இங்கு
சொர்க்க வனத்தின் தெற்குப் பகுதியில் ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கியிருக்கிறது.
வாக்டெய்லை தொலைத்துவிட்ட துயரத்தில் இருந்து அவை மெல்ல மீண்டு வருகின்றன. ஆம், அவை தங்களை தாங்களே தேற்றிக் கொண்டிருக்கின்றன. அதனால் குருவிகள் ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பியிருகின்றன என்றே சொல்லலாம்.
ஆயினும், வாக்டெய்லின் அம்மாவோ இன்னும் துயரத்தில் இருந்து மீளவில்லை. அது சரியாக உண்ணுவதில்லை. அதனால் உடல் நலிவுற்றிருந்தது. இதனால் வாக்டெய்லின் அப்பாவும் துயரத்தில் ஆழ்ந்திருந்தது.
இருன்டினிடேவும், மற்ற குருவிகளும் அவ்வப்பொழுது வாக்டெய்லின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி வந்தன.
உடல் ஆரோக்கியமும், மனவலிமையும் குன்றியிருந்த காரணத்தால் வாக்டெய்லின் பெற்றோரை பாதுகாப்பாக தங்க வைத்துவிட்டு, இருன்டினிடே மற்றும் சில மூத்த குருவிகள் மட்டும் வாக்டெய்லை தேடிக் கண்டுபிடிப்பதில் தளராமல் ஈடுபட்டிருந்தன.
தினந்தோறும் இருன்டினிடேவுடன் சில மூத்த குருவிகளும் சொர்க்க வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்டெய்லை தேடின. எனினும் அவற்றால் வாக்டெய்லை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் அன்றும் இருன்டினிடே தலைமையில் சில மூத்த குருவிகள் ஒன்று கூடின.
“ஐயா, வாக்டெய்ல் குட்டிய எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியலையே?”
“உண்மைதான் நண்பா. ஆனா வாக்டெய்ல் ஒரு புத்திசாலி. அதனால், வழி தவறி போனாலும் நம்மள தேட அது முயற்சிக்கும்.”
“ஆனா நாம ஏற்கனவே சொர்க்க வனத்தோட தெற்குப் பகுதியில தங்கப் போறோங்கறது அதுக்கு தெரியுமே. அது ஏன் இன்னும் இந்த திசையில வரல?”
“நீங்க கேட்கறது சரிதான். ஒருவேள வாக்டெய்லுக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம். அதனால அது இன்னும் நம்மள தேடி பயணிக்காம இருக்கலாமே”
“ஐயா நீங்க சொல்ற மாதிரி இருக்கலாம்”.
“சரி நண்பர்களே, இதுவரைக்கும் நாம நேரடியா பல இடங்களுக்கு சென்று பார்த்தோம். இனி வாக்டெய்ல கண்டுபிடிக்க மாற்று வழிய பயன்படுத்தனும்.”
“ஐயா, அந்த மாற்று வழிய சொல்லுங்க, அத கடைபிடிப்பதற்கு தயாரா இருக்கோம்.”
“நன்றி நண்பர்களே. நாம அடுத்த மூன்று நாட்களுக்கு பல இடங்களுக்கும் பயணிச்சு, வழியில பார்க்கற பறவை நண்பர்களிடம் ‘வாக்டெய்ல்’ பற்றி சொல்லுவோம். ஏதாச்சும் தகவல் கிடைக்குதான்னு பார்ப்போம். ஒருவேள அவங்களுக்கு தகவல் தெரியலைனாலும், அவங்க மூலமா நாம வாக்டெய்லை தேடும் செய்தி சொர்க்க வனம் முழுவதும் பரவுமே, அப்போ வாக்டெய்ல் நம்ம கிட்ட சேருவதற்கான வாய்ப்பு அதிகமாகும், இல்லையா?”
“ஐயா, நீங்க சொல்றது சரி தான். அப்படியே செய்வோம்.”
“ஆனா மூணு நாட்களுக்கு பிறகு வாக்டெய்ல தேடும் பணிய நிறுத்திடலாம்.”
“ஐயா, ஏன் மூணு நாட்களுக்கு அப்புறம் தேடும் பணிய நிறுத்தனும்?”
“நண்பர்களே, வாக்டெய்ல் நமக்கு எப்படி முக்கியமோ, அதே அளவுக்கு நீங்களும் நம்ம கூட்டத்துக்கு முக்கியம். நம்ம நெடும் பயணம் முடிஞ்சும், இன்னும் நீங்க ஓய்வு எடுக்கல. தொடர்ந்து வாக்டெய்ல தேட, உங்க குடும்பத்தையும் விட்டுட்டு என்கூட வர்றீங்க. தொடர் பயணமும் புதிய காலநிலையும் உடம்புக்கும் உபாதைகள் தரலாம். அதானல தான் சொல்றேன். மூன்று நாட்களுக்கு பிறகு தேடும் பணிய நிறுத்திடலாம்.”
அதற்கு மறுமொழியாக குருவிகள் எதுவும் கூறவில்லை.
“சரி நண்பர்களே, நாம கிளம்பலாம்” என்று கூறி குருவிகளை அங்கிருந்து அழைத்துச் சென்றது இருன்டினிடே.
அவை கிழக்கு நோக்கி பயணித்தன. வெண்ணிற மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. காற்று சில்லென வீசியது.
இருன்டினிடே தலைமையில் குருவிகள் வேகமாக பறந்து கொண்டிருந்தன. கீழே நிலபரப்பை அவை உற்று நோக்கின.
அங்கு குன்றுகளின் மத்தியில் இரைச்சலுடன் காட்டாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
குருவிகளின் கண்களுக்கு எட்டிய தூரம் வரை அடர்ந்த மரங்களே காட்சி தந்து கொண்டிருந்தன.
இப்பொழுதோ ஸ்வாலோ குருவிகள் சொர்க்க வனத்தின் பிரம்மாண்ட அழகை கண்டு வியந்தபடி பறந்து கொண்டிருந்தன.
சில மணிநேரம் சென்றது.
ஒரு ஓடையின் அருகில் அவை அந்து அமர்ந்தன. அந்த ஓடையின் கரையில் வாத்துக்கள் மற்றும் ஆலாக்கள் ஆங்காங்கே சுற்று திரிந்துக் கொண்டிருந்தன.
“நண்பர்களே அங்கிருக்கும் பறவைகளிடம் விசாரிக்கலாம், வாங்க” என்று சொல்லி குருவிகளை அழைத்து சென்றது இருன்டினிடே.
முதலில், அங்கு நடமாடிக் கொண்டிருந்த ஒரு வாத்தினை குருவிகள் அணுகின. வாத்து சற்று தயங்கியது. வாத்து தலைவரை சந்திக்கும்படி கூறியது. பின்னர் வாத்து தலைவனை இருன்டினிடே உள்ளிட்ட ஸ்வாலோ குருவிகள் தேடிச் சந்தித்தன.
வாக்டெய்லை தேடுவது பற்றி வாத்து தலைவனிடம் எடுத்துரைத்தது இருன்டினிடே.
அதற்கு தாங்களும் அயல் தேசத்தில் இருந்து இங்கு வருவதாகவும், வாக்டெய்ல் பற்றி தகவல் தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு தெரிவிப்பதாகவும் வாத்து தலைவன் கூறியது.
பின்னர் அங்கிருந்த ஆலா பறவைக் கூட்டத்தின் தலைவனை குருவிகள் தேடிச் சென்று சந்தித்தன. விஷயத்தை அறிந்த ஆலா கூட்டத்தின் தலைவன் மிகவும் வருந்தியது.
சொர்க்க வனத்திற்கு தானும் தனது கூட்டமும் பல வருடங்களாக வந்து செல்வதையும், அதனால் பல இடங்களில் அதற்கு நண்பர்கள் இருப்பதையும், இருன்டினிடேவிடம் அது கூறியது.
அந்தவகையில் தனது நட்பு வட்டாரத்தில் சொல்லி வாக்டெய்லை தேடுவதாகவும் உறுதி அளித்தது, ஆலா கூட்டத்தின் தலைவன்.
குருவிகளின் உள்ளித்தில் நம்பிக்கை தோன்றியது. ஆலா கூட்டத்தின் தலைவனுக்கு நன்றிகளை கூறி அங்கிருந்து புறப்பட்டன குருவிகள்.
சிறிது நேரப் பயணித்திற்கு பின்பு மற்றொரு இடத்தில், காக்கைகள் மரத்தின் உச்சிக் கிளைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தன.
காக்கைகளை கண்டதும், வாக்டெய்லை தவறவிட்ட அன்று ஒரு காகத்திடம் பேசியது இருன்டினிடேவிற்கு ஞாபகம் வந்தது.
உடனே, காக்கைகள் அருகில் இருன்டினிடே சென்றது. அதனுடன், மற்ற ஸ்வாலோ குருவிகளும் சென்றன. முதலில், காகங்கள் ஸ்வாலோ குருவிகளை தயக்கத்துடுடன் பார்த்தன.
எனினும் நட்புடன் இருன்டினிடே காகங்களை அணுகவே, அவையும் நட்புடன் ஸ்வாலோ குருவிகளை அணுகின. பின்னர் வாக்டெய்லை தேடுவது குறித்து அவற்றிடம் இருன்டினிடே கூறியது.
காகங்கள் ஸ்வாலோ குருவிகளின் மனஉறுதியையும் அன்பையும் எண்ணி நெகிழ்ந்தன. எப்படியாவது வாக்டெய்லை தேடித் தருவதாகவும் குருவிகளுக்கு அவை வாக்குறுதி கொடுத்தன.
அத்தோடு நில்லாமல், அப்பொழுதே, அருகில் திரிந்துக் கொண்டிருந்த, தேன்சிட்டு, மைனா, கிளி உள்ளிட்ட நண்பர்களுக்கும் இருன்டினிடேவை அறிமுகம் செய்துவைத்து, வாக்டெய்ல் குறித்த செய்தியினை தெரிவித்தன.
ஆச்சரியம் தரும் வகையில் எல்லா பறவையினங்களும் வாக்டெய்லை தேடி தருவதாக இருன்டினிடேவிடம் கூறின.
அப்பறவைகள் காட்டிய அன்பை எண்ணி இருன்டினிடேவும் சககுருவிகளும் வெகுவாய் மகிழ்ந்தன. வாக்டெய்ல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஒளி அவற்றின் உள்ளத்தில் சுடர் விட்டு எரியத் துவங்கியது.
அந்த உற்சகத்தில், மூன்று நாட்களில் சொர்க்க வனத்தின் எட்டுத் திசைகளிலும் இருன்டினிடே தலைமையில் குருவிகள் பறந்து திரிந்து அங்கிருந்த, மரகதப்புறா, அரிவாள் மூக்கன், பூஞ்சிட்டு, கூழைக்கடா, இருவாட்சி, கொண்டைக் குருவி, நீர்க்காகம், பூநாரை மற்றும் வானம்பாடி முதலிய பறவைகளிடம் வாக்டெய்லை பற்றி சொல்லி வைத்தன.
ஏறக்குறைய எல்லா பறவை இனங்களும் வாக்டெய்ல் பற்றிய தகவல் தெரிந்தால் நிச்சயம் தெரிவிப்பதாக உறுதி கொடுத்தன.
வாக்டெய்ல் பற்றிய தகவல் சொர்க்க வனம் முழுவதும் விரைவில் பரவும் என்ற நம்பிக்கை இருன்டிடேவின் உள்ளத்தில் எழுந்தது. அதனால், திட்டமிட்டபடி, வாக்டெய்லை தேடும் பணியை அது நிறுத்தியது.
இதனை அறிந்தவுடன் வாக்டெய்லின் அப்பாவும், அம்மாவும் கலங்கின. சற்று கோபம் அடைந்தன. தாங்கள் மட்டும் வாக்டெய்லை தேடிச் செல்வதாகவும் கூறி அடம் பிடித்தன.
எனினும், இருன்டினிடே நிலைமையை விளக்கி கூறியதை அடுத்து வாக்டெய்லின் அப்பாவும், அம்மாவும் சமாதானம் அடைந்தன. பின்னர் தலைவர் இருன்டினிடே சொல்வது தான் சரி என்று முடிவுக்கு அவை வந்தன.
அதேசமயத்தில் தான் ஏற்கனவே உறுதி அளித்திருந்தபடி, எப்படியாவது வாக்டெய்லை அதன் பெற்றோரிடம் கொண்டுவந்து சேர்த்துவிட வேண்டும் என்று தன் உள்ளத்தில் உறுதி எடுத்துக் கொண்டது இருன்டினிடே.
(பயணம் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?
மறுமொழி இடவும்