துண்டு பட்டுக் கிடந்த பாரத தேசத்தை ஒன்றாக்கிய பெருமை சர்தார் படேலைச் சேரும். அவருக்கு இரும்பு மனிதர் என்று பெயர். அவரது பயங்கரமான கண்களைக் கண்டே, பல அரசர்கள் அவர் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டனர் என்று சொல்லப்படுவதுண்டு.
ஒரு முறை பாகிஸ்தானில் ‘சிந்து’ என்ற கூறப்படும் பகுதியில் ஒரு மதிப்புமிகு காங்கிரஸ்காரர் அரசியல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்து, இந்தியாவிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நம் தேசத் தலைவர்கள் கருதினார்கள்.
பிரதமர் நேரு, இதற்காகத் தன் பிரதிநிதியாக பாகிஸ்தான் பிரதமர் லியாகத்தின் நண்பரான ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினரைத் தேர்ந்தெடுத்து, கராச்சி அனுப்பினார். அங்குச் சென்ற பார்லிமெண்ட் உறுப்பினர் அந்தப் பிரதமரோடு பேசிக் கைதியை விடுவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
சென்ற பார்லிமெண்ட் உறுப்பினரோ, நன்கு வரவேற்கப்பட்டார்; விருந்து உபசாரங்கள் பலமாக இருந்தாலும், சென்ற காரியம் பலிக்கவில்லை. அந்தப் பலர்புகழ் காங்கிரஸ்காரரைக் கண்டிப்பாக விடுதலை செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். லியாகத் அலிகான்; போனவர் வெறுங்கையோடு திரும்பினார்.
இந்தச் செய்தி படேல் காதுகளுக்கு எட்டியது. சென்று தோல்வியோடு திரும்பியவரை அழைத்து, மறுநாள் அதே விமானத்தில், அதே நேரத்தில் மீண்டும் லியாகத் அலிகானிடம் அனுப்பி வைத்தார். “இம்முறை நீர் பிரதமர் நேருவின் பிரதிநிதியாகப் போகவில்லை; என் பிரதிநிதியாகச் செல்கிறீர்; லியாகத்திடம் அந்தக் காங்கிரஸ்காரர் இந்திய எல்லைக்குள் இன்னும் 48 மணி நேரத்திற்குள் காலடி எடுத்து வைக்காவிடில், பாரதத்தில் உள்ள லியாகத்திற்கு வேண்டிய இந்தப் பட்டியலில் உள்ள 12 உறவினர்களும். நண்பர்களும் சுட்டுக் கொல்லப்படுவர்” என்று சொல்லி அனுப்பினார்.
மறுநாள் சர்தார் படேலின் பிரதிநிதி திரும்பும் பொழுது விடுதலை செய்யப்பட்ட காங்கிரஸ்காரரும் பாரதம் வந்து சேர்ந்தார். சர்தார் படேலை உலகம் இரும்பு மனிதர் என்று அழைத்ததற்கும் காரணம் உண்டல்லவா?