச் செய்வது

இவ்வாறு சொன்னதும் மூடி இருந்த விரல்கள் ஒவ்வொன்றாகத் திறந்தன.

பின் பல தேசங்களுக்குச் சென்று தனது விசிஷ்டாத்வைத் தத்துவங்களை எடுத்துரைத்தார். வாதம் செய்த பண்டிதர்களை விவதாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை ஏற்றுக் கொண்ட பல பண்டிதர்கள் அவரின் சீடர்கள் ஆனார்கள்.

 

ராமானுஜரின் உயர்ந்த மனம்

யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம் நாராயண மந்திரத்தின் ரகசியத்தை கற்க முயன்றார். 17 முறை முயன்றும் முடியாமல் 18வது முறையாக திருவரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு சென்று அறிந்து கொண்டார்.

ஆனால் திருக்கோட்டியூர் நம்பி மந்திரத்தின் ரகசியத்தை எவருக்கும் வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்ட போது சத்தியம் செய்துவிட்டு திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மீதேறி எல்லோரும் கேட்கும்படி உரக்கக் கூறினார்.

குருவின் வார்த்தை மீறியதற்காக நரகம் செல்வாய் என்று குரு கூறியபோதும் எல்லோரும் சொர்க்கம் செல்ல நான் ஒருவன் நரகம் செல்வது என்றால் அது என் பாக்கியம் தான் என்று கூறினார்.

இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி இந்த எண்ணம் எனக்கு ஏன் ஏற்படவில்லை என்று வருந்தி அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிவிட்டது எனக்கூறி ‘எம்பெருமானார்’ என்று கூறி கட்டி தழுவினார்.

 

சிறந்த நிர்வாகி

ராமானுஜர் திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நிகழ்ந்தன.

தற்போது வைணவக் கோவில்களில் நடைபெறும் பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை வகுத்தவரும் அவரே ஆவார். திருவரங்க கோயில் நிர்வாகம், வைஷ்ணவ மட நிர்வாகம் இரண்டையும் திறம்பட நடத்தினார்.

திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கன் இராமானுசரை உடையவர் என அழைத்தார். திருவரத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிபடுத்தினார்.

 

இராமானுஜரின் சமுதாயத் தொண்டு

ஒரு சமயம் திருவரங்கத்தைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் இராமானுஜருக்கு ஏற்பட்டது. திருவரங்கத்திலிருந்து நீலகிரி காடுகளைச் சென்றடைந்தார். அங்கு நல்லான் சக்கரவர்த்தி என்பவன் அங்குள்ள எல்லாத்தரப்பு மக்களுக்கும் வைணவ மதத்தை கற்று தருவதைப் பார்த்து மெய்சிலிர்த்தார்.

பின் அங்கிருந்து கர்நாடக மாநிலம் சென்றார். செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஏரி அமைத்தார். பக்கத்திலிருந்து நதியிலிருந்து ஏரிக்கு நீர்வர ஏற்பாடு செய்தார் என்ற செய்தி வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.

பின் அங்கிருந்து மேலக்கோட்டை சென்று பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கினார். அவ்விடத்தில் இருந்த அத்வைத்த தத்துவத்தை பின்பற்றுபவர்களை வாதில் வென்று வைணவராக்கினார். இவ்வூரில் இருந்த தாழ்ந்த குலத்தைச் சார்ந்தோரை திருக்குலத்தார் என்று அழைத்து அவர்களுக்கு பூனூல் அணிவித்து வைணவராக்கினார்.

இறை தொண்டும் மக்கள் தொண்டும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த இராமானுஜரைப் போற்றுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“இராமானுஜர் – 1000 ஆண்டுகள்” மீது ஒரு மறுமொழி