இருக்கண்குடி

இருக்கண்குடி சாத்தூருக்குக் கிழக்கில் அர்ச்சுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இரு கங்கைக்குடி என்பதே நாளடைவில் இருக்கண்குடி யாயிற்று என்பர். புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் முன்னர் அர்ச்சுனாநதியும், வைப்பாறு இணைவதால் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆனால் இவ்வூர்க் கல்வெட்டுகளில் ‘இருப்பைக்குடி’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இருநதிகளுக்கும் இடையில் இது அமைந்துள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது. ‘பை’ என்பது நீரோட்டத்தைக் குறிக்கும். ‘இருப்பை’ என்பது இரு நதிகளைக் குறித்து வந்த பெயர் என்று அறிய முடிகின்றது.

நென்மேனியிலுள்ள ஒரு கல்வெட்டு, இவ்வூரை ‘இலுப்பைக்குடி’ என்று குறிக்கிறது. இலுப்பை மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இலுப்பைக்குடியே நாளடைவில் இருப்பைக்குடி ஆயிற்று எனலாம்.

இருக்கண்குடி ஊரின் பழமை 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை இவ்வூரில் கிடைத்துள்ள நுண்கற் கருவிகளால் அறிய முடிகின்றது. இம்மத்திய கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து பெருங்கற்காலப் பண்பாடு நிலவியது என்பதை இவ்வூரில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் முதுமக்கட்டாழிகளின் உடைந்த வாய்ப்பகுதி மற்றும் ஓடுகளின் மூலம் அறியலாம்.

அத்துடன் சங்ககாலத்துக் கல்மணிகளும் இருக்கண்குடி ஊரிலுள்ள கைலாசநாதர் கோயில் அருகிலுள்ள சிறிய குன்றுப் பகுதியில் சேகரிக்கப்பட்டன. மேலும் ரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை அவர்கள் பயன்படுத்திய பானைகளின் ஓடுகள் இங்கு கிடைத்துள்ளமை கொண்டு அறிய முடிகின்றது.

இருக்கண்குடி ஊரில் வரலாற்றுச் சிறப்புடைய சிவன் கோயில் ஒன்றுள்ளது. அது தற்போது சைலாச நாதர் கோயில் என்றழைக்கப்படுகிறது. முற்காலப் பாண்டியர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இருந்த போதிலும், கட்டடக்கலை அமைப்பு மிகப் பிற்காலத்தியதாகத் தெரிகிறது. நென்மேனிக் கல்வெட்டொன்று இக்கைலாசநாதர் கோயிலை ‘நக்கன் கோயில்’ என்று குறிப்பிடுகின்றது. கோயிலின் உட்புறத்தில் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த செப்புத் திருமேனிகள் காணப்படுவதையும் கொண்டு இக்கோயிலின் பழமையை ஒருவாறு அறியலாம்.

ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்தில் சாத்தூப் பகுதியிலிருந்து ‘இருஞ்சோநாட்டை’ ஆண்ட ‘எட்டிச்சாத்தன்;’ என்பவன் இருப்பைக் குடியில் ஒரு சமணப்பள்ளி ஒன்றை எடுப்பித்துள்ளான் என்று ஒரு கல்வொட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டின் வாயிலாக இருக்கண்குடியில் சமணப்பள்ளி இருந்ததையும், 1200 ஆண்டுகளாக வளம் பொருந்திய நகராக இருந்ததையும் அறிய முடிகின்றது.

சடையன் மாறனுடைய 16ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ‘இருப்பைக்குடி கிழவன்’ என்பவன் இவ்வூரிலுள்ள குளத்தைத் தூர்வாரி இடிந்து போன பழைய கரைகளை கருங்கல்லால் கட்டி வலுப்படுத்தினான் என்றும் பின்னர் இக்குளம் அவனது பெயராலேயே ‘கிழவனேரி’ என்றழைக்கப்பட்டது என்றும் கீழ்க்காணும் பாடல் கல்வெட்டால் தெரியவருகிறது.

“கொங்கர் மலர்க்கடம்பு சூட்டாதி கொல்வளையை
எங்கோன் இருப்பைக் குடிக்கிழவன் – பொங்கார்ந்த
தொட்டார் கரும்பிரைக்கும் தென்னீர் வயலிருஞ்சோழ
நாட்டான்றார் சூட்டுதீரென்று”

இதே இருப்பைக்குடிக் கிழவன் என்ற இவ்வதிகாரி திருச்செந்தூர் வரகுணன் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகின்றான். வரகுணன் 1400 பொற்காசுகளை திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆண்டுத் தேவைக்காக வழங்க ஆணையிட்டான். இத்தானத்தை வழங்கிய மூன்று அதிகாரிகளுள் ஒருவனாக இவன் குறிப்பிடப்படுகின்றான்.

இதே போன்று ஸ்ரீவல்லபனின் 18ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றிலும், இருப்பைக்குடிக் கிழவனின் புகழ் விவரித்துக் கூறப்பட்டு உள்ளது. இம்மன்னன் பகைவர்களை குன்னூரிலிருந்து சிங்களம் வரை படை செலுத்தி வெற்றி கண்டுள்ளான். அம்மன்னனே, எட்டிசாத்தன் என்ற இவ்வதிகாரிக்கு இருப்பைக்குடிக்கிழவன் என்னும் சிறப்புப் பெயரினைச் சூட்டினான். இவ்வதிகாரி தன்னுடைய நிருவாகக் காலகட்டத்தில் இருஞ்சோழநாட்டில் பல கோயில்களையும் அம்பலங்களையும் கட்டியுள்ளான். மக்களுக்கு நலம்பயக்கும் பல திட்டங்களை உருவாக்கி மனமகிழ்வு எய்தியிருக்கின்றான். இதனை
“…………………………………
இருஞ்சோழ நன்னாட்டு ளெத்தனையும்
திருத்துவித்தோனிருப்பைக்குடி
கிழவனென
நிலவித்தன்பியர் நிற்பச் சொல்மிக்க
பெரும்புகழொடு மதியமும்
ஞாயிறும் போலப் பதிதோறும்
விளங்குக பாரின் மேலே” – என்று

அக்கல்வெட்டு கூறுகின்றது. சாத்தூர் குளக்கரைக் கல்வெட்டிலும் இருப்பைக்குடிக் கிழவனின் பணி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புடைய இருக்கண்குடி ஊரில் தற்போது ‘மாரியம்மன் கோயில்’ புகழ் பெற்று விளங்குகின்றது. இக்கோயில் தற்போது வழிபாடு செய்கின்றவர்களின் குடும்பத்தார்களால் 260 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆடி மாதத்திலும், தை மாதத்திலும் சிறப்புடைத் திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

இருக்கண்குடி மாரியம்மன் கோயில் இங்கு ஏற்பட்டதற்கான கதை ஒன்று வழிவழியாகக் கூறப்பட்டு வருகின்றது. ‘பூசாரியின் மகள்’ ஒருத்தி சாணம் பொருக்கிச் சேகரித்து வரும் போது அக்கூடையை ஓரிடத்தில் வைத்திருக்கின்றாள். பின்னர் மீண்டும் அக்கூடையை அங்கிருந்து எடுக்க முடியாமல் போயிற்று. அவ்விடத்திலேயே மாரியம்மனுக்குக் கோயில் எடுக்கப்பட வேண்டும் என்று அப்பெண்ணுக்கு அசரீரி கேட்க அதே போல் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.